மனதிற்கு நெருக்கமான ஒரு உறவு காதலாக மலர்வதே அவன் அல்லது அவள் எனக்கே எனக்கானவனா(ளா)க இருக்க வேண்டும் என்கிற பொஸஸிவ்னெஸ் வர ஆரம்பிப்பதால்தான். காதலின் ஆரம்பத்தில் நம் மீது நமது இணை பொஸஸிவ்வாக இருப்பதை நாமும் விரும்புகிறோம். உண்மையில் அதை மிக மெலிதாக ரசிக்கிறோம். அதுவும் காதலைத் தெரிவிப்பதற்கு முன்னர் இது காதல்தானா? என்கிற குழப்பத்தில் நாம் தவித்துக்கொண்டு இருக்கும்போது நாம் விரும்பும் நபர் நம் மீது செலுத்தும் பொஸஸிவ்னெஸ்தான் அவர்களின் காதலை நமக்கு உணர்த்தும். அப்போது அவர்கள் முன்னால் நாம் வேறு யாருடனேனும் நெருக்கமாக இருப்பதாகக் காண்பித்துக் கொள்வதில் ஒரு தனி சுகம் இருக்கும். ஆனால் காதல் கைகூடிய பிறகு அந்தப் பொஸஸிவ்னெஸ்தான் நம் சின்னச் சின்ன தனிமைகளை உரிமைகளை ஆக்கிரமிக்கிறது. எந்த அலைபேசி அலைப்பிற்காகக் காத்திருந்தோமோ அதே அலைபேசி அலைப்பைக் கண்டாலே நாம் பதட்டமடைகிறோம் நாம் எங்கிருக்கிறோம் என்பது நாம் நேசிப்பவருக்குத் தெரிந்துவிடக் கூடாது எனப் பதறி இருக்கும் இடத்திலிருந்து நாம் நகர்ந்து போனை எடுக்க ஆரம்பிப்போமே அதுதான் பொஸஸிவ்னெஸ் நம்மை ஆக்கிரமிப்பதை நாம் உணர்கிற முதல் நிலை. எந்தக் காதலில் எப்போதும் இருக்குமிடம் பற்றி உண்மையை பகிர்ந்துகொள்ள முடியுமோ அதுதான் அயுள் முழுக்க நட்பாய் நிலைக்கும்.