கேள்வி:
வணக்கம் மருத்துவர் ஐயா, என்னுடைய கேள்விகள்
1.மனநோய் என்றால் என்ன? அது ஏன் ஒருவருக்கு வருகிறது?
2. மன நோய் நமக்கு வராமல் நம்மை காத்துக்கொள்வது எப்படி?
சீதாராமன், கும்பகோணம்
பதில்:
“உடல் நோய் என்றால் என்ன?” என்று எப்படி பொத்தாம் பொதுவாக கேட்க முடியாதோ அதேபோலதான் “மனநோய் என்றால் என்ன?” என்றும் பொத்தாம் பொதுவாக கேட்க முடியாது. உடலில் ஏற்படும் நோய்கள் அத்தனையும் ஒன்று கிடையாது. மிக சாதாரணமான நோய் முதல் மிக தீவிரமான நோய்வரை பலவகை நோய்கள் இருக்கும்போது “உடல்நோய்” என்ற பொதுவான கேள்வியின் வழியாக அத்தனை நோயையும் நாம் புரிந்துகொள்ள முடியாது. நீரிழிவு நோய் என்றால் என்ன? ரத்த அழுத்தம் என்றால் என்ன? என்பதுபோல ஒவ்வொரு நோயையும் குறிப்பிட்டு கேட்கும்போது மட்டுமே அந்தந்த நோயின் தனித்தன்மைகள், காரணங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால் ஒவ்வொரு நோயும் வேறு வேறு தன்மைகள் கொண்டது, வேறு வேறு காரணங்களைக் கொண்டது. அதேபோல உடலில் ஏற்படும் அத்தனை அசெளகரியங்களையும் நோய்மை என்ற வகைமைக்குள் அடைக்கமுடியாது. உதாரணத்திற்கு உடல் பருமனாக இருப்பது நோய் அல்ல; அது ஒரு ஆரோக்கியமற்றநிலை. நோயை தடுக்க வேண்டுமானால் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம். நம்மிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற நிலைகளைக் கண்டுகொண்டு அதை தவிர்ப்பது நோயை தடுக்கும் முக்கியமான வழி. ஏனென்றால் ஆரோக்கியமற்ற நிலைகள் எல்லாம் நோய் அல்ல; என்றாலும் அவை நோயை நோக்கிய பாதை என்பதை நாம் உணர வேண்டும்.
மேல் சொன்னவை அத்தனையும் மனநோய்களுக்கும் பொருந்தும். “மனநோய்” என்பது பொதுவான ஒன்று. மனநோய் பற்றி நமக்கிருக்கும் கருத்தாக்கங்களில் மிக முக்கியமானது “மனநோய் என்றால் ஒன்றே ஒன்றுதான்” என்பதுதான். இந்தக் கருதாக்கம்தான் மனநோயை பற்றிய பல எதிர்மறையான எண்ணங்களுக்குக் காரணம். உடலில் உருவாகும் நோய்களை மனதிலும் மிக எளிமையான மனநோயிலிருந்து மிக தீவிரமான மனநோய் வரை ஏராளமான நோய்கள் தோன்றலாம். இன்றைய மருத்துவ அறிவியல் புத்தகங்களின்படி நானூறுக்கும் மேற்பட்ட மனநோய்கள் இருக்கின்றன. இதில் தீவிரமான மனநோய்கள் என்பவை மிகச் சொற்பமே. பெரும்பாலான மனநோய்கள் மிக எளிமையானவை, மிக எளிதாக குணப்படுத்தக்கூடியவை. ஆனால் நாம் மனநோய் என்றாலே தீவிரமான மனநோயை நினைத்து கொள்கிறோம். இந்த அச்சத்தினால்தான் நம் மனதில் ஏற்படும் சாதாரணப் பிரச்சினைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் அந்தப் பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் வாழ்க்கையின் தரத்தினை நமது ஆரோக்கியமான மனமே நிர்ணயிக்கிறது. மனரீதியாக நாம் எதிர்கொள்ளும் சின்ன சின்ன சங்கடங்களை எல்லாம் நிராகரிப்பதின் மூலம் நமது வாழ்க்கையின் தரத்தை குறைத்துக் கொள்கிறோம்.
இதையெல்லாம் சரி செய்தால் நமது அன்றாட வாழ்க்கையை இன்னும் சிறப்பானதாக, மகிழ்ச்சியானதாக, திருப்திகரமானதாக வைத்துக்கொள்ள முடியும். இதை சரிசெய்யவிடாமல் தடுப்பது “மனநோய் என்றாலே ஒன்றுதான், அது குணப்படுத்த முடியாதது” என்ற தவறான கருத்தாக்கம்தான். அதனால் அந்தக் கருதாக்கத்தில் இருந்து நாம் வெளியே வருவதும், மனரீதியான சங்கடங்களை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் ஏற்றுக்கொள்வதும்தான் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நாம் முதன்மையாக செய்ய வேண்டியது.
“மனநோய் யாருக்கு வரும்?” என்ற கேள்விக்கு மிக எளிமையான பதில் மனம் என்பது யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் மனநோய்கள் வரலாம். மனசிதைவு போன்ற தீவிரமான மனநோய்கள் வருவதற்கு மரபணு உட்பட பல உயிரியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுவாக தீவிர மனநோய்களைப் பொறுத்தவரையில் அவை வருவதற்கு உடலியல் (Biological) காரணங்களே பிரதானமானது. பல சினிமாக்களில் வருவதுபோல பெற்றோர்களோ, வளர்ப்புமுறையோ அல்லது சூழலோ தீவிர மனநோயை உருவாக்கமுடியாது. மரபணுரீதியாகவே மனசிதைவுக்குரிய பண்புகளே இந்த மனநோய்க்கான காரணம். மற்றபடி மனப்பதட்டம், மனஅழுத்தம் போன்ற சாதாரணமான மனநோய்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நமது சூழல், நமது ஆளுமை, நமது பண்புகள் போன்றவையெல்லாம்கூட ஏதோ ஒருவகையில் இத்தகைய மனரீதியான பிரச்சினைகளுக்குக் காரணமாக அமையும்.
“மனநோயை தடுப்பது எப்படி?” உடலில் வரும் நோய்களை எப்படி தடுக்க முடியும்? உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதன் மூலம்தான். அதைப்போலவே மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதே மனநோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் வழி. உதாரணத்திற்கு எனக்கு ஒருவர் மீது சந்தேகம் வருகிறது என்பது நோயல்ல. இயல்பாகவேகூட அப்படி ஒரு சந்தேக பார்வை நமக்கு தேவை. ஆனால் எந்தவித காரணமும் இல்லாமல் ஒருவரை சந்தேகிக்கிறோம், அதன் விளைவாக அவரை வெறுக்கிறோம், அவரைப் பார்த்து எரிச்சல் கொள்கிறோம் என்பது ஆரோக்கியமற்றநிலை. அது நமக்கு நிறைய சங்கடங்களைக் கொடுக்கும், மனஅமைதியைக் கெடுக்கும், சகஜமான பரஸ்பர நம்பிக்கைகளைக் கெடுக்கும் என்பது மன சீர்கேடு. இந்த மனசீர்கேட்டை நாம் உணர்ந்து அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கான உதவியை நாடுவதின் மூலமாகவே இந்த மனசீர்கேட்டில் இருந்து வெளியே வர முடியும் அதன்வழியாக மனதின் ஆரோக்கியத்தைப் பேணமுடியும். மனம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதின்மூலம் நம்மை மட்டுமல்ல; நமது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளமுடியும்.
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com