வறுமைக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த வேண்டும் எனத் தான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
2019 நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்று முடிந்தது. இதில் 65 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைச் செய்துவருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கடந்த மாதம் 13ஆம் தேதி தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஒரு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார் ராகுல் காந்தி.
இன்று காலை விமானம் மூலம் கிருஷ்ணகிரிக்கு வந்த ராகுல் காந்தி,
கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேவராஜ் மஹால் அருகே அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுக்கூட்ட மேடையில் பேசிய ராகுல், “தமிழக மக்களின் குரல் மத்தியில் ஒலிக்க வேண்டும். தமிழகம் தமிழரால் ஆளப்படும். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்.” என்று பேசினார்.
“நீட் தேர்வு தேவையா? தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவுசெய்ய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருக்கிறோம். அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களின் குரலைக் கேட்கிறோம்; கருத்துப் பரிமாற்றங்களைக் கேட்கிறோம்.” என்று சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
”நாட்டில் உள்ள 20% ஏழைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72000 கிடைப்பது உறுதிசெய்யப்படும். மத்திய அரசு அலுவலக பணிகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்வோம். கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளார். காலியாக இருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஆதரவு சொல்லக்கூட பிரதமருக்கு மனமில்லை; விவசாயிகளை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்பதற்குக்கூட பிரதமருக்கு நேரமில்லை; பிரதமர் மோடி, ஏழைகளோடு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தைக்கூட பார்த்திருக்க முடியாது.” என்று மோடியை குற்றம்சாட்டினார் ராகுல் காந்தி.
மேலும், சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கலைஞர் கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல; தமிழர்களின் ஓங்கி ஒலித்த குரலாக இருந்தவர். தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியதன் மூலம், தமிழர்களையே அவமானப்படுத்தியதாக எண்ணுகிறேன்.” எனத் தெரிவித்தார்.
சேலத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஏழைத் தாயின் மகனின் ஆட்சியில், விஜய் மல்லையா, நிரவ் மோடி கோடி கோடியாக கொள்ளையடித்து செல்கின்றனர். பிரதமராக இருக்க கூடிய மோடி காவலாளி அல்ல களவாணி. பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ: காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. திராவிட இயக்கத்தின் எண்ணங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டுகிறார் ராகுல் காந்தி. இறுதியாக இன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.