எதிர்ப்பின் காலம் – 3

சில நாட்களுக்கு முன்பு பழைய அமெரிக்க காமிக்ஸ் கதைகளில் வரக்கூடியது போன்ற ஒரு துணிகர சம்பவம் தாய்லாந்தில் நடந்ததாக தெரிகிறது. கொரானாவைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவுக்கு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஜெர்மனி நாட்டின் பெர்லின் மாநில அரசு, தங்கள் நாட்டு காவல் துறைக்காக  இரண்டு லட்சம் என்95 வகை முகக் கவசங்களுக்கு ஆர்டர் செய்திருந்தது. அந்தக் கவசங்கள் தயாராக ஆகி ஜெர்மனுக்கு அனுப்பப்படுவதற்காக பாங்காங் விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்த சமயத்தில், அமெரிக்கர்கள் அவற்றைத் “திருடி” தங்கள் நாட்டுக்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள் என்று ஒரு புகார் எழுந்தது. இது வாட்சப் புரளியா என்று தோண்டிப்பார்த்ததில் நமக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.

ஜெர்மனியில் பெர்லின் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆன்டிரியாஸ் கெய்சல் இதை “நவீன கொள்ளை”  என்று வர்ணித்திருந்ததை லண்டனிலிருந்து வெளிவரும் தி கார்டியன் நாளிதழ் பதிவுசெய்திருந்தது. நட்பு நாடு ஒன்றை இப்படி நடத்துவது அழகல்ல என்று அவர் புலம்பினார். இப்படிப்பட்ட உலகளாவிய நெருக்கடியின்போது இந்த மாதிரியான “வைல்டு வெஸ்ட் முறைகளை” பயன்படுத்தககூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அமெரிக்க கெளபாய் படங்களைப் பார்த்தவர்களுக்கு இந்த வைல்டு வெஸ்ட் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும். இதை அமெரிக்க அரசு மறுத்திருக்கிறது. இதை அமெரிக்க அரசு திட்டமிட்டு செய்துவிட்டதாகக் கூட யாரும் கருதத் தேவையில்லை. இதை ஏதேனும் ஓர் அமெரிக்க நிறுவனம்கூட செய்திருக்கலாம்.

இதைத் தொடர்ந்துதான் அந்த  ‘ரிடாலியேஷன்’ தமாஷ் இந்தியாவில் நடந்தேறியது. இந்தியா அமெரிக்காவுக்கு ஹைட்ரோகுளோரோக்வைன் ஏற்றுமதி செய்வதை தடைசெய்தால்,  அமெரிக்கா retaliate செய்யும் என்று டிரம்ப் ட்வீட்டியிருந்தார். உடனடியாக இந்தியா அரண்டுபோனது. பிறகு குஜராத் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கைகள் எடுத்து அமெரிக்காவுக்கு ஹைட்ரோகுளோரோக்வைனை ஏற்றுமதி செய்வதற்காக குஜராத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததைத்தொடர்ந்து அமெரிக்காவின் துல்லியத் தாக்குதல் முடிவுக்கு வந்தது.. பிறகு டிரம்ப் மோடியைச் செல்லம் கொஞ்சினார் என்றும் கூறப்பட்டது. (இதற்கிடையில் retaliate என்ற சொல்லுக்கு பல்வேறுவிதமாக இங்கே அர்த்தம் தரப்பட்டது. நீ எனக்கு பல்பம் தர்லேன்னா நான் உனக்கு குச்சிமுட்டாய் தரமாட்டேன் என்றுகூட அதற்கொரு அர்த்தம் இருப்பதையும் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள் வாயிலாக அறிந்துகொள்ளமுடிந்தது).

இதெல்லாம் நடப்பதற்கு முன்னதாக, மார்ச் இரண்டாம் வாரத்தில். கோவிட்-19க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியிலிருந்த ஒரு ஜெர்மானிய நிறுவனத்தை தொடர்புகொண்ட அமெரிக்க அரசு அதிகாரிகள் அந்தத் தடுப்பூசி மருந்துக்கான முழு காப்புரிமத்தையும் தங்களிடம் கொடுத்துவிடும்படியும் அதற்கு இணையாக எக்கச்சக்கமாக பணம் தரத்தயார் என்றும் பேசியிருக்கிறார்கள். ஜெர்மனியே கொதித்தெழுந்தது. ஜெர்மனி விற்பனைக்கு அல்ல என்று திருப்பியடித்தார் அதன் பொருளாதார அமைச்சர் பீட்டர் ஆல்த்மாய்ர்.  “Trump vs Berlin” என்று ஒரு நாளிதழ் தலைப்பிட்டிருந்தது. நாங்கள் உலகத்தில் உள்ள அனைவருக்குமாக இந்தத் தடுப்பூசியைச் செய்கிறோமே ஒழிய ஒரு தனிப்பட்ட நாட்டுக்கு அல்ல என்று அந்த நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் ஒரே குரலில் பதில் அளித்தார்கள்.

தொடக்கத்திலிருந்தே இதை சீனா வைரஸ் என்று சொல்லிக்கொண்டு வந்த டிரம்ப் இப்படித்தான் தொடர்ந்து சொதப்பிக்கொண்டுவந்தார். இரண்டே மாதத்தில் அமெரிக்கா உலகில் மிச்சம் மீதி வைத்திருந்த எல்லா நற்பெயர்களையும் கெடுத்துக்குட்டிச்சுவராக ஆக்கிவிட்டார். (அவர் உள்நாட்டில் என்னவெல்லாம் செய்யாமல் கோட்டைவிட்டார் என்பது தனிக்கட்டுரைக்கான செய்தி).

டிரம்பின் அமெரிக்கா  உலக அளவில் இன்று கேலிப்பொருளாகவும் ஆகியிருக்கிறது. அமெரிக்காவில் முதல் வைரஸ் தொற்று தெரியவந்தது ஜனவரி 20 ஆம் தேதி. சீனாவில் வைரஸ் வேகம் அதியுச்சத்தில் இருந்தபோதும், சீனாவுடனான போக்குவரத்தை ரத்து செய்தவற்கு பத்து நாட்கள் எடுத்துக்கொண்டார் டிரம்ப். சீனாவில் கொரோனா பரவிய அதே நாட்களில், இந்தப் பயணத் தடைக்கு முன்பு,. சுமார் நான்கு லட்சம் பேர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள். பயணத் தடையை அறிவித்த பிறகும் நாற்பதாயிரம் பேர் வந்திருக்கிறார்கள். அமெரிக்க விதிவிலக்குவாதம் (American Exceptionalism) இதுதான் போலிருக்கிறது!  உலகுக்கு ஒரு விதி, அமெரிக்காவுக்கு வேறு விதி என்று நினைத்துக்கொண்டிருந்த அமெரிக்கா அதன் பிறகு அந்த குற்றுயிரிடம் மண்டியிட்டது. பென்டகனுக்கும் வால் ஸ்ட்ரீட்டுக்கும் வெளங்கவேயில்லை.

“இது பின்-அமெரிக்க உலகின் முதல் மாபெரும் நெருக்கடி. இப்போது ஐநா பாதுகாப்புக் கவுன்சில் எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை. ஜி20 செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசரின் கைகளில் இருக்கிறது. வெள்ளை மாளிகையோ அமெரிக்காதான் முதலில் (America First) என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. வைரஸ் மட்டுமே இப்போது உலகமயமாக ஆகியிருக்கிறது” என்று ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் கார்ல் பில்ட் ட்வீட் செய்திருந்தார்.  இதற்கிடையில்தான் மற்றுமொரு பூதமும் உலக அரங்கில் வெளியே கிளம்பியது.  அதேதான், அந்த கம்யூனிச பூதம்தான்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அமெரிக்க வெகுசன கலாச்சாரம் என்பது கம்யூனிச பூதத்தைப் பற்றியதாகவே இருந்தது. அப்போது அமெரிக்க காமிக்ஸ்கள் கம்யூனிஸ்ட்களை தீயவர்கள் என்று சித்தரித்து அவர்களை வேட்டையாடுவதையே வைல்டு வெஸ்ட் பாணியில் சொல்லிக்கொண்டிருந்தன. தமிழில்கூட அந்த காமிக்ஸ்கள் வெகு பிரபலம். முத்து காமிக்ஸ் பிராண்டில் வெளிவந்த அந்த மொழிபெயர்ப்பு காமிக்ஸில் காணப்பட்ட ஒரு வில்லன் கும்பலின் பெயரை இன்னமும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அழிவு கொள்ளை தீமை கழகம் – அ.கொ.தீ.க என்பது அதன் பெயர்.

அந்த காமிக்ஸ் கதாநாயகர்கள் உலக மக்களை கம்யூனிச பூதத்திடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருந்தார்கள்.

இப்போது உலகம் உண்மையிலேயே கண்ணுக்குத்தெரியாத ஒரு வைரஸிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது. உலக நாகரீகத்தின் தலைவனான அமெரிக்காவோ உலக மக்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக ஒரு லோக்கல் ரவுடியைப் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் தன் சொந்த மக்களைக்கூடக் காப்பாற்ற முடியவில்லை. தன்னுடைய நிதிபலத்தையும் தொழில்நுட்பப் பலத்தையும் மக்களுக்கு ஆதரவாக பயன்படுத்தமுடியவில்லை.

ஆனால் அந்த முன்னாள் அ.கொ.தீ.கழகத்தின் உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் நாம் செய்திகளில் அறிகிறோம். தொற்று முளைத்த நாடான சீனா எவ்வளவு விரைவாக எதிர்வினையாற்றியது என்பது இப்போது நமக்குத் தெரியவந்திருக்கிறது.. செய்தித்தாள்கள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்விதழ்கள் கூட சீனாவின் அதிவேக எதிர்வினையை உறுதிப்படுத்தின. மற்றொரு பக்கம் அமெரிக்காவுக்கு அருகிலேயே நெடுங்காலமாக அதை “மிரட்டிக்கொண்டிருக்கும்” மற்றுமொரு அ.கொ.தீ.கழக உறுப்பினரான கியூபாவின் மருத்துத்துறை இப்போது எப்படி நடந்துகொண்டது என்பதைப் பார்த்திருக்கிறோம்.  இந்த ஊரறிந்த கதைகளை விடுங்கள். இதுவரை அதிகம் கவனம் பெறாத மற்றுமொரு குட்டி நாட்டின் கதையைப் பாருங்கள். அதுவும் பழைய அ.கொ.தீ கழக நாடுதான்.

ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் அவமானகரமான உணர்வை வரவழைக்கும் அந்த நாடு – வியத்நாம். வியத்நாம் இந்த கொரோனா வைரஸ் விவகாரத்தை எப்படி எதிர்கொண்டது? ஹனோயில் செய்யறிவு )AI) ஆய்வுக்கூடம் ஒன்றில் ஆய்வாளராக பணியாற்றும் ஹோங் கோங் ஙுயென் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து மிகச்சுருக்கமாக அதை பிழிந்து தருகிறேன்:

‘சீனாவின் எல்லைப்புற நாடான வியத்நாம் சீனாவில் முதல் கொரோனா பலி ஏற்பட்ட ஜனவரி 3 ஆம் தேதிக்கு முன்னதாகவே. சீனாவில் தொற்று ஏற்பட்ட செய்தி வந்த உடனேயே, வேகமாக செயல்பட்டு தன் எல்லையைக் கட்டுப்படுத்தியது. நாட்டிலுள்ள எல்லா மருத்துவ மனைகளுக்கும் சுகாதாரத் துறை அமைப்புகளுக்கும் அதி எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியது. ஜனவரி 23 இல் வியத்நாமில் முதல் தொற்று அறிவிக்கப்பட்டது.

தென் கொரியா போல அதிக அளவில் பரிசோதனைகளோ சிங்கப்பூர் போல தீவிரமான கண்காணிப்பையோ செய்யாத வியத் நாம், மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதையே பிரதான உத்தியாகக் கைகொண்டது. அதாவது அனைத்து பொது ஊடகங்களையும் பயன்படுத்தி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி. நோய்க்கிருமி பாதிப்புள்ளவர்களை வெகுவிரைவாக கண்டறிந்து தனிமைப்படுத்தியது. என்கோவி என்ற பெயரில் அரசு ஒரு செயலியை வெளியிட்டு மக்கள் தாமகவே தங்கள் சொந்த சுகாதாரத் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு செய்தது. இந்த செயலி மார்ச் 10 இல் வெளியிடப்பட்டது. மருத்துவமனைகள், அரசு, சுகாதார நிர்வாகம், உள்ளூர் நிர்வாகங்கள், பல்கலைக்கழகங்கள் அனைத்துமே தொழில்நுட்ப தளங்கள் மூலமாக இணைக்கப்பட்டு ஜூரவேகத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதே சமயம் குறைந்த செலவிலான பரிசோதனைக் கருவிகளும் உற்பத்தி செய்யப்பட்டன. தரவுகளையும் தொழில்நுட்பத்தையும் தவிர வேறெதையும் சார்ந்திருக்கும் நிலை வியத்நாமுக்கு அமையவில்லை. அது அவ்வளவு பெரிய பணக்கார நாடும் இல்லை. எனவே, அறிவுதான் ‘அற்றம் காக்கும் கருவி’.

இங்கே பிரதமர் கேட்டுக்கொண்டார் என்பதால் நாம் தட்டுக்களைத் தட்டினோம், விளக்குகளை ஏற்றினோம். ஆனால் வியத்நாமில் கேன் கோ வி என்றொரு பாடல் சமூக ஊடகங்களில் கொரோனாவைிவட அதிகவேகத்தில் பரவிச்சென்றது. இரண்டு வார ஊரடங்கு நேரத்தில்,  மக்கள் தனித்தனியாக அதைக் கேட்டு பாடவும் தொடங்கினார்கள். அரசு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ வசதிகள் குறித்து ஆயிரக்கணக்கான முகநூல் பதிவுகள் போடப்பட்டு மக்களுக்கு தெரியவைக்கப்பட்டது. சமூக ஊடங்களின் வழியாக எங்கே சாப்பாடு கிடைக்கும் மருந்து கிடைக்கும் என்பது உள்பட அனைத்தும் வெளியாயின.

பணம் இருந்தால் அல்ல, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு வியத்நாம் ஓர் எடுத்துக்காட்டு. வியத்நாமியர் மீண்டும் ஒருமுறை அமெரிக்காவைத் தோற்கடித்துவிட்டார்கள். வியத்நாம் என்கிற ‘அழிவு கொள்ளை தீமைக் கழகம்’ பயன்படுத்திய ஆயுதங்கள் என்ன தெரியுமா?

சோசலிச பாணி நிர்வாகம், உத்தரவாதம் செய்யப்பட்ட பொதுச் சுகாதாரம். பரவலாக்கப்பட்ட மக்களுக்கான நிர்வாகம். நவீன தொழில்நுட்பம், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடம்.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. பால்கனியில் நின்று கைதட்டச் சொல்லும் பரிதாபகரமான சர்வாதிகாரி - ஆழி செந்தில்நாதன்
  2. கொரோனா: அவமானத்தால் ஓடும் முதலாளித்துவம் - ஆழி செந்தில்நாதன்