உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் முன்னாள் கடற்படை தலைமை அதிகாரி எல்.ராம்தாஸ். இந்திய ராணுவத்தை மோடியின் படை எனக் கூறிய யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“இந்திய ராணுவம் எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ராணுவ வீரர்கள் நாட்டை காக்கும் சேவையை செய்துவருகின்றனர். யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சால் பல வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஆயுதப் படைகளின் முன்னாள் மூத்த தலைவர்களில் ஒருவராக, நான் எனது கடமை மற்றும் பொறுப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் அரசியலமைப்பிற்கு மட்டுமே எங்களின் (ஆயுதப்படைகளின்) விசுவாசம் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.”
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் தொகுதியில் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ராம்லீலா மைதானத்தில் பிரசாரம் செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். எப்போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசிவருபவர் யோகி ஆதித்யநாத். அந்தவகையில் இந்திய ராணுவத்தை மோடியின் படையின் படை எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
“கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். இப்படியொரு தாக்குதலை இதுவரை நடத்தியதில்லை. இந்திய ராணுவம் மோடிஜியின் படை. அவர்கள் எதிரிகளுக்கு அதிரடியாக பதிலளிக்கிறார்கள்.” என்று பேசியிருந்தார் யோகி ஆதித்யநாத். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இது குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் கேட்டுத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், யோகி ஆதித்யநாத் காசியாபாத்தில் பேசிய சர்ச்சைக்குரிய உரையின் முழுதொகுப்பையும் சமர்ப்பிக்குமாறு, அந்த மாவட்ட ஆட்சியருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.