மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று (ஜூலை 19) ஈடுபட்டிருந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் திமுக இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. அதில், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திருத்தத்தின்படி, எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வுடன் நாடு முழுவதும் நெக்ஸ்ட் எனப்படும் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்தப்படும் என்றும் அந்த தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கனிமொழி, ஆ.ராசா, திருமாவளவன், திருச்சி சிவா, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெக்ஸ்ட் தேர்வு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்லூரிகளை இயக்குவது மாநில அரசின் உரிமை ஆதலால் அதனை விட்டுத்தரக் கூடாது என்றும் பேசினார். மேலும், மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணை மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நெக்ஸ்ட் தேர்வு தொடர்பாகத் தமிழக அரசின் கருத்தினை மத்திய அரசு கேட்டிருந்தது. அப்போது, இத்தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். அதிமுகவும் இந்த மசோதாவை எதிர்க்கிறது.” எனப் பதில் அளித்தார்.
முன்னதாக, தேசிய அளவிலான நெக்ஸ்ட் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக எம்பியான கனிமொழி நேற்று மக்களவையில் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.