பாணனே..,

நீ ஒரு யாழ் இசைக் கலைஞன்,

நான் சாதாரணப் பெண் –

நீ என் வீட்டு வாசலில் நின்றுகொண்டு,  உன் முதுகை வளைத்துக்கொண்டு, கூழை  கும்பிடு போட்டுக்கொண்டிருக்கிறாய்,

நீ என்னை கும்பிட வேண்டாம். கும்பிடாதே.

நீ என்னைப் புகழ்ந்து புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறாய்…

நீ எதுவும் பாட வேண்டாம். பாடாதே!

இரண்டு குதிரைகள் பூட்டிய அழகான ஒரு தேரில் வந்திருக்கிறாய்…

உன் தேரில் என்  கணவனை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாய் ..

பாணனே…

எங்கள் வீட்டில் அழகான ஒரு பாலகன் பிறந்திருககிறான்,

இது பிள்ளை பிறந்த வீடு.

பிள்ளை பிறந்த இந்த வீடு முடைநாற்றம் நாறிக்கொண்டிருக்கிறது .

பிள்ளையைப் பெத்த தாயும் முடைநாற்றம்தான் நாறிக் கொண்டிருக்கிறாள்,

அவள் சேலையில் அடுப்பாங்கரைக் கறியும் அடுப்பாங்கரை எண்ணெய் பிசுகமே அவள் சேலையை அழுக்காக்கி வைத்திருக்கிறது. குழந்தைக்குக்  கண்களில் எழுதிய மையும் அவள் சேலையில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அம்மார்பில் கசிந்த பாலும், குழந்தை கக்கிய பாலும்கூட அச் சேலையில்தான் ஊத்தை  படிந்துபோய்  இருக்கிறது . குழந்தையைப் பெற்றவள் உடுத்தியிருக்கிற  சேலை அழுக்கும் ஊத்தையும் நாறிக் கொண்டிருக்கிறது.

பாணனே…

உன் தலைவன் பெண்களின் வெளி அழகை மட்டும் பார்க்கிறவன். ஒரு  பெண்ணின் உள் மனதைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு அவனுக்கு இல்லை.

அவனால்  என்னோடு வாழ முடியாது. அவன் விரும்புகிறமாதிரி அவனோடு கூடி முயங்குவதற்குப் பொருத்தமான பெண் நான் இல்லை.

அவனுக்குப் பொருத்தமான பெண்கள் புரத்தைச் சேரியில்தான் கிடப்பார்கள். பரத்தைதான் நாகரிகமாக உடுத்துவாள். பரத்தைதான் அவளைக் கவர்ச்சியாக அலங்காரம் பண்ணிக்கொள்வாள் .

பாணனே…

உன் குதிரைகள் என் முற்றத்தில் ரொம்ப நேரமாக நின்றுகொண்டிருக்கிறது.

உன் குதிரைகளுக்குக் கால்கள் கடுத்துவிட்டன. நீ உன் தேரை பரத்தைகள் வாழும் சேரிக்கு  கொண்டு போ…

உன் தலைவன் விருப்பபட்டபடி கூடி முயங்குவதற்குப் பொருத்தமான பரத்தைகள் சேரியல் கிடைப்பார்கள்.

நீ என்னிடம் பயன் இல்லாத வார்த்தைகளைத் திரும்பித் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறாய்…

பேசாதே!

பேச்சை நிறுத்து…

நீ கிளம்பு.

நீ போ…

நீ என் வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டிருக்காதே…

கூடலூர்ப் பல்  கண்ணனார்
நற்றிணை 380