2019-2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று (ஜூலை 5) தாக்கல் செய்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்று முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்முறையாக தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நிர்மலா சீதாராமன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார்.
பின்னர் மக்களவைக்கு வந்த நிர்மலா சீதாராமன், 2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது உரையாற்றிய அவர், ”புதிய இந்தியாவை உருவாக்க இந்த புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. வரலாற்றிலேயே அதிகமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானது. இளம் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் அதிக அளவில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தேசத்திற்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.” எனத் தெரிவித்தார்.
”தேசப்பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்கிற எண்ணத்தில் மக்கள் தீர்ப்பளித்தனர். கடந்த அரசில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி புதிய இந்தியாவிற்கு அடித்தளமிட்டது. சீரமைப்பு, செயல்பாடு மற்றும் மாற்றம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தேசத்தை மத்திய அரசு வழிநடத்திச் செல்வதை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.” என்று பேசினார் நிதியமைச்சர்.
மேலும் பேசிய அவர், “கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவது என்பது சாத்தியமானது. 1.8 லட்சம் கோடி டாலர் என்கிற மதிப்பிலிருந்து 2.7 லட்சம் கோடி டாலாராக இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும்.
உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தற்போது திகழ்ந்து வருகிறது. வளர்ச்சியை உறுதிப்படுத்தச் சீரமைப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டியுள்ளது. 3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும். சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு அதிகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
சாமான்ய மக்களின் நலனை கருத்தில் கொண்டே மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது. மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் சாமான்ய மனிதனின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது.” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் உரையாற்றிய பின்னர், பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார்.