விஜய் ஏன் மிரட்டப்படுகிறார் என்ற கேள்விக்கு இருட்டு அறையில் முரட்டுக்குத்துகளாக மனம்போன போக்கில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏன் இந்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்பதற்கான தர்க்கரீதியான காரணங்கள் எங்கும் வைக்கப்படவில்லை.
நடிகர் விஜய்யை அரசியலுக்கு கொண்டுவர பா.ஜ.க நிர்பதிக்கிறது என நேற்று எழுதியிருந்தேன். அது இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. விஜய்யின் படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலி என் எல் சி முன்பாக இன்று பா.ஜ.கவினர் படப்பிடிப்பு நடத்தவிடக்கூடாது என ஆர்பார்ட்டம் செய்திருக்கின்றனர். இந்த ஆர்பாட்டத்ற்கு ஏதேனும் அடிப்படை ஏதேனும் இருக்கிறதா?
தமிழக அமைச்சர்கள் வீடுகளிலேயே வருமானவரி சோதனைகள் நடந்திருக்கின்றன. தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. பல நடிகர்கள், தொழில் நிறுவனங்கள் இடங்களில் நடந்திருக்கின்றன. சசிகலா தொடர்புடைய இடங்களில் நடந்திருக்கின்றன. ஆனால் எப்போதாவது ஒரு வருமானவரி சோதனையை முன்னிட்டு பா.ஜ,க ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறதா? அர்ஜின் சம்பத் போன்றவர்கள் விஜய்யின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற அளவு செல்கிறார்கள்.
வருமானவரி தொடர்பான குற்றசாட்டுகள் கிரிமினல் நடவடிக்கைகள் அல்ல. வருமானவரி கட்டுவதில் முறைகேடுகள் இருந்தால் அதை அபராதத்துடன் கட்டச் சொல்வார்கள். கட்டாதபோது சொத்துகளை பறிமுதல் செய்வார்கள். ஆனால் விஜய் மீது ஏன் இந்த ஆத்திரம்? இது உண்மையான ஆத்திரம்தானா?
இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, அரசியலில் ரஜினிக்கு போட்டியாக விஜய் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு களங்கம் கற்பிக்க இது நடக்கிறது என்று. ஒரு வருமானவரி வழக்கு பல ஆண்டுகள் நடக்ககூடியது. சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட ரஜினி மீதான வழக்கே உதாரணம். மேலும் ரஜினி இன்னும் கட்சிகூட ஆரம்பிக்கவில்லை. விஜய் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கவில்லை. எனவே இந்த வாதம் மிகவும் அபத்தமானது.
இரண்டு, ஃபைனன்சியர் அன்பு செழியன்தான் முதன்மை இலக்கு, அவர் அதிமுக அமைச்சர்களின் பினாமி. அவர்களை மிரட்டவே இந்த ரெய்டு என்றொரு வாதம். அதிமுகவை புதிதாக மிரட்ட என்ன இருக்கிறது? மொத்த கட்சியும் அரசும் பா.ஜ,க வசம் இருக்கிறது. அன்புச் செழியன் வழியே விஜய்யை மடக்கி அப்புறம் அதிமுக அமைச்சர்களை மடக்கவேண்டிய அவசியமே இல்லை.
இந்த வருமானவரி சோதனையையாவது வழக்கமான நடவடிக்கை என்று சமாளித்தவர்களால் பா.ஜ.க நெய்வேலியில் இன்று விஜய்யின் படப்பிடிப்புத்தளத்தில் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ( மொத்தம் 10 பேர்) நியாயபடுத்தமுடியவில்லை. இந்த ஆர்ப்பாட்டதிற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள்மேல் காவல்துறை தடியடி நடத்துகிறது.
இப்போது விஜய்மீது கட்டப்படும் பிம்பம் என்ன? அவரை பா.ஜ.க துன்புறுத்துகிறது என்ற அனுதாப பிம்பம். அதன்காரணமாக பா.ஜ.க எதிர்பு மனநிலை கொண்டவர்களில் ஒரு பகுதியினர் விஜய் பக்கம் சாயவேண்டும் என்பதுதான். படப்பிடிப்புத்தளத்திலிருந்து விசாரணைக்கு அவரை பலவந்தமாக அழைத்துச் சென்றதிலிருந்து இந்த ஆர்பாட்டம்வரை ஒவ்வொரு சம்பவமும் இதையே நோக்கமாகக்கொண்டிருக்கிறது. விஜய்யை ஒரு தியாக்கியானால்தான் தலைவனாக்க முடியும் என பா.ஜ.கவிற்குத் தெரியும். விஜய்யை நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலுக்கு நிர்பந்திக்கும் முயற்சி இது. இந்த விவகாரத்தை ஊடகங்களின் இன்னொரு நாள் உயிரோடு வைத்திருக்கவும் இந்த ஆர்பாட்டம் பா.ஜ.கவால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கமல் – ரஜினி- விஜய் என்ற மூன்று தாக்குதல்களின்மூலம் தமிழகத்தின் திராவிட வாக்கு வங்கியை சிதறடிப்பதற்கான திட்டம் ஊடகங்களின் துணியுடன் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.
மற்றபடி ஒவ்வொரு வருமானவரி சோதனைக்குப்பிறகும் நடக்கும் பேரங்கள் என்பது தனிக்கதை. அது சிலசமயம் பெருந்தொகையான பணம். சில சமயம் அரசியல் உடன்படிக்கைகள்.