ரஷ்வியாவிடம் இருந்து வாங்ப்பட்ட மிக்-21 ரக போர் விமானங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில், பல்வேறு சேவைகள் மற்றும் மேம்பாடுகள் செய்யப்பட்டு இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல்
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று இந்திய ராணுவ வீரர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் கடந்த 26ஆம் தேதி பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை குண்டு வீசி தகர்த்தது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பாலாகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம்கள் மீது, 12 மிரேஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் சென்ற இந்திய ராணுவம், 1,000 கிலோ அளவிலான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் முகாம்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் முழுவதுமாக தகர்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எப்–16 – மிக்–21
இதைதொடர்ந்து, கடந்த 27 தேதியன்று பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவில், ஊடுருவ முயன்றபோது, இந்திய விமானப் படைகள் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்தனர். அப்போது, பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை மிக்-21 ரக போர் விமானத்தில் துரத்திச் சென்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அமெரிக்கத் தயாரிப்பான எப்-16 ரக போர் விமானம் அதி நவீன தொழில்நுட்பம் கொண்டது. இந்தியாவின் மிக்-21 விமானத்தைக் காட்டிலும் அதிகமான வசதிகள், நவீன தொழில்நுட்பங்கள் கொண்டது. அந்த விமானத்தை மிக்-21 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
மிக்-21 ரக போர் விமானங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில், பல்வேறு சேவைகள் மற்றும் மேம்பாடுகள் செய்யப்பட்டு இந்திய விமானப்படையில் இந்த ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதுவரை 1,200 மிக்-21 விமானங்கள் விமானப் படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
”பயங்கரவாத முகாம்களில் எத்தனை பேர் இருந்தனர். அதில், இறந்தது எவ்வளவு பேர் என கணக்கிட முடியாது என்று தெரிவித்த விமானப்படை தளபதி தனோவா, நவீனப்படுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தானின் F-16க்கு எதிராக இந்தியாவின் மிக்-21 போர் விமானம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
மிக்-21: உயிரிழப்பு அதிகம்
1966ஆம் ஆண்டு ரஷ்வியாவிடம் இருந்து மிக்-21 ரக போர் விமானங்களை இந்தியா வாங்கியது. கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் இந்த ரக போர் விமானங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்திய விமான விபத்துகளில் நான்கில் ஒரு பங்கு மிக்-21 ரக விமானங்களில்தான் நடக்கிறது. ஏப்ரல் 2012ஆம் ஆண்டு மிக் 21 ரக விமானத்தில் நடந்த விபத்தில் 28 இந்திய விமானிகள் பலியாகினர்.
1971ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2012ஆம் ஆண்டு வரை மிக்-21 ரக விமான விபத்துகளில் 171 விமானிகளும், 39 பொதுமக்களும், 8 விமான சேவை ஆட்களும் பலியானதாகக் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்றத்தில் அப்போதைய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.அந்தோணி தெரிவித்திருந்தார். மேலும், இந்த விபத்துக்களால் மிக்-21 விமானங்கள் எண்ணிக்கை 872 எனப் பாதியாகக் குறைந்து வீணாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பறக்கும் சவப்பெட்டி
இந்திய விமானப் படையிலுள்ள ஃபைட்டர் ஜெட் விமானங்களை விட மிக்-21 ரக போர் விமானத்தால் பல திறமை வாய்ந்த போர் விமானிகளும், பொதுமக்களும் அதிகளவு உயிரிழந்துள்ளனர். 1966ஆம் ஆண்டிலிருந்து தலைசிறந்த விமானமாகக் கருதப்பட்ட மிக் 21, காலத்திற்கு ஏற்ப மாறவில்லை. பழமையான தொழில்நுட்பம் காரணமாக மிக் 21 வகை போர் விமானம் அடிக்கடி விபத்துக்களில் சிக்கின. மிக்-21 போர் விமானத்தால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதால், ’பறக்கும் சவப்பெட்டி’ அல்லது ‘விதவை’ தயாரிப்பாளர் என்று அவ்விமானம் அழைக்கப்படுகிறது.
சிறிய நாடுகளின் பயன்பாட்டில் மட்டுமே உள்ள மிக்-21 விமான தயாரிப்பை ரஷ்யா 1985ஆம் ஆண்டு நிறுத்திவிட்டது. 2019 ஜனவரி 1ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசு அளித்த தகவலின்படி, இந்திய விமானப் படையில் தற்போது 31 படைப் பிரிவுகளில் மிக் 21 போர் விமானப் பயன்பாடு நடைமுறையில் உள்ளது.
மிக்-21 ரக விமானங்களின் கோளாறுகளை கார்கில் போருக்குப் பின் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கருத்தில் கொண்டு, மிக்-21 விமானத்திற்கு ஈடாக வேறுவகை போர் விமானங்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது. முடிவு எடுக்கப்பட்டு 19 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்த நிலையில், தற்போதுள்ள மோடி ஆட்சியில் ரஃபேல் ரக போர் விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது.