ஹரியானாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்களைக் குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நிர்ப்பந்தித்த பூத் ஏஜெண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஆறு கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஏழாம் கட்ட தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 23ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் கடந்த 12ஆம் தேதி, ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் குறிப்பிட்ட சின்னத்தின் பொத்தானை அழுத்துங்கள் எனப் பெண் வாக்காளர்களை நிர்ப்பந்தித்ததாக பூத் ஏஜெண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஃபரிதாபாத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில், வாக்களிக்கப் பெண் வாக்காளர்கள் வரிசையில் நிற்கின்றனர் அப்போது நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர், ஒரு பெண் வாக்களிக்கச் செல்லும் போது அவரது அருகில் சென்று குறிப்பிட்ட சின்னத்தின் பொத்தானை அழுத்துங்கள் என நிர்ப்பந்திக்கிறார். இதேபோன்று, அடுத்தடுத்து வாக்களிக்க வந்த 2 பெண்களிடம் அவர் இந்த பொத்தானை அழுத்துங்கள் என நிர்ப்பந்திக்கிறார்.
மேலும், வாக்களிக்கும் இடத்திற்குச் செல்லும் பூத் ஏஜெண்ட்டை அங்கிருந்த வேறு எந்த அதிகாரிகளும் தடுத்து நிறுத்தவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டது. இதைதொடர்ந்து, பூத் ஏஜெண்ட் கிரிராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது ஹரியானா தேர்தல் ஆணையம்.
டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் ரன்பீர் சிங் மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா ஆகியோர் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்நிலையில், மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர், வாக்களிக்கும் அறையில், வேறு எந்த அசாம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார். வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அதிகாரியோ அல்லது பூத் ஏஜெண்டுகளோ செல்ல அனுமதியில்லை.
இந்நிலையில், பூத் ஏஜெண்ட் அங்கு சென்றது தேர்தல் விதிமீறல். இதுகுறித்து பேசிய பூத் ஏஜெண்ட் கிரிராஜ், ”வாக்கு இயந்திரம் வைத்திருக்கும் பகுதிக்குச் செல்வது தேர்தல் விதிமீறல் என்பது எனக்கு தெரியாது. படிக்காத பெண்களுக்கு இரண்டு இயந்திரங்களில் எதில் வாக்கு செலுத்த வேண்டும் என்று உதவிதான் செய்தேன். நான் யாரையும் இந்த சின்னத்தில் வாக்களியுங்கள் என்று நிர்ப்பந்திக்கவில்லை” என்றார்.
ஹரியானாவில் நடந்த ஆறாம் கட்ட வாக்குப்பதிவில், 69.50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஃபரிதாபாத்தில் மட்டும் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடிக்கு மட்டும் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.