முன்பாக தொலைக்காட்சிப் பெட்டிகளை அரசாங்கம் கிராமங்களின் கடைகோடுவரை இலவசமாக கொடுத்துவிட்ட பிறகு இன்றைய பெருசுகள் அதன் முன் அமர்ந்து கிடக்கின்றன. பெருசுகள் நாய்களுக்குப் பதிலாக காடு தோட்டத்தில் இரவுக் காவலுக்கு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த காலம் போய்விட்டது தான். தோட்டத்தில் குடிசையில் வாழும் பெருசுகள் ஊருக்குள் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து போவதே எதாவது விசேச தினங்களில்தான். அவர்கள் முழு வாழ்வும் மண்ணோடும், மண்ணில் வளரும் பயிர்களோடும் இருந்தது.

இப்போது அவர்களுக்கு அஜித் விஜய், டோனி எல்லோரையும் தெரிகிறது. விலைவாசியெல்லாம் ஏறிப் போச்சுங்களே பெருசு! பாருங்க மாடுக, எருமைகளை வெச்சுட்டு ஊருக்கே பால் ஊத்துன குடும்பம் உங்குளுது! பால் விலை மசமசன்னு இப்போ ஏறிப் போச்சே பெரியவரே! என்றால், ‘பாலு குடிச்சி நானு இனி ஓட்டப் பந்தயத்துலயா கலந்துக்கப் போறேன்? பொழுதோட என்னோட டிவியில குட்டிப்புலி போடப்போறானப்பா!’ என்கிறார்கள். ‘என்னது உன்னோட டிவியா?’ என்றால், ‘அட ஆமாப்பா! அவந்தான் எந்நேரமும் உங்கள் டியில் உங்கள் டிவியில்னு பொழுதனிக்கும் சொல்லீட்டே இருக்கானே… அப்படின்னா அது எம்பட டிவி தான?’
அரசியல் தலைவர்கள் நாற்காலியில் அமரவேண்டும் என்பதற்காக பொம்மை காட்டுற பெட்டி தர்றேன், அடுப்பு தர்றேன் (சிலிண்டர் விலையை ஏத்திக்கறேன்) ஆடு தர்றேன் என்கிறார்கள். டிஜிட்டல் ரிசீவரை வீட்டார்கள் மாட்டிக்கொண்டு மாசம் 160 ரூவாய்க்கு ரீச்சார்ஜ் செய்துகொண்டு தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து விட்டார்கள்.

அதுவும் போய் வேண்டிய சேனல்களை மட்டும் பார்த்துக்கொள்ளலாம் இனிமேல் என்கிற திட்டமும் வந்துவிட்டது. இதிலும் வேண்டாத சேனலுக்கு மாதம் 153 ரூபாயை நாம் கட்ட வேண்டும். அது போகத்தான் சாய்ஸ் விடப்பட்டிருக்கிறது.

ஒருகாலத்தில் உள்ளூரில் ஐந்து சேனல் மட்டுமே காட்டி மாதம் 100 ரூபாய் வசூல் செய்து கொண்டிருந்தேன். ஊருக்குள் முப்பத்தியைந்து வீடுகளுக்கு கனெக்சன் குடுத்த சமயத்தில் தான் கே.டிவி ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு சேனலுக்கும் ஒவ்வொரு ரிசீவர் தேவைப்பட்டது. இதற்காக வீட்டின் மொட்டை மாடியில் ரெண்டு பத்தடி டிஸ் வைத்திருந்தேன். சன் டிவி வரலை என்றால் மண்டை வெடித்துவிடும் என்கிற அளவில் கிராம மக்கள் இருந்தார்கள். மூன்று வருட காலத்தில் ‘இதெல்லாம் ஒரு பொழப்பா? என்ற கணக்கில் வேற்றூரானுக்கு அப்படியே ஒயர்களுடன் விற்றுவிட்டேன்.

இப்போது பணம் கட்டி விருப்பச் சேனல் பார்க்கும் காலம் வந்துவிட எல்லோரும் சன் டிவியை வேண்டாமென்றும், ஜீ டிவியே போதுமென்றும் பணம் கட்டியிருப்பதாக கேபிள் நண்பர் சொல்கிறார். வீட்டில் என் அம்மாவும் ஜீடிவியுடன் இணைந்து விஜய் டிவிக்கும் பணம் கட்டிப் பார்க்கிறது.

காத்தாடி, கிரைண்டர், மிக்ஸி என்று வரிசையில் நின்று வாங்கி வந்து பயன்படுத்தி, மின்சாரக்கட்டணம் கட்டுவதற்கு கடன் வாங்கிச் செல்கிறார்கள். மக்களை முட்டாள்களாகவும், பிச்சைக்காரர்களாகவும் வைத்திருக்க எப்போதும் யாராவது முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள். காடுகளை விற்று வங்கியில் போட்டிருந்த பணத்தை ஈமு கோழியில் போட்டார்கள் நிரந்தர வருமானத்துக்கு வழி செய்துவிட்டதாய் நம்பினார்கள். பின்னர் கூட்டமாய் கலெக்டர் அலுவலகம் போய் கையில் காகிதத்தைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள்.

பண்ணைகளில் நின்றிருந்த கோழிகளுக்கு தீனி வைக்கமுடியாமல் திறந்துவிட்டார்கள். தங்க நாற்கரச் சாலையில் அவைகள் பசியில் பயணித்தன. கிலோ ஆயிரம் என்று விற்ற ஈமு கறி சாதாரணப்பட்டவனுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. நடிகை நமீதா வேறு ஈமு சாப்பிட்டால் உடல் இளைக்கும், தொந்தி கரையும், என்றார். சரத்குமார், பாக்கியராஜ், பார்த்திபன் என்று எல்லோருமே ஈமு வளர்ப்பில் முதலீடு செய்து லாபம் அடையச் சொன்னார்கள். கடைசியில் சாலையில் ஈமுவை வேட்டையாடி… இல்லையில்லை கோழி அமுக்கு அமுக்கி கூறுபோட்டு கிலோ 25 ரூபாய்க்கு எடுத்துப்போய் சுவைத்தார்கள்.

இலவச வேட்டி, சேலை தருகிறார்கள் என்றால் கூட்டமாய் குவிந்து வரிசைபோட்டு நின்று காத்திருந்து வாங்கி வீடு வருகையில் அன்றைய பொழப்பு போய் 200 ரூபாய் இழப்பை யாரும் யோசிப்பதில்லை. கலைஞர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி வேற கார்டு குடுக்குறாங்க என்றால் அதற்கும் வரிசை போடுகிறார்கள். கண்ணு, மூஞ்சி, ரேகை, கைவிரலு எல்லாம் போட்டோ புடிச்சி கார்டு குடுப்பாங்களாம். அதை கொண்டுட்டு நாளைக்கி ஆசுபத்திரி போனோம்னா ஓசுலயே ஆப்ரேசன் பண்டி உடுவாங்களாம். அந்த அட்டையும் அஞ்சு வருசங் கழிச்சி அவிங்க வந்துட்டா மாத்தி தர்றேனுட்டு படுக்க வச்சி முழுசா ஸ்கேனு பண்டி மாத்தி தருவாங்க.
ஒன்று தோன்றுகிறது இப்போது. மூனுவேளை சோத்தையும் தினமும் உள்ளூர் மண்டபத்துல போடறேன். ஓட்டு போடுங்கன்னு சொல்லிட்டாங்கன்னா வேலை முடிஞ்சுது. சோத்துக்குத் தானே மக்கா இம்புட்டுப் பறப்பு!

கிராமப்புரத்திலிருந்து குறுநகரங்கள் வரை எங்கும் மக்கள் வரிசை வெய்யிலில் நின்று கொண்டே இருக்கிறது. வரிசையில் நின்றிருந்த மூதாட்டிகளின், கிழவர்களின் சாவும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. பணமதிப்பிழப்பு சமயத்தில் வங்கிகளின் முன்பாக மக்களின் வரிசை! ஆதார்கார்டில் இன்சியல் மாறிப்போய்விட்டதாயும், போட்டோ மாறி விட்டதாயும் வரிசையில் சனம் நிற்கிறது.

மானியத் தொகைக்கான பதிவு என்றால் வரிசை. இப்படி சாரி சாரியாக சனம் வரிசையில் நின்றுகொண்டேயிருக்கிறது. மொத்தமாக அவிழ்த்துப் போட்டு ஸ்கேன் செய்து பிற்பாடு ஒரு அட்டை வரும் மத்தியிலிருந்து என்று யாரேனும் சொன்னால் வரிசையில் நிற்கையிலேயே அம்மணமாய் நின்றுவிடும் மனதைரியத்திற்கு இப்போதிருந்தே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அட்டைகள் சனத்திற்கு எல்லா இடத்திலும் வேண்டும். ஆடுகளுக்குத் தான் மஞ்சள் டோக்கன் அவற்றின் காதில் பின் அடித்திருப்பார்கள். வரும் காலத்தில் குழந்தை பிறந்ததுமே மருத்துவமனையிலேயே அதன் காதில் டோக்கன் பின் செய்து அனுப்புவார்கள் என்றே நினைக்கிறேன்.

அம்மாயிகள் டிவியில் நாடகம் பார்த்தபடி மூக்கைச் சிந்தி சுவற்றில் தேய்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். மடியில் அமர்ந்திருக்கும் பேரப்பிள்ளைகள் சப்தம் போட்டாலோ சில்மிசம் செய்தாலோ சலிப்படைகிறார்கள். சித்த நேரம் நிம்மதியா நாடவம் பாக்க இதுகள் விடுதுகளா ஒன்னா? போயி எழுதுற வேலை இருந்தா எழுதித் தொலைய வேண்டியது தான? பேரப்பிள்ளைகளை கொஞ்சுவதற்குக் கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

இதில் சிறார்களுக்கு எங்கே கதை சொல்லி தூங்க வைப்பார்கள்? காலமாற்றத்தில் அம்மாயிகளுக்கு கதைகளே தெரியாமல் போய்விட்டன. பள்ளியில் மிஸ் சொன்ன கதையை பேரக்குழந்தைகள் தங்கள் அம்மாயிகளுக்கு சமீப காலங்களில் சொல்லிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிப் பெட்டி அம்மாயிகளின் நேரத்தை விழுங்கி விடுகிறது. வீட்டினுள் விளையாடும் பேரப்பிள்ளைகள் .பெசாதுகளாகி விடுகிறார்கள்.

நாடகங்களில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் வெள்ளிக்கிழமை அன்று தான் பிணத்தை நடுவீட்டில் போட்டு அழுது கொண்டிருப்பார்கள். பத்தரை மணி நாடகத்தில் ஒரு ஒப்பாரி என்றால் அது பெண் பிணம் என்றால் அடுத்த பதினொருமணி நாடகத்தில் ஆண் பிணம்.

டிவி நாடகத்தில் நடிகை ஒருத்தி தன் கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலப்பாள். அம்மாயிகள் நாடகத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அவர்களே பக்கத்தில் யாரும் இல்லாவிட்டால், ’இவள் இருக்காளே ஊரை ஒழிச்ச முண்டெ!’ என்று வாய் விட்டே கூறுவார்கள். மீடியாக்கள் இன்று அவர்கள் கட்டுக்குள்ளேயே நம்மை வைத்துக் கொண்டிருக்கின்றன. மின்சார தட்டுப்பாட்டால் பல வீடுகளில் பல நாடகங்களின் தொடர்ச்சி பார்க்க முடியாமல் டென்சன் மிகுதியில் மின்சாரத்துறை அமைச்சரையும், கடைசியாக வேலை முடிந்து வீடு வரும் கணவன்மார்களிடம் திட்டியும் எரிந்தும் விழுகிறார்கள். கூடிய சீக்கிரம் இவர்கள் மனநோய் விடுதிக்கு போய் மாத்திரை வில்லைகள் விழுங்க நேரிடலாம்.

சொந்தபந்தத்தில் யாரேனும் பெருசுகள் மேலே போய்ச் சேர்ந்து விட்டால், அடக் கெரகம் புடிச்ச கெழவியே சனி ஞாயிறு பாத்து செத்திருக்க கூடாது? இன்னிக்கி புதன்கிழமையாச்சே.. சீரியல் போயிடுமே! என்றுதான் நினைக்கிறார்கள்.

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி என்றால் டிவியில் ஐய்யோ பாவம் என்று உச்சு கொட்டிப் பார்க்கிறார்கள். சாமியாரு என்றாலே போதும்… அந்த நடிகையோட கெடந்தானே அவனா? என்கிறார்கள். இப்படியாக வாழ்வின் அங்கமாக டிவி பெட்டிகள் மாறிப் போய் விட்டதுதான்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசாங்கத்தை கண்டித்து ஊர்வலம் போகிறோம் வாருங்கள்! என்று அழைப்பு வைத்தால் வந்து கலந்து கொள்கிறேன் முன்னால போங்க! என்கிறார்கள். இப்பத்தான் தளபதி விஜய் அவந்தங்கச்சிய காப்பாத்த டுவாக்கி எடுத்துட்டு பைக்குல போறான், இப்பப் போயி போராட்டமாம். உள்ளார தூக்கி போட்டுட்டான்னா அங்க போயி எவஞ் சீரழியறது? என்று வசனம் பேசுகிறார்கள். நோகாமல் நோம்பி கும்பிட எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.

மெல்பர்னிலும், டாக்காவிலும், தெனாப்பிரிக்காவிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை மசக்காளிபாளையத்தில் அட்டனங்கால் போட்டு படுத்தபடி பார்த்து ரசித்து விடுகிறோம். பார்வையாளர்கள் அரங்கத்தில் புலி போலவும், கரடி போலவும், வேசம் போட்டு அமர்ந்து ஆட்டம் பார்க்கிறார்கள்.  ‘டெண்டுல் ஐ மிஸ் யூ’ என்று அட்டை எழுதி காட்டுகிறார்கள் பெண்கள். ’மம்மி ஐ ஆன் இன் ஹியர்!’ என்று ஒரு பாப்பா அட்டையை ஆட்டுகிறது! களத்தில் மட்டையோடு இறங்கும் டோனியை அட்டை காட்டி வரவேற்கிறார்கள். ’கோலி ப்ளீஸ் கிஸ் மீ!’ என்றொரு பெண் அட்டையைக் காட்டி வெறியாய் கத்துகிறது. விராட்கோலி களத்தில் மட்டையைப் போட்டு விட்டு வந்து அந்தப் பெண்ணுக்கு உம்மா கொடுத்துவிட்டு போய் மட்டை எடுத்து ஆடவில்லை என்றால் பார்வையாளர் அரங்கில் ரணகளம் ஆகிவிடும்போல் இருக்கிறது.
விளையாட்டுப் போட்டிகளில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி நமக்கு அக்கறை கிடையாது. யாரோ யார் வீட்டுக்கோ சம்பாதிப்பதை நாமும் காசு கொடுத்து கைதட்டி ரசிக்கிறோம். பாக்கியராஜ் ஈமு வளர்ப்பாருபோல நாமும் வளர்ப்போம், டெண்டுல்கர் பூஸ்ட் குடிச்சித்தான் எனர்ஜியா இருக்காராமா நாமும் பூஸ்ட் குடிப்போம். ஷாருக்கானே மைரோமேக்ஸ் போனுதான் வச்சிருக்காப்ல நாமும் வச்சிப்போம். திரிசாவே சோத்துல உப்பு போட்டுத்தான் திங்காங்களாம் நாமும் திம்போம். ஒவ்வொன்னையும் நம் ஆட்களுக்கு டிவியில் கற்றுக் கொடுக்கிறார்கள். நமது மூளை சரியாக இயங்குகிறதா என்ற அக்கறை நமக்குத் தான் வேண்டும்.
டிவியில் செய்திச் சேனல் பக்கம் ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு நாம் சென்றோமானால் சந்திப்பு என்ற பெயரில் விஐபி ஒருவரிடம் சேனல் தொழிலாளி, நீங்க முன்னேற்றப் பாதையில் சென்றமைக்கு முக்கியமாய் எதை காரணமாக சொல்றீங்க? என்பார். தன்னை அம்மா அப்பா வளர்த்த விதம் தான் என்று நம் காதில் கோணூசி ஏற்றிக் கொண்டிருப்பார். நிஜத்தில் அவரது அம்மா அப்பா தெருவிலோ, காப்பகத்திலோ இருப்பார்கள். குடும்பச் சொத்துகளை விற்று நகர்ப்புறம் வந்தவராக இருப்பார்.

விஐபி கண் வைத்தியர் என்றால் சேனல் தொழிலாளி காது கேளாமை, தொண்டை அடைப்பு பற்றி சம்பந்தமில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பார். அவரும் நிபுணர் ஆயிற்றே! விடுவாரா? காது மற்றும் தொண்டையில் வரும் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமே கண்ணில் சிசிகா பிசிகா தொற்றுப்பூச்சி பரவுவதால் தான் என்று குண்டு வீசிக் கொண்டிருப்பார். கவனித்து கேட்பவர்கள் கண்களை பாதுகாக்க வீட்டை விட்டே வெளியில் வர பயப்படுவார்கள். வெற்றி பெற்ற அரசியல் தலைவரிடம் தொகுதிப் பக்கம் போவீரா? என்று முட்டாள் தனமாக யாராவது கேட்பார்களா என்ன?

செய்திச் சேனலின் கீழ் தமிழில் வரிகள் நாம் படிக்க மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். உலகம், விளையாட்டு, இந்தியா, தமிழ்நாடு என்கிற தலைப்புகளில் செய்திகள் நகரும். அன்று தமிழ்நாடு என்ற தலைப்பில் செய்திகள் சென்று கொண்டிருந்தன. அதில் ஒன்று. தமிழக அரசு இலவசமாக வழங்கிய ஆட்டுக்குட்டியை கசாப்புக் கடையில் இருந்து பல்லடத்தில் அதிகாரிகள் மீட்டனர்.

டிகிரி முடித்து ரேடியோ சேனலில் தொழிலாளியாக சேர்ந்த பெண் அரைமணி நேர நிகழ்ச்சியை கொஞ்சிக் கொஞ்சிப் பேசி தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பார். எந்த ஊருங்க சுப்பிரமணி நீங்க? உங்க ஊர்ல மழையா? உங்களுக்கு குட்டீஸ் எத்தனை பேரு? என்ன தொழில் பண்றீங்க? கேள்விகள் வரிசையாக வந்து கொண்டிருக்கும்.
ஹலோ… திவ்யா மேடம்களா ?

ஆமாங்க .. உங்க பேர் சொல்லுங்க.

எம் பேருங்களா மேடம் .. சுப்புரமணிங்க…

எங்கிருங்து பேசறிங்க ?

டெலிபோன் பூத்துல இருந்து மேடம்.

ஹஹஹா… அதைக்கேட்கலீங்க சுப்புரமணி எந்த ஊருலிருந்து நீங்க பேசறீங்க ?

மொடக்குறிச்சில இருந்து பேசுறேன் மேடம்.

மொட்டக்குடிச்சியா ? எங்க இருக்கு ? எந்த மாவட்டம் ?

மொடக்குறிச்சிங்களா மேடம் .. ஈரோடு மாவட்டத்துல இருக்குங்க.

சரி என்ன பாட்டு உங்களுக்கு வேணும் ?

ஏதாவது புதுப்படத்துல இருந்து புது சாங் போடுங்க மேடம்.

சரிங்க சுப்பிரமணி… பாட்டை யார் யாருக்கு எல்லாம் டெடிகேட் பண்ணறீங்க ?

உங்களோட நிலா எப்பெம்முக்கும், உங்களுக்கும் , உங்க ஆத்தாவுக்கும்.

ஓ! தேங்க் யூ சுப்பிரமணி. சரி எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

நானா மேடம்… நான் அஞ்சாம் கிளாஸ் பாஸ் மேடம்.

சரி என்ன தொழில் பண்ணிட்டு இருக்கீங்க ?

செரைச்சுட்டு இருக்கேன் மேடம்.

புரியல எனக்கு… என்ன தொழில் அது ?

பார்பர் மேடம் நானு.

ஒரு நாளைக்கு எத்தனை துணிங்களை அயர்ன் பண்ணுவீங்க சுப்பிரமணி?

நம் சுப்பு குழம்புவார். நாம சரியாத்தான பேசினோம்? அந்த நேரத்தில் அடுத்த கேள்வி வந்திருக்கும். லைன்ல இருக்கீங்களா? பொழுது போகலை என்று போனைப்போட்டு தானும் கொழம்பி மத்தவங்களையும் கொழப்பி பைத்தியமாக்கும் இந்த கொண்டாட்டம் தினமும் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கின்றன.
முன்பாக கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளின் விற்பனை விலை 1000. எலக்ட்ரிகல் கடைக்காரர்கள் அதை வாங்கி விற்ற விலை 1300. படிப்பாளிகளுக்கு அரசு வழங்கும் கணிணி விலை 3000. படிப்பாளிகள் கமுக்கமாய் விற்றார்களா? பயனாளிகள் வாங்கினார்களா? என்று விபரம் ஒன்றும் தெரியவில்லை. எப்படியோ ஏதாவது ஒன்று இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சந்தேகத்திற்கு இதை விசாரித்தபோது, போலீசோ? என்று பேச மறுக்கிறார்கள். சொந்த பந்தக்களுக்குள் மட்டுமே இந்த விசயங்கள் நடந்து முடிந்து விடுகின்றன! என்கிறார்கள்.

அறிந்த சொந்தத்தில் ஆண் குழந்தை பிறந்திருந்தது. முதல் நாளே பறந்து கட்டிப்போய் பார்க்க வீட்டில் ஆசைப்பட்டாள். இருந்தும் அடுத்த நாள் தான் செல்ல முடிந்தது. ஆண் குழந்தை பார்க்க லட்சணமாய் இருந்தது. ஆனால் பனைமர நிறத்தில் சருமம். குழந்தையை எல்லோரும் கறுப்பு பையன். கட்டங்கரேல்னு அப்பனின் நிறங்கூட இல்லை என்றார்கள். ஆனால் அப்பனின் நிறம் தான் இருந்தான். அம்மா மாநிறம் தான் என்றாலும் அம்மாவின் பெரிய கண்கள் அப்படியே இருந்தது பையனுக்கு.
யாரோ பார்க்க வந்தவர்களில் ஒரு பெண், இதுக்கெல்லாம் கவலைப்படவே வேண்டாமக்கா! ரோசாப்பூவை பொறிச்சு காயவெச்சு பொடி பண்ணி பேபி சோப் போட்டு குளிக்க வைக்கிறப்ப பொடியக் கூடச் சேர்த்தி மூனு மாசம் குளிக்க வச்சம்னா மாநெறத்துக்கு வந்துடுவான். அப்புறம் ஆம்புளப்புள்ள தான கறுப்பா இருந்தா என்ன இப்ப? பொம்பளப்புள்ளயா இருந்தாக்கூட நாளைக்கி பொண்ணு பாக்க வர்றவன் கறுப்புன்னு சொல்லுவான், என்றது.

கூட்டத்தில் நின்றிருந்த இன்னொரு பெண் மெடிக்கல் போயி செவப்பழகு கிரீம் வாங்கி ஒருவருசம் தேச்சி உட்டா செவப்பாயிடுவான் என்றது. ஒருத்தி பிள்ளையே பெக்கலை என்றால் மலடி என்று சொல்லும் இதே கூட்டம் பெற்றுவிட்டாள் என்றதும் என்னா நாயம் பாருங்கள்!

எல்லோரும் டிவியை உன்னிப்பாக பார்க்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. நம் ஆட்களுக்கு சிவப்பழகின் மீது ஆரம்ப காலம் தொட்டே மோகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. குழந்தை பெறும் காலம் வரை குங்குமப்பூ சாப்பிடும் வழக்கமும் இருக்கிறது. சிகப்பழகு கிரீம்களும், லோசன்களும் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்து விட்டன. பெண்களுக்கு என்று மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் கிரீம்கள் உள்ளன என்று விளம்பரங்கள் தூள் கிளப்புகின்றன.

கொஞ்சம் முன்பாக சொட்டைத்தலையில் முடி குபீரென வளர்ந்து விடுமென ஒரு எண்ணெய் பாட்டில் விளம்பரம் வந்தது. பழைய எண்ணெய் பாட்டில்களை எல்லாம் தூக்கி வீசுங்கள் என்கிறது அந்த விளம்பரம். கறுத்த சருமம் கொண்டவர்கள் மனநோய் பீடிக்கப்பட்டவர்களைப் போல முதலில் காட்டுகிறார்கள். முதல் வாரம், இரண்டாம் வாரம் என்று கிரீம் பூசி பின் பளீரென ரோட்டில் சென்றால் ஏகப்பட்ட ஏக்ஸிடெண்டுகளை உருவாக்கி விடுபவள் போல மனநோயிலிருந்து தெளிவாகி வாழ்க்கையை எதிர்கொள்ள கிளம்பி விடுகிறாள். இதில் மெடிக்கல் கடையில் தான் ஒரிஜனல் கிடைக்குமெனவும், மளிகை கடையில் டூப்ளிகேட் தான் வருகிறது என்றும் பெண்களே புரளி கிளப்பி விடுகிறார்கள்.

வீட்டில் பொழுதுக்கும் அமர்ந்து டிவி பார்க்கும் பெண் கிரீமை முகத்தில் அப்பிக் கொண்டு தான் பார்க்கிறார். சீக்கிரம் சிவப்பாகி விடுவோம் என்ற நம்பிக்கை தான். வேலை முடிந்து களைப்பில் வரும் கணவனிடம், இன்னிக்கி கொஞ்சம் சிவப்பாயிட்டனா? என்கிறார்கள். சிவப்பானவர்கள் எல்லோரும் மூளைக்காரர்கள் என்றும் கறுப்பானவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்றும் பேசுகிறார்கள்.

ஆணோ பெண்ணோ நிறம் குறைவு என்றால் தன்னம்பிக்கையே இல்லாமல் வாழ்வில் தோற்றுப் போய் விடுகிறார்களா என்ன? வெளி நாடுகளில் சிகப்பழகு கிரீம்கள் என்று எதுவும் கிடையாது. ஆனால் இங்கு அப்படிச் சொல்லித்தான் கல்லா கட்டுகிறார்கள். நாம் மக்களை குறை சொல்லலாமே தவிர கிரீம் தயாரிப்பாளர்களை அல்ல. இந்தியாவில் புதிதாக வரும் எந்த தயாரிப்பையும் எளிதாக விற்க முடியும். இங்கு கூட்டம் கூட்டமாய் ஏமாளிகள் இருக்கிறார்கள். துளி அளவுகூட யோசிக்காமல் இவர்களால் தான் பொருள்களை வாங்க முடியும். இவர்கள் கணக்கெல்லாம் வெளி நாட்டுக்காரன் தயாரிப்பு சோடை போகாது என்பது தான்.

இன்னும் பல காலம் நாம் சிவப்பழகு மோகத்தில் தான் இருக்கப் போகிறோம். வர்ண வர்ணமாய் கிரீம்கள் வந்து கொண்டு தான் இருக்கும். நம் எண்ணங்களை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்பது தெரியவில்லை. இப்படி சிவப்பழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக சக மனிதனை முதலில் மனிதனாக நேசிப்போம். அதேபோல் பெண் பார்க்க சென்ற இடத்தில் தட்டிக் கழிக்க பொண்ணு கறுப்பு என்று சொல்லாமல் இருப்போம். அதேபோல் மாப்பிள்ளை கறுப்பு என்று பெண் தட்டிக் கழிக்காமல் இருக்கவும் வழிகோலுவோம். சாயம் பூசிக் கொள்வதற்கு நாமெல்லாம் நடிகர்களா என்ன?

வந்தாரை வாழவைக்கும் பழக்கம் நம் நாட்டில் தொன்று தொட்டே உண்டு. காலமாற்றத்தில் அதுவெல்லாம் வழக்கொழிந்து விடும் போலத்தான் இருக்கிறது. தொடர் நாடகத்தில் மும்முரமாய் ஆழ்ந்திருக்கும் வீட்டுக்கு, உறவினர்கள் சென்றிருந்தால் கவனித்திருக்கலாம். வாங்க, என்ற வாய் வார்த்தையோடு சரி. விளம்பர இடைவேளையின் போதுதான் ’உஸ் அப்பாடா!’ என்று எழுந்து ’ஏதாவது சோலியா வந்தீங்களா?’ என்பார் அந்த பெண்மணி. உறவினருக்கு தண்ணீர் சொம்பில் கொண்டுவந்து தரவேண்டும் என்பதையே மறந்திருப்பார். வந்தவரே வாய் விட்டு கேட்பார். ’துளி தண்ணி இருந்தா தாருங்களே! வெய்யில்ல வந்ததுக்கு தாகமுன்னா தாகம் அப்படித் தாகம் அடிக்குது!’ என்பார். மறந்தே தொலச்சிட்டேன் பாருங்க! என்று சமையலறைக்கு ஓடுவார் அவர்.

சுதந்திர தினத்தன்று முழுக்க முழுக்க சினிமா நிகழ்ச்சிகளை காட்டிய சேனல்கள் தமிழகத்தின் முன்னணி சேனல்கள். அப்படியே இருந்தாலும் ஒரு சினிமா நடிகர் நமக்கு சுதந்திர தின வாழ்த்தை தெரிவிக்கிறார். நான் போய் என் நண்பனிடம் சொன்னேன். இப்பத்தான் தமன்னா எனக்கு சுதந்திரதின வாழ்த்து சொன்னாள்! என்று. உன் போன் நெம்பர் அவகிட்ட எப்படி போச்சு? என்றான். அட டிவியில இப்பத்தான் நாட்டில் பொறந்த ஒவ்வொருத்தனுக்கும் சொன்னாள்டா! என்றேன். பயல் டென்சன் ஆகிவிட்டான்.

காதலர்கள் தினம், மழலையர்கள் தினம், அப்பனுக தினம், லூசுப்பயலுக தினம் என்று இருப்பது போல் இன்று சுதந்திர தினமும் கூடவே சேர்ந்து விட்டது. நூறு பேருக்கு செல்போனில் வாழ்த்து அனுப்பி விட்டால் அன்றைய தினம் முடிந்தது. காந்தி ஜெயந்திக்கு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்தார்கள். எந்த ஊரில் என்றுதான் தெரியவில்லை.

தொலைக்காட்சியில் தொடர்களை பலப்படுத்த சினிமாவிலிருந்து ஒதுங்கிய நடிகைகளை கூட்டிவந்து சேவையைத் தொடர வாய்ப்பளிக்கிறார்கள் நிறுவனத்தினர். வயசு போனாலும் மவுசு கூடிக் கொண்டே இருக்கிறது அவர்களுக்கு. ஒரு சேனல் நிறுவனம், அப்படியா! என்று பார்த்து விட்டு வேறொரு நடிகையைத் தேடி ஓடுகிறது. சக்கரை வியாதியிலும், மூட்டு வலியிலும் அவதிப்படும் நடிகையை வாகனம் போட்டு தூக்கி வருகிறார்கள் இயக்குனர்கள்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் நடுத்தர வர்க்கத்தையே குறியாக கொண்டு தொடர்களை தயாரிக்கின்றன. பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகைகள் கிளிசரின் போட்டு அழுகிறார்கள். நடுத்தரவர்க்கம் கேபிள்காரனுக்கு காசு கொடுத்து அழுகிறது.

திருமணம் முடிந்த பெண் தன் காதலனோடு ஊர் சுற்றுவது போல் பட்டையை கிளப்பி தொடரும் போடுகிறார்கள். புருசனிடம் இன்னொரு பெண்ணை கட்டிக் கொண்டு சுகமாய் வாழச் சொல்கிறார்கள் மனைவிகள். இன்று கிராமங்கள் கிராமங்களாக இல்லாமல் அடையாளம் இழந்து போனதற்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒரு காரணமாய் அமைந்து விட்டது. குடும்ப அமைப்பிற்கு எதிரான அனைத்து விசயங்களையும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்புவதை யாரும் கண்டு கொள்வதில்லை.

நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல விசயங்களைத் தரும் பல தொலைக்காட்சிகள் இருக்கின்றன. யாரும் அதை பார்ப்பதில்லை. அடுத்த வீட்டுக்கு எப்படி குழி பறிப்பது? அடுத்தவள் கணவரை எப்படி வளைத்துப் போடுவது? மாடு முட்டச் செய்து மாமனை எப்படி கொல்வது? மாமியாரை கொல்ல வேலைக்காரியை துணைக்கு அழைப்பது எப்படி? என்று பார்த்து அறிவை மழுங்கடித்துக் கொள்கிறார்கள். கெட்டுப்போக வேண்டுமென்றால் நாடகங்களை பார்த்துத் தான் ஒருவர் கெட்டுப் போக வேண்டுமென்பதில்லை. இருந்தும் சமீப காலங்களில் கொலைகள், தற்கொலைகள், ஓடிப்போதல், திருட்டு உறவு இப்படி அதிகரித்து விட்டன. மர்ம முடிச்சு எங்கே இருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். தொடர்களை பார்ப்பதும், ஒதுக்குவதும் அவரவர்கள் சவுகரியம்.