பள்ளிகளில் மாணவர்களை தரவரிசை அடிப்படையில் பாகுபடுத்தும் முறையை ஒழிப்பதாக அறிவித்திருக்கிறது சிங்கப்பூர் அரசு.
பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேர்வு வைத்து அவர்கள் பெறும் மதிப்பெண்களின் கூட்டுச்சராசரியைவைத்து தரவரிசைப்படுத்துவது என்பது வழக்கமான ஒரு நடைமுறை. இந்த நடைமுறை பலகாலமாக விமர்சிக்கப்பட்டுவந்தாலும் பலநாடுகள் மாணவர்களின் தரத்தை அளவிட இதனையே பின்பற்றுகின்றன.
‘கல்வி என்பது கற்றலின்மூலம் தங்கள் அறிவை வளர்ப்பதேயன்றி தரவரிசைப்படுத்துவது அல்ல; தரவரிசை என்பது மாணவர்களின் ஊக்கத்தைக் கெடுக்கும்வகையில் தேவையற்ற ஒப்பீட்டிற்கு வழிவகுக்கும்; அதனால் இனி சிங்கப்பூரில் மாணவர்களது தர-அறிக்கை ஏட்டில் இனி மதிப்பெண்களும் தரவரிசையும் இடம்பெறாது; மாறாக அவர்கள் கற்ற்லை மேம்படுத்துவதற்கான அறிக்கையாக அது இருக்கும்’ என்றும் அறிவித்துள்ளது சிங்கப்பூர் கல்வித்துறை.
மாணவர்களின் அறிக்கை ஏடுகளில் குரிப்பிடப்படும் ’வகுப்பு சராசரி, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பெண்கள், தனி வண்ணங்களில் குறிப்பிடப்படும் தேர்ச்சியற்ற மதிப்பெண்கள், தேர்ச்சிபெற்றவர்/ தேர்ச்சிபெறாதவர், ஒட்டுமொத்த மதிப்பெண்கள் ஆகியவை எதுவும் இனி குறிப்பிடப்படாது. அவற்றிற்கு பதிலாக வினாவிடை, விவாதங்கள் மற்றும் வீட்டுப்பாடங்கள் அடிப்படையில் அவர்களது தரவிளக்கங்கள் இடம்பெறும்.
அடுத்த ஆண்டு முதல் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்துசெய்யப்படும்; மேலும் அவர்களுக்கு என்ன மாதிரியான மதிப்பீடுகள் செய்யப்பட்டாலும், அவை அவர்களை தரவரிசைப்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபற்றி சிங்கப்பூர் கல்வியமைச்சர் ஆங் அவர்கள், ‘முதல் மதிப்பெண் பெறுவது என்பது மாணவர்களின் சாதனைக்கான அளவீடாகக் காலம்காலமாகப் பார்க்கப்பட்டுவருகிறது. ஆனால் அவற்றித் தற்போது நீக்கியிருப்பதன் காரணம், கல்வி என்பது தம்மைத் தாமே மேம்படுத்திக்கொள்ளும் ஒரு சுய-ஒழுக்கப் பயிற்சியே அன்றி போட்டியிடுதல் அல்ல’ என்றும் ‘இதுமட்டுமல்லாது தர-அறிக்கை என்பது மாணவர்கள் தங்களை சுயபரிசீலனை செய்துகொள்ளும் வகையில் அவர்களது பலம் மற்றும் பலவீனங்களைக் கூறுவதாக இருக்கவேண்டும்’ தெரிவித்துள்ளார்.
கல்வி என்பது கற்றலுக்கானதேயன்றி மதிபெண்களை வைத்து மாணவர்களை வடிகட்டுவது அல்ல என்பது சிங்கப்பூர் புரிந்துகொண்டது. ஆனால் நீட்டை நீட்டி மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் இந்தியா புரிந்துகொள்ளுமா?