காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கு அடிப்படை ஆதாரமற்றது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை உள்ளதாகவும், அவர் ஒரு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளதாகவும் பாஜக எம்.பி சுப்பிரமணிய சாமி மத்திய உள்துறை அமைச்சகத்திற்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக 15 நாட்களுக்குள் ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
குடியுரிமை தொடர்பான புகார் குறித்த விசாரணை நடைபெற்றுவருவதால், மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா, நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே 9) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”இங்கிலாந்தில் உள்ள ஏதோ ஒரு சிறிய நிறுவனம் ராகுல் காந்தி அந்நாட்டு குடியுரிமை பெற்றவர் என கூறுவதை நீதிமன்றம் எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கான ஆதாரமும் மனுதாரர் தரப்பில் அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், இதுதொடர்பாக இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இருநாட்டு ஆவணங்களும் இருப்பதாக மனுதாரர் தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட புகார் அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்தனர்.
எனவே, அடிப்படை ஆதாரமற்ற புகாரை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் தடைவிதிக்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.