தில்லி நிஸாமுதீனில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வைத்து நடத்தப்பட்ட தப்லீகி ஜமாத் மதக் கூட்டம் ஒட்டுமொத்த கொரோனா விவாதத்தையே திசை மாற்றிவிட்டது. ’தப்லீகி ஜமாத் செய்தது கொடிய குற்றம், அவர்கள் தாலிபான்கள் போன்றவர்கள்’ என திட்டுகிறார் பி.ஜே.பியின் மத அரவணைப்பு முகமூடியான முக்தார் அப்பாஸ் நக்வி. கடந்த பல நாட்களாக அனைத்து நாளிதழ்களின் பேனர் நியூஸ் இதுதான். டிவிக்களின் தலைப்புச் செய்தி இதுதான். அவர்கள் செய்தது தவறு, அதை எந்த வகையிலும் ஆதரிக்காதீர்கள் என்று சில நடுநிலையாளர்கள் ஆவேசப்படுகிறார்கள். எல்லா நடுநிலையாளர்களும் அதைக் கண்டிக்க வேண்டும் என அவர் அழைக்கிறார். உண்மைகளின் அடிப்படையில் அல்லாமல் உணர்வுகள், நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு பிரச்சனையை புரிந்துகொள்ள முயலும் பின்மெய்யியல் (post-truth) காலத்தின் கோலம் இது.
தப்லீகி ஜமாத் ஒரு அடிப்படைவாத அமைப்பு என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தியாவை ஆளும் பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங் தள் சங் பரிவார அமைப்புகள் போல அது வெறுப்பு அரசியலை பரப்பும் இயக்கம் அல்ல. தப்லீகி ஜமாத்திற்கு இருப்பது அமைப்புரீதியான பலம், உலகின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் நிதி பலம். ஆனால் பி.ஜே.பி நேரடியாகக ஆட்சியில் அமர்ந்திருக்கிருக்கிறது. இந்தியாவின் பல லட்சம் ராணு வீரர்களும் போலீஸ்காரர்களும் அரசு இயந்திரமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அந்த பி.ஜே.பியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு பக்கம் தப்லீகி ஜமாத் செய்த இப்படி ஒரு தவறையும் மறு பக்கம் அந்த அமைப்பின் மத அடிப்படைவாதத்திற்கு நேர் எதிர் நிற்கும் இந்து வலதுசாரி கட்சியின் நிர்வாகத்திற்குமான முரண்பாட்டில் நீங்கள் எதன் பக்கம் நிற்பீர்கள்.
வேறு சாட்சியங்கள் வேண்டாம். ஊடகங்களே சாட்சி. தப்லீகி ஜமாத் கூட்டம் மார்ச் 15 வாக்கில் நடக்கிறது. அப்போது ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. தில்லியில் பெரிய மதக் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்று ஒரு வழிகாட்டுதல் மட்டும் விடுக்கப்பட்டிருந்தது. அதையும் தப்லீகி ஜமாத் மதித்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மார்ச் 25ஆம் தேதி, அதாவது தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பல நாட்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமர் சிலையை வேறு இடத்திற்கு நடத்தும் அரசு விழா நடத்தப்படுகிறது.
ஊரடங்கு விதிக்கப்பட்ட 21ஆம் தேதிக்கிப் பிறகு ஒரு பி.ஜே.பி முதல்வரே அதை மீறுகிறார். அதைப் பற்றிய தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியில் ஒரு சில மூத்த தலைவர்கள் பங்கேற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் மொத்தம் 50 பேர் அதில் கலந்துகொண்டதாக மற்ற ஊடகங்களின் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. மக்கள் கூடுகையும் கூடாது என்றும் குறிப்பாக மதக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் கூறிய பிறகும் இது நடந்தது என்பது பற்றிய சிறு தகவலோ, குறிப்போ அந்தக் கட்டுரையில் இல்லை. ஆனால் அதே குழுமத்திலிருந்து வரும் எகனாமிக் டைம்ஸ் சமூக இடைவெளி சார்ந்த பல அரசின் விதிகள் மீறப்பட்டதாக விமர்சித்து செய்தி வெளியிட்டது. அதன் தொனி சற்று கடுமையாக இருந்தது என்றாலும் இந்த விதிமீறல் பேனர் செய்தியாக வெளியிடப்படவில்லை. ஒரு சிறு ஆறுதலாக தி இந்து நாளிதழ் தப்லீகி ஜமாத் கூட்டத்தை வைத்து இந்தக் கொடிய கிருமியின் தாக்குதலை வகுப்புவாத பார்வையில் திருப்பக்கூடாது என தலையங்கம் எழுதியது.
தப்லீகி ஜமாத் மட்டுமல்ல, மத அடிப்படைவாதத்தில் ஊறிய அனைவரும் ஏதோ ஒரு வகையில் கொரோனோ எதிர்வினைவில் சொதப்புகிறார்கள். அயோத்தியில் காவி உடை அணிந்த இந்துத்துவ முதல்வரே தடையை மீறுகிறார். அந்த விழாவில் தங்களுக்கு இடமில்லை என காங்கிரஸ், ஆம் ஆத்மி மிதவாத இந்துத்துவாளர்கள் கவலைப்படும் அளவுக்கு அது ஒரு அரசியல் கூட்டமாக நடத்தப்படுகிறது. ராம நவமியை நடத்தியே தீர்வோம் என அடம் பிடித்து பிறகு அடங்குகிறார்கள் ஞாயிறு பூசை வைக்க வேண்டும் என அடம் பிடிக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றி கேள்விப்படுகிறோம். “கடவுள் காப்பாற்றுவார்” என்ற அடிப்படைவாத நம்பிக்கையிலிருந்து உருவாகும் நிலை இது. எந்த மதமும் விதிவிலக்கல்ல. ஆனால் மார்ச் 21 ஊரடங்கிற்கு ஒரு வாரம் முன்பே துவங்கிவிட்ட தப்லீகி ஜமாத் கூட்டத்தை வைத்து, “கொரோனா பரவுவதற்கே முஸ்லிம்கள்தான் காரணம்” என்று உருவாக்க நினைக்கும் சித்திரத்திற்கு எதிராகப் போராடுவதுதான் நமது இன்றைய கடமை.
தப்லீகி ஜமாத் ஜமாத் செய்தியை முதல் பக்க பேனர் செய்தியாக வெளியிட்ட தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்கள், அது பற்றிய வரலாற்று அறிஞர்கள், மிதவாத சூஃபி அறிஞர்கள் கூறியதை எல்லாம் ஒரு மூலையில் சிறிய செய்தியாக வெளியிடுகிறது. தப்லீகி ஜமாத் போல பல நாடுகளிலிருந்து வந்து, பல நாள் ஒரே இடத்தில் இருந்த எந்த பெரிய கூட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்தாலும் இவ்வாறு அதிக கொரோனா பாஸிட்டிவ் கிடைக்கும் என அவர்கள் தர்க்கபூர்வமாக கத்துவதெல்லாம் முதல் பக்க பேனர் செய்தி அல்ல. மாறாக, ஒரு உடல்நல, சுகாதார பிரச்சனையை தேசிய பாதுகாப்பு ஆலோசகரை வைத்து சமரசம் (!!!) செய்து முடிப்பது முதல் பக்கத்தில் வெறும் நேரடி செய்தியாக இடம் பெறும்.
கொரோனா பரவத் தொடங்கியது முதல் உண்மைக்கு நாங்களே சொந்தக்காரர்கள், டிஜிட்டல் ஊடகங்கள் வெறுமனே பொய்களையும் அரை உண்மைகளையுமெ சொல்லுகின்றன என பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் அதில் முன்னணியில் உள்ளது. முழுத்த உறுதி செய்யப்பட்ட செய்திகள் மட்டுமே வழங்கப்படும் என தங்களது கிடைச் சொந்த ஊடகங்களான (cross media ownership) மூவிஸ் நவ் போன்ற சேனல்களில் அறநெறியற்று விளம்பரம் செய்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு தப்லீகி ஜமாத் (அதாவது முஸ்லிம்கள்) காரணம் என்ற சித்திரத்தை உருவாக்கிய தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களின் முதல் பக்க பேனர் செய்திகள் ஒரு பக்கம். உள்ளே அதே நாளிதழ்களின் தலையங்கத்தில் சுற்றி வளைத்து கடைசி பத்தியில் சொல்கிறார்கள்: டாக்டர்களுக்கு போதுமான மருத்துவ உபகரணங்கள் கிடைக்கவில்லை, பெருமளவில் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அது தலையங்கம் அல்ல. விமர்சனம் அல்ல. மயிலிறகால் வறுடிக் கொடுக்கும் செல்லம் கொஞ்சல்கள். இந்த அழகில் அவர்கள் டிஜிட்டல் ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் பொய் மூட்டை என கிண்டல் செய்கிறார்கள். எனக்கு பொய் மூட்டைகளே தேவலாம் போலிருக்கிறது.
இன்றைய பின் மெய்யியல் உலகில் எனக்கு வெறும் செய்திகள் தேவையில்லை. அதன் பல்வேறு கோணங்களை வழங்கும் கட்டுரைகளே தேவை. அதை நான் thewire.in, theprint.in, scroll.in, quint.com போன்ற இணைய தளங்களில் காண்கிறேன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களில் அல்ல. தில்லி, மும்பை போன்ற மையங்களில் தலைமையைக் கொண்ட ஊடகங்கள் மத்திய பி.ஜே.பி அரசின் ஊதுகுழலாக மாறி பல காலமாகிறது. தி இந்து போன்ற நாளிதழ்கள் அத்தகைய மைய நீரோட்டத்தில் விலகி இருப்பதாலும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்றவற்றின் சவால்களை சமாளிப்பதற்கு தாங்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக ஆட்சியமைப்பின் விமர்சகர்கள் (anti-establishment) என்ற பத்திரிகை நெறியை பின்பற்றுகிறார்களோ என தோன்றுகிறது. தினத் தந்தி போன்ற நாளிதழ்கள்கூட தில்லி, மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஊடகங்களைவிட கூடுதல் இதழியல் தர்மத்துடன் இயங்குவது போல் தெரிகிறது. பி.ஜே.பியின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக மாறிவிட்ட மற்ற இரு நாளிதழ்கள் பற்றியோ, கிடைச் சொந்த ஊடக உரிமையைக் கொண்ட மற்றொரு நாளிதழ் பற்றியோ பேச ஒன்றுமில்லை.
சமூக ஊடகங்களில் துல்லியமற்ற செய்திகளும் பொய்களும் பரவுகின்றன என்பது உண்மையே. ஆனால் அதே சமூக ஊடகங்களில் நமது சமூகத்தின் சிறந்த ஆளுமைகள், விஷயம் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய பல்வேறு கோணங்களிலான பார்வைகள் மூலம் நமக்கான தனித்துவமான பார்வையை உருவாக்கிக்கொள்வதுதான் இந்த டிஜிட்டல் யுகத்தில் தேவை. அந்த வகையில், மதவாத அரசின் ஊதுகுழலாக மாறி, ஒரு மதப் பிரிவினரை வில்லனாக மாற்ற நினைக்கும் மைய நீரோட்ட ஊடகங்களைவிட டிஜிட்டல் ஊடகங்களையே நான் தேர்ந்தெடுக்கிறேன். குறைந்தட்சம் பொய்களின் நதியில் நீந்தி, உண்மையைக் கண்டடைய முடியும் என்ற நம்பிக்கை டிஜிட்டல் ஊடகங்களில்தான் காண முடிகிறது.