நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்ததாக அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் எனச் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 1ஆம் தேதி முதல் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், இன்று (ஜூலை 10) கூடிய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, “தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதாக்களை 19 மாதங்களுக்கு முன்பாகவே மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதை ஏன் தமிழக அரசு மறைத்தது. இதை முன்பே தெரிவித்திருந்தால், மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பியிருக்கலாம். தவறான தகவலைத் தெரிவித்ததற்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வந்துள்ளது. மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
“நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் நான் பதவி விலகத்தயார்” எனத் தெரிவித்த அமைச்சர், “அவ்வாறு உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து இருதரப்பும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் சண்முகத்தின் பதிலில் திருப்தியில்லை எனக் கூறி திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் மசோதா நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, தெளிவான பதிலை சட்டத்துறை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் சொல்லவில்லை. மத்திய அரசின் கடிதம் வந்தவுடனே அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லாமல் மறைத்துவிட்டனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி சண்முகம்.” எனத் தெரிவித்தார்.