குளிரென்பதும் வன்முறைதான்
மழையிலும்
மார்கழியிலும்
உன் சதையை இழுத்து போர்த்திக்கொண்டேன்
போர்வைக்குள்
நாம் தீமூட்டி குளிர்காய்ந்த ஓர் நள்ளிரவில்
அம்மா
அப்பாவின் பூச்சூடிய புகைப்படத்தை
கழற்றி
கட்டி
அவன் நெஞ்சுள் புதைந்து
அழுதுகொண்டிருந்தாள்
பின்னிரவில்
மூத்திரம் போவதற்காய் எழுந்த நான்
கண்களை கசக்கிக்கொண்டே
கால்கள் தடுமாற பார்க்கிறேன்
அப்பாவின் பெரிய கைச்சட்டைகள்
அம்மாவை அணைத்துக்கொண்டிருந்தன
அவள் அவனுள் உறங்கிக்கொண்டிருந்தாள்
நான் மூத்திரம் போய்வந்து
அவள்
கவலைகளை
போர்த்திப்படுத்தேன்.
மனிதாபிமானிகள்
நடுரோட்டில் அடிபட்டு
இறந்துகிடந்த நாயை
இன்னுமொருமுறை
யாரும்
ஏற்றி நசுக்காமல்
ஸ்டியரிங்கை வளைத்து
விலகிப்போனார்கள்
இறந்த அந்நாய்
இன்னும்
ஒரே ஒருமுறை
தலைதூக்கி
அதைப்பார்த்து
குறுநகைத்துவிட்டு
மீண்டும்
சிரம் சாய்த்தது சாலையில்.
சித்திரை
முற்றத்தில்
நிழலீன்ற வீட்டுக் குடையை
நாங்கள் தூலி கட்டியாடிய தாய் மடியை
போகவர தொந்தரவென
துடிக்கத்துடிக்க வெட்டி சாய்த்தார் அப்பா
தகிக்கும்வெயில்
தவிக்கும் வீடு
எவ்வளவு கெஞ்சியும்
காற்று வந்து யாரிடமும் பேச மறுக்கிறது
கவலையில் கடைக்குப்போய்
குளிர்சாதனப்பெட்டி வாங்கிவந்து
வீட்டிற்கு மாட்டினார்
விறகான வேப்பம்பிள்ளை
வெயிலில் வியர்த்தழுத வீடு.