இன்று மாலை(26.2.2020) தனது வீட்டைவிட்டு வெளியே வந்த ரஜினி, அதிரடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து தான், சொல்லவேண்டிய அதாவது அவருக்குச் சொல்லிக்கொடுத்த டைலாக்குகளை அப்படியே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
“டெல்லியில் நடைபெற்ற போராட்டம், மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது. மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். கலவரத்தை இரும்பு கரம்கொண்டு அடக்கி இருக்க வேண்டும். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறாது எனக் கருதுகிறேன். இதுபோன்ற போராட்டங்களை ஆரம்பத்திலேயே மத்திய, மாநில அரசுகள் கிள்ளி எறிய வேண்டும். அமைதியாகப் போராட்டம் நடத்தலாம். ஆனால் வன்முறைக்கு இடம் கொடுக்கக்கூடாது..” என்று வந்த வேகத்தில் சரியாக ஐந்து நிமிடம் டைலாக்குகளை ஒப்பித்து விட்டு சென்றிருக்கிறார்.
பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்காவிட்டாலும் ரஜினியிடமிருந்து இதே தகவல்கள்தான் கிடைத்திருக்கும்.
ரஜினியின் பேட்டியின்மூலம் சில விஷயங்கள் தெளிவாகப் புரிகிறது, “இனிமேல் என்ன போராட்டம் செய்தாலும் அவர்கள் அதைத் திரும்ப பெறப்போவதில்லை. அதாவது நாங்கள் இனி எங்கள் முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதை ரஜினியின் மூலமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
“இது அதிகபட்சமாக போய்க்கொண்டிருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்” என்கிறார். எதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்கிறார் என்று தெரியவில்லை. அதேபோல “மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற போராட்டங்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடவிருக்கும் மக்களை அதாவது மாநிலங்களை முறையான கண்காணிப்பு மூலமாக ஆரம்பத்திலேயே போராட்டங்கள் நடக்காமல் தடுங்கள் என்று மறைமுகமாகச் சொல்கிறாரா என்று புரியவில்லை. “அமைதி வழியில் போராடாலாம் ஆனால் வன்முறையில் ஈடுபடக்கூடாது” என சொல்கிறார். கிட்டத்தட்ட 70 நாட்களாக அமைதியாக நடந்த போராட்டத்தில் யார் வன்முறை செய்திருப்பார்கள் என்று ரஜினிக்கு தெரியாமல் இல்லை, ஆனால் அவர் இங்கே வன்முறையாளர் என்று யாரை சித்திரக்க முயல்கிறார் என்பதுதான் கேள்வி, அதேபோல போராட்டம் எந்தவழியிலும் தீர்வாகாது என்கிறார். அவர் ஏற்கனவே சொன்ன ஸ்டெட்மெண்ட்தான் என்றாலும் இந்தமுறை கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவர்மீதிருந்த இத்தனை நாள் சந்தேகத்தை அவரே தெளிவுபடுத்திவிட்டார், “சில மூத்த பத்திரிகையாளர், சில மூத்த அரசியல் விமர்சகர்கள் என்னை பாஜகவின் ஊதுகோல், பாஜகவின் கைகூலின்னு சொல்றாங்க. எனக்கு வேதனையாக இருக்கிறது. நா என்ன உண்மையோ அதைத்தான் சொல்கிறேன்” என்கிறார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தங்கள் உரிமைக்காக வீதிக்குவந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க சொல்கிறீர்கள், நீங்கள் தப்பிதவறியும் கூட மோடியின் பெயரையோ அமித் ஷாவின் பெயரையோ சொல்லிவிடாதீர்கள், ஏனென்றால் அது ஸ்கிரிப்டில் இல்லாமல் இருக்கலாம். நாங்கள் நம்மிவிட்டோம் ரஜினிகாந்த அவர்களே, நீங்கள் மீண்டும் நல்ல நடிகர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.