கமல் அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி வந்ததும் என்னுடைய நண்பர்கள் இருவர் கையைப் பிசைந்து கொண்டு நின்றனர். இருவரும் தீவிர கமல் ரசிகர்கள். கமலுக்கு ஒன்று என்றால் துடிப்பவர்கள். அவர்கள் நிற்கும் விதத்தைப் பார்த்தால் கமல் அரசியலுக்குள் இறங்கிவிட்டதுபோல் இல்லை. ஏதோ அரசியல் கமலுக்குள் இறங்கிவிட்டதுபோல் இருந்தது.

திரு. கமல்ஹாசன் என்ற அரசியல்வாதியைச் சமாளிக்க முடியுமா என்ற கலக்கம் அவர்களிடம் இருந்தது. நான் ஏதாவது சொல்வேனா என்று அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் ஏதாவது சொல்வார்களா என்று நான் பார்த்தேன். மூச்சு பேச்சில்லை. கடல் மெளனம்.

கமலுக்கும் ரஜினிக்கும் உள்ள வித்தியாசம் இது. ரஜினி எதிலும் வெற்றி பெறுவார். கமல் எதிலும் தோல்வி அடைவார். இப்படி நினைப்பவர் ரஜினி ரசிகராக இருக்க முடியாது. கமல் ரசிகராகத்தான் இருப்பார். எனவே உலகம் முழுதும் கமல் அரசியலில் தோற்றுவிடுவார் என்று நினைத்தது. ஏன் என்றால் ரஜினி உட்பட நாம் எல்லோருமே கமல் ரசிகர்கள்தான்.

கமல் ரசிகர் இல்லை என்றால் அவர் என்ன அசோகமித்திரன் ரசிகரா? வல்லிக்கண்ணன் ஒருவர்தான் சினிமாவே பார்ப்பதில்லை என்றார். அவரையும்தான் சிலர் அயோக்கியர் என்றார்கள். இலக்கிய உலகம் பயங்கரமானது. அங்கே மிகவும் ஆபத்தான ஆசாமிகள் உள்ளனர். சினிமாவில் ஆபத்து குறைவு.

எனவே கமல் ரசிகர் என்று சொல்வதில் ரஜினிகூட வருத்தப்பட மாட்டார்.

நான் ரஜினி ரசிகன் என்ற முறையில் கமல் ரசிகன்.

கொஞ்சம் புரியாமல்தான் இருக்கும். தலைப்பு அப்படி.

எங்கள் ரஜினி பயந்த சுபாவம் உள்ளவர். கழிப்பறைக்குப் போவதாக இருந்தால்கூடப் போகிறேன் என்று சொல்வார். போக மாட்டார்.
சொல்ல மாட்டார். சொன்னால் போகாமல் இருக்க மாட்டார் என்று நாங்களும் சொல்லிக்கொண்டே இருப்போம். எங்களுக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். கடைசியில் வரவில்லை அதனால் போகவில்லை என்ற கடைசிக்கு முந்திய வாக்கியத்தோடு காத்திருப்போம்.

ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று இருபது வருடங்களுக்கு முன்பு மிகுந்த கவலையோடு நான் எழுத்தாளர் சுஜாதாவைக் கேட்டேன். அவருடைய நண்பர் அரவிந்தனோடு சுஜாதா அப்போது சிங்கப்பூரில் ஆறு நட்சத்திர ஓட்டலான ரிட்ஸ் கார்ல்டனில் இருந்தார்.

`பயப்படறாருங்க!` என்றார் சுஜாதா.

ரஜினியை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். கமலை ஏற்பார்களா என்பது ஐயமே என்பதுதான் சுஜாதாவின் எண்ணம்.

ஏன்?

`மராட்டிகாரரா இருந்தாலும் ரஜினி முகம் தமிழ் முகம். தமிழரா இருந்தாலும் கமல் பார்க்கிறத்துக்கு சேட்டு வங்காளி மாதிரி இருக்கார்!` என்றார் சுஜாதா.

கடவுள் எல்லாவற்றையும் ரஜினிக்கே கொடுத்துவிட்டு கமலுக்கு எதுவுமே கொடுக்காமல் போனதால்கூட கமலுக்குக் கடவுளைப் பிடிக்காமல் இருக்கலாம். கமலின் பலம் இதுவரை அவரை யாரும் வெறுப்பதில்லை என்பதுதான்.

கமல் ரசிகர்கள் ரஜினியை வெறுப்பார்கள். ஆனால் ரஜினி ரசிகர்கள் கமலை வெறுப்பதில்லை.

ரஜினி ரசிகர்கள் கமலை கேலி செய்வதோடு விட்டுவிடுவார்கள். கமலை கேலி செய்வதும் எளிது.

ரஜினியைக் கேலி செய்வதாக இருந்தால் நிறைய யோசிக்க வேண்டும். பத்திரிகையில் போடுவார்களா?

கமல் விஷயம் வேறு.

கமல் ஒரு முக்கிய நடிகர் என்று சொன்னாலே அவரை மோசமாகக் கேலி செய்துவிட்டதாக ஆகிவிடும்.

கமலுக்கு இன்னொரு பலவீனமும் உண்டு.

இலக்கியம்.

யானை மிதித்து தமிழ் செத்துவிட்டது என்று சொல்லக் கூடியவர் கமல் நண்பராகத்தானே இருக்கிறார்.

ஜெயகாந்தன் இறந்தபோது தமிழில் ஒரு எழுத்து குறைந்துவிட்டது என்று கமல்தானே சொல்கிறார். அதுதான்.

இலக்கியத்தில் இருந்து பார்க்கும்போது சினிமாகாரராகவும் சினிமாவில் இருந்து பார்க்கும்போது இலக்கியவாதியாகவும் கமல் தெரிகிறார்.

ரஜினி சொன்னதில் எனக்கு நினைவில் இருப்பது அந்த காது கேட்காத தவளையின் கதை. ரஜினி பேசுவதைப் புரிந்து கொள்வதில் எனக்குச் சிரமம் உண்டு. எனினும் அதைப் புரிந்து கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறேன்.

கமல் எவ்வளவோ சொன்னார். இப்போது ஞாபகம் இருப்பது நாதுராம் கோட்சே மட்டும்தான்.

இப்போது பொய் என்ற சொல்லுக்கு வருவோம்.

இங்கிலீஷ்காரன் உண்மையாக வாழ்கிறான். தமிழர்கள் பொய்யாக இருக்கிறார்கள் என்று சாருஹாசன் சொன்னார் அல்லவா? அவர் சொன்னது உண்மை என்று

சொல்லக் கூடியவர்கள் அநேகர் உள்ளனர். சாருஹாசன் சொன்னதன் அர்த்தத்தை ரங்கராஜ் பாண்டேவுக்கு அவர் தந்த பேட்டியைப் பார்த்துப் புரிந்து கொள்வது நல்லது.

அது பற்றி இன்னொரு நாள் பேசலாம்.

கமல் தமிழர் என்ற முறையில் சாருஹாசனின் கணிப்புப்படி பொய்யானவரா? அல்லது தமிழர்களில் கமல் மட்டும் உண்மையானவரா?

சிங்கப்பூருக்கு கமல் வந்தபோது பல்கலைக்கழகத்தில் ஒரு கலந்துரையாடல். வாசலில் சிங்கப்பூரைச் சேர்ந்த அதேநேரத்தில் சிங்கப்பூரைச் சேராத ஒரு கவிஞர் அவருக்கு கைகொடுக்கப் போனார். நீட்டிய கையை ஒதுக்கிவிட்டு கமல் நடந்து போய்விட்டார். நான் அருகில்தான் இருந்தேன். கமல் அந்தக் கையைப் பார்த்ததும் தப்பித்துப் பாய்ந்து படியேறிச் சென்றார்.

தீண்டாமை அல்ல. இது ஒரு வகையான தீண்டாமை.

கைகொடுக்க வரும் ஒருவரை சினிமா நடிகராகவே இருந்தாலும் கைகொடுக்க விரும்பவில்லை என்று ஒதுங்கிச் செல்லும் உரிமை உண்டு. வணக்கம் சொல்லி வணக்கம் சொல்லாமல் போனால்தான் தமிழ்த் தப்பு.

ரஜினி அப்படி ஒரு போதும் செய்ய மாட்டார். அவர் இதமாக நடந்து கொண்ட நிகழ்ச்சிகளை நெகிழ்வாகச் சொல்லக் கூடியவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
கண்டனத்தார் ரஜினி நடிக்கிறார் என்பார்கள்.

தொடாவிட்டால் தப்பு, தொட்டால் நடிப்பு.

அரசியல்வாதி கமல் எப்படிப்பட்ட மனிதர்?

துவரக்குறிச்சி என்று எழுதப் பார்த்தேன். அவரக்குறிச்சி. ஏதோ ஒரு இடம். சொன்னார். அந்தப் பேச்சு முழுதும் அரசியல் பேச்சுதான். சொன்ன இடம். சொன்ன நேரம். எல்லாம் சேர்ந்து அதை அரசியலாக்கிவிட்டது.

இரண்டு திராவிடத்துக்கு அடுத்து கமல் மூன்றாவது அணி என்கிறார்கள்.

அரசியல் செய்யாத அரசியல் என்பது சாத்தியம் இல்லை.

கமல் ஒரு போலியான ஆள் அவரை நம்ப முடியாது என்கிறார்கள். இது ஒரு தரப்பு. இந்தத் தரப்பு மாறிக் கொண்டே இருக்கும்.

கமலிடம் நமக்குப் பிடித்த ஒரு அம்சம் உண்டு.

ஒரு முறை ஒரு நகை கடையைத் திறப்பதற்காக அவருடைய மகள் சுருதி சிங்கப்பூருக்கு வந்திருந்தார். மத்தியானம் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். வெயில் மாதிரி வெளியே நல்ல கூட்டம்.

சுருதி ஆங்கிலத்தில் தொடங்கினார். அப்போது ஒரு பழம்பெரும் இந்திய ஊடகம் (ஊடகம் என்ற சொல் இந்த இடத்தில் எவ்வளவு உதவியாக அமைந்துவிட்டது) இந்தியில் பேசுங்கள் என்றது.

ஏற்பாடு செய்த இரண்டு இந்திப் பெண்கள் கடைசியில் வருத்தமாகப் பேசிக் கொண்டு போவதைக் கேட்டேன்.

சுருதி முழுக்க முழுக்க தமிழிலேயே பேசினார்.

நன்றி. வணக்கம்.

முந்தைய தொடர்: https://bit.ly/2Jy2eF8