நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
ஆரளி யிலையோ நீயே பேரிசை
இமயமும் துளக்கும் பண்பினை 5
துணையிலர் அளியர் பெண்டிர் இதெவனோ.

 

மழை பலமாகப் பெய்து கொண்டிருக்கிறது.

காற்று வேகமாக வீசிக் கொண்டிருக்கிறது.

இடி பயங்கரமாக விழுந்து கொண்டிருக்கிறது.

இடி விழவிழ, பெரியபெரிய மலைப் பாம்புகள் எல்லாம் செத்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பெரிய மழையின் கோவத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், இமயமலைகூட நேராக நிற்கத் திணறிக் கொண்டிருக்கிறது.

மழையே…

பெரிய மழையே…

நான் ஒரு ஏழைப் பெண்.

நான் திருமணம் ஆகாமல், கணவன் துணை இல்லாமல், தனிமையில் இருக்கிறேன்.

நான் குளிரைத் தாங்க முடியாமல் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்.

மழையே…

பெரிய மழையே..

உன் கோவத்தை இந்த ஏழைப்பெண்ணிடம் காட்டாதே… இந்த ஏழைப் பெண்ணிடம் உன் இரக்கத்தைக் காட்டு.

அவ்வை
குறுந்தொகை 158