நான் காதலைச் சொன்ன அந்த கணமே அவளின் உதடுகள் பதட்டப்பட தொடங்கிவிட்டன.இதழ் ரேகைகள் ஒவ்வொன்றும் விரிந்து பூக்கத் தொடங்கின.அவளுக்கு நானும் எனக்கு அவளும் என்று இளம்வயதில் வாய்வழி நிச்சயக்கப்பட்டவர்கள்தான்.இருப்பினும் அதை நாங்கள் வெளிப்படுத்திக் கொள்ள இருபத்தைந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றது.அவள் ‘பேரழகி’ என்பது என் பணிவான கருத்தே.எத்தனையோ “இரவுப் பகல்”அவள் மனத்தையும் காதலையும் எனக்காகவே கூர்தீட்டிக்கொண்டாள்.நான் அவளது அழகிற்கு முன் சற்றும் பொருத்தமற்றவன் என்பதால் அவளை நான் சைட் அடிக்கும் விருப்பநாயகிகளில் ஒருத்தியாக கூட சேர்த்ததே இல்லை.அவள் என்னை இம்மிகூட விரும்பமாட்டாள் என்கிற பெரும் நம்பிக்கை என்னுள்.ஆனால் இப்போது ஏற்றுக்கொண்டுவிட்டாள் அது அவளது சிறுவயதிலிருந்தே இருக்கிற மனவிருப்பமாம்.நல்ல வேளையாக மனவிருப்பம் என்று சொன்னால், அழகின் அடிப்படையில் என்றால் நான் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.நான் அவளிடம் காதல் சொல்ல தயங்கிய காரணம் என்னவெனில் அவள் மீது நான் கொண்டிருந்த “பேரச்சம்”.அவளிடம் காதல் சொல்லியவர்களில் நான் நூறைத் தாண்டிய ஒருவனாக இருந்திருக்க கூடும்.எனக்கு முன்னால் காதலை வெளிப்படுத்திய எல்லாருக்கும் அவள் தந்த பதில் “எனக்கு ஆள் இருக்கு”.அந்த ஆள் யாரோ என்று நான் அஞ்சியது சரிதான்..ஆனால் அந்த ஆள் நான்தானெறு உணர்ந்துகொள்ள நெடுங்காலம் நீந்திவிட்டேன்.காதலைச் சொன்ன ஒரு வாரத்திற்குள் என்னுடைய கடந்து கால இளங்காயங்களை வெளிப்படுத்திவிட்டேன்.நண்பர்கள் எவ்வளவோ தடுத்தும் நான் கேட்கவில்லை.காயத்திற்கு கண்ணீரால் களிம்பிட்டாள்.என்னை நொந்துகொண்டாள்.உன்னோடு பேசாமலே உன்னை என் கணவனாக வரித்துக்கொண்டேன்,உனக்கு ஏன் அப்படி ஏதும் தோன்றவேயில்லை?.என்னை எப்படி புறந்தள்ள முடிந்தது உன்னால்?இருப்பினும், கடந்ததை மறந்துவிடுவோம்.இனி இந்த வாழ்வு நமக்கானதாக இருக்கட்டும் என்று உச்சிமுகர்ந்தாள்.அவளது எல்லையற்ற காதலின் முன் என் மனம் விம்மித்தணிந்தது.அந்த காயம் என்னவெனில் என் “முன்னால் காதல்”!.