சில நூறு கிலோமீட்டர்களுக்கு அந்தப் பக்கம் இருக்கிறாள். இன்றைக்கு எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், எங்கிருந்தோ வந்த தைரியத்தில் அனுப்பிவிட்டேன் அந்தக் குறுஞ்செய்தியை. அனுப்பிய பிறகு காணாமல் போனது தைரியம். மன்னிப்பு கேட்டுவிடலாமா இல்லை போனை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்துவிடலாமா என கைகள் நடுங்க, வியர்வை வழிய பதற்றத்தில் துடித்துக்கொண்டிருந்தேன். மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட விதை போல சத்தமில்லாமல் மனதுக்குள் கருவாகிக்கொண்டிருந்த காதல் அன்றைக்கு எங்கிருந்தோ பெய்த அமிர்த மழையில் அவளுக்குத் தெரிய துளிர்விட்டது அழகிய தருணம். இன்னும் அவள் பதில் அனுப்புவாள் எனக் காத்திருப்பதை அத்தருணத்தின் நீட்சியாக கொள்ளலாம் என்றே ஏற்கிறது மண் மனம்.