கடந்த 2016ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையொப்பமிட்டது. இதன்படி கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் ரபேல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவுக்குக் கிடைத்துவிடும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ரபேல் போர் விமானங்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயித்த விலையைவிடப் பலமடங்கு அதிக விலைக்கு வாங்கப்படுவதாகவும் மத்திய அரசு நிறுவனமான ஹெச்ஏஎல்க்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸுக்கு வழங்கியிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி புகார் கூறியது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்தபோது, தனியாக பிரதமர் அலுவலகத்திலும் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. “ரபேல் போர் விமானங்களை வாங்குவதில் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான்.” என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிஷாந்த் பூஷன் ஆகியோர் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் உச்ச நீதிமன்றம் ரபேல் ஒப்பந்தம் குறைந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
இவர்களுடைய மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கடந்த மே 10ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று(14.11.2019) இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு மத்திய அரசின் ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது