அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுஷீன் மோகன் குப்தாவின் ஜாமீன் மனுவைத் திங்கள்கிழமை அமலாக்கத் துறை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், அவரும் மற்ற 36 தொழிலதிபர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியதைப் போல வெளியேறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கூறியது.
அமலாக்கத் துறை விஜய் மல்லைய்யா, நீரவ் மோடி உள்ளிட்ட குற்ற வழக்குள்ள 36 தொழிலதிபர்கள், சமீப காலமாக நாட்டை விட்டு தப்பியோடியதாகச் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமாரிடம் தெரிவித்தது.
“நான் இந்தியாவில் வேரூன்றி இருக்கிறேன் அப்படி நாட்டை விட்டு ஓடமாட்டேன்” என்ற குப்தாவின் வாதத்தை அமலாக்கத் துறையின் சிறப்பு பொது வழக்கறிஞர்கள் D.P. சிங் மற்றும் N.K மாட்டா எதிர்த்தனர். இதே போலத்தான் “மல்லையா, லலித் மோடி, நிரோவ் மோடி, மெஹுல் சோக்ஸி மற்றும் சந்தேசரா சகோதரர்கள் (ஸ்டெர்லிங் பையோடெக் லிமிட்டெட்) போன்றவர்கள் தனக்கும் இந்திய சமூகத்தில் ஆழமான வேர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் இன்று இந்தியாவிலேயே இல்லை” என்றனர்.
விவாதத்தின்போது அமலாக்கத் துறையின் வழக்கறிஞர் சம்வேத்ன வர்மா, “வழக்கு தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. எங்கள் துறை குப்தாவின் டைரியில் “ஆர்ஜி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது யார் என்று விசாரித்து வருகிறோம். மேலும் இப்போ குப்தவிற்கு ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளைக் கலைத்து விசாரணையின் போக்கை மாற்றி விடுவார். என்று வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிமன்றம் ஏப்ரல் 20 ம் தேதி குப்தாவின் ஜாமீன் மனுமீதான தீர்ப்பை ஒதுக்கியது.
விசாரணையில் இருக்கும் குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பி ஓடியதாகச் சொன்ன அமலாக்கத் துறையின் இந்த ஒப்புதல் முதன்முறை அல்ல. ஆனால் வருங்காலத்தில் இது போன்ற வழக்குகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையின் இந்தப் பகிரங்க ஒப்புதல் சமூக வலைத்தளங்களில் பெரும் நகைப்புக்குரியதாக உலா வருகிறது. குறிப்பாக மோடியின் சௌக்கிதார் முழக்கங்களைக் குறிவைத்து.
“விஜய் மல்லையா, லலித் மோடி, நிரோவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் சந்தேசரா சகோதரர்கள் உட்பட 36 தொழிலதிபர்கள் கடந்த சில வருடங்களாக நமது சௌக்கிதார் (காவலன்) பார்வையிலிருந்து தப்பியோடி உள்ளனர். நமது சௌக்கிதார் காவல் காக்கிறாரா அல்லது டிராவல் ஏஜன்சி நடத்துகிறாரா?” என்று பிரசாந்த் பூஷண் டிவீட் செய்திருக்கிறார்.
வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மோடியின் ஆட்சியில் மக்கள் பணத்தை அபகரித்தவர்கள் மிகச் சௌகரியமாக நடத்தப்படுகிறார்கள். சட்டத்திலிருந்தும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மோடி மக்களிடம் சொல்வது “கருப்பு பணத்தை மீட்டுக் தருவேன் ஏனெனில் நான் உங்கள் பாதுகாவலன்!”