1
பதினெட்டு கதவுகள் கொண்ட
என் வீட்டில்
பதினெட்டையும் திறந்து வைத்தேன்
ஒன்றைத் திறந்தேன்
வாசல் வந்தது
இரண்டைத் திறந்தேன்
கூடம் வந்தது
மூன்றில் தனியறை
நான்கு கழிவறை
ஐந்து அடுமனை
ஆறில் அது
ஏழில் இது
இப்படி
இப்படி
பதினேழு வரை திறந்தேன்
பதினெட்டையும் திறந்தேன் –
கடல்
பதினெட்டு அறைகள் கொண்ட என் வீட்டில்
பத்தொன்பதாவது அறையே
என் விருப்ப அறை
ஒருநாள்
தூரத்தில்
பார்த்தேன்
அந்தி சாயும் பொழுததில்
ஒரு படகு
தொலைவே
மறைந்துகொண்டிருந்தது!
அதிலிருந்தவன்தான்
பத்தொன்பதாம் அறையைத் திறந்துகொண்டிருந்தான்
இருபதாவது அறைக்குள்
இறங்கிக்கொண்டிருந்தது
மாலைச்சூரியன்
2
இன்றெனக்கோ
ஞாபக மறதி
சாவியை மறந்துவிட்டேன்
ஞாபக மறதி
இன்றென்
பேருந்தைத் தவறவிட்டேன்
சாப்பிட மறந்துவிட்டேன்
கோப்புகளை மறந்துவிட்டேன்
மறந்து மறந்து
திடீரென
ஞாபகம் வந்தது
ஞாபகம் மறதியாய்
முன்னெப்போதோ
பிறந்துவிட்டேன்
3
*இரண்டு இரகசியங்கள்*
இருவர்
ஒரு இரகசியத்தை
கேட்கின்றனர்
ஒருவர் அருகில் நின்று
இன்னொருவர் ஒளிந்துகொண்டு
4
உறக்கம் என்பது
மரணமென்றால்
கனவு என்பது
மரணத்தின் வாழ்வு
மரணத்தின் வாழ்வும்
நம் வாழ்வு போலே
நல்லதும் கெட்டதுமானதா
கெட்ட கனவொன்றில்
நான் அலறியெழுந்தேன்
நல்ல கனவொன்றில்
நான் அப்படியே தூங்கினேன்
நல்ல கனவில் தூங்கினாலும்
விழிப்பு கூட்டிவந்துவிடுகிறது
இங்கே
கெட்ட கனவில்
அலறி எழுந்திருப்பது மட்டுமென்ன
நல்லதால் மட்டுமான வாழ்விலா
நல்ல கனவென்றும்
கெட்ட கனவென்றும்
இல்லாத
கனவே இல்லாத
தூக்கம் தூங்கி
விழிக்கும்போது
வாழ்வு
சொர்க்கத்திலும் இல்லாத
நரகத்திலும் இல்லாத
அமைதி அடைகிறது
சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும்
இடையே
அதற்கு என்ன பெயர்
என்ன பெயர் வைத்தாலும்
அதை சொர்க்கத்தில் சேர்த்திடுவர்
ஆனால் அது
நரகம் இல்லை
சொர்க்கம்
இல்லவே இல்லை
5
திடகாத்திர ஆள்
பார்த்தால்
நூறு பேரை அடிப்பார் போலிருக்கிறது
அவர் நிற்கிறார்
பின் திரும்பி
போனில் பேசிக்கொண்டு
யாருடனோ
வாக்குவாதம் செய்துகொண்டு
சரியாக
அவர் தலையில் அசைகிறது
ஒரு கொத்துச் செடிப்பூ
ஏனோ
இளகுகிறது
அவர் குரல்
6
*விளைச்சல்*
நிறமற்ற
நிறம் அடித்தேன்
நிறம்
அத்தனையையும்
நிறமற்றதாக்கினேன்
சிகப்புக் குருடு
அதற்குத் தெரியவில்லை
செவிட்டு மஞ்சளை
மஞ்சளுக்குப் புரியவில்லை
வெள்ளையின்
ஊமை பாஷை
நிறமற்ற பெரும்பரப்பு
அதில் பொழிகிறது
நிறமற்ற மழை
முளைவிடுவதென்ன
முளைவிடுவதென்ன