புல்வாமா மற்றும் பாலகோட் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாலகோட்டில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை தங்களின் தேர்தல் வெற்றிக்காக பாஜக அரசு பயன்படுத்திவருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர்.
இதைதொடர்ந்து, ”இந்திய ராணுவம் எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ராணுவம் என்பது பொதுவான அமைப்பு. ராணுவ வீரர்கள் நாட்டை காக்கும் சேவையை செய்துவருகின்றனர். இதை வைத்து அரசியல் பேசக்கூடாது” என்று தேர்தல் ஆணையமும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், லட்டூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 9) தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
லட்டூரில் பேசிய பிரதமர் மோடி, “மக்களவை தேர்தலில் முதன்முறையாக ஓட்டுப் போடப் போகும் வாக்காளர்களிடம் நான் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். பாலகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்காகவும், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்காகவும் உங்கள் ஓட்டு இருக்க வேண்டாமா? “என்று பேசினார். மேலும், தீவிரவாதத்தை அதன் பிறப்பிடத்திலேயே அழிப்பதுதான் புதிய இந்தியாவின் கொள்கை என்று கூறினார் மோடி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகாரை தொடர்ந்து, மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரியிடம் பிரதமரின் பேச்சுக்கு விளக்கம் கேட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய ராணுவத்தை மோடியின் படை எனக் கூறிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.