என்னைப் பொறுத்தவரை மென்நாடகம் (Melodrama) என்பது துன்பப்படுவதற்கான பாதுகாப்பான வழி, ஏனெனில் உங்கள் துன்பம் பொய்யானது. அதனால்தான் நான் மென் நாடகத்தை விரும்புகிறேன்.

-லூயிஸ் நெக்ரோன்

உறவுகள் புனிதமானவை என்பது சென்ற நூற்றாண்டின் அடிநாதம். இந்த நூற்றாண்டுப் புதியவர்களுக்குக் கூட்டுக் குடும்பம் எனும் சொல்லே சரியாய் ஒலிப்பதில்லை. அடுத்தடுத்த வீடுகளில் உறவினர்கள் வசிப்பதையே பழமைத்தனமாகக் கருதும் மனப்பாங்கு வலுத்துவருகிறது. அடுக்கு மாடிச் சிறைகளையே மனிதன் விரும்புகிறான். ப்ரைவஸி எனும் பண்டத்துக்கு விலை தருகையில் ஸ்ட்ரெஸ் எனும் உபபண்டம் கட்டாய இலவசமாய்க் கையளிக்கப் படுகிறது.

வேறொரு காலம் இருந்தது. குடும்பத்தில் ஒருவர் வேலை செய்து எல்லோரையும் காத்தார்கள். மூத்தவன் அண்ணன் மட்டுமன்றித் தகப்பன் விட்டுச் சென்ற கடமைகளை எல்லாம் தன் தலைமேற் சுமந்து நிறைவேற்றுபவனாக இருந்தான். அக்காக்காரி அம்மாவைப் போலவே தனக்கடுத்துப் பிறந்தவர்களை வளர்த்தெடுத்தாள். உணவை விட்டுக் கொடுத்தார்கள். பழைய உடைகளோடு சமரசம் அடைந்தார்கள். உறைவிடத்தில் தம்பி தங்கைகளுக்குப் பேரிடம் தந்து தாங்கள் சிறியதோர் இடத்திற் சுருங்கிக் கிடந்தார்கள். உறவு என்பது உலகத்தை உயிர்க்கச் செய்யும் இடுபொருளாக விளங்கிற்று.

சாரதியின் மனைவி பார்வதி, தம்பி மணி, தந்தை மற்றும் சித்தப்பா ராஜாபாதர் இவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்பவன். இரயிலில் எஞ்சின் ட்ரைவரான சாரதிக்கு வளர்ப்புத் தங்கையான சுமதியை ஒரு டாக்டராக முன்னுக்குக் கொண்டுவந்தே தீரவேண்டும் என்பது வாழ்வின் லட்சியம்.சித்தப்பா ராஜாபாதர் குறுக்கு வழிகளில் முன்னேறத் துடிக்கும் வஞ்சகர் சுமதிமீது காதலோடு வாழும் பார்வதியின் தம்பி பசுபதி. சீஃப் இஞ்சினியர் பொன்னம்பலத்தின் அறிமுகமும் அன்பும் கிடைக்கப் பெறுகிற சாரதி தன் தங்கையை டாக்டராக்குவதைத் தன் உயிரைக் கொடுத்து நிறைவேற்றுவதே பச்சை விளக்கு படத்தின் கதைச்சுருக்கம்.

சிவாஜி மிகை நடிகராக அறியப்பட்டவர் என்றபொதும் மெனுகார்டில் முரண்சுவை பதார்த்தங்கள் வரிசையாக இருக்கிறாற்போல் நடிப்பின் வகைமைகள் பலவற்றையும் முயன்று பார்த்தவர் என்பதும் நிசமே. சிவாஜி ஒரு அண்டர்ப்ளே நடிகராக நடித்து போற்றப்பட்ட படங்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று பச்சைவிளக்கு. மத்யம வகுப்பின் மனிதனாக குடும்பத்தின் பாரந்தாங்கியாக ப்ரெட் வின்னராக அளவான மகிழ்ச்சியும் எப்போதும் அயர்ச்சியும் முடிவெடுக்க முடியாத இயலாமையின் தவிப்பையும் பல இடங்களில் சிவாஜி வெளிப்படுத்திய விதம் அற்புதமானது. எஸ்.வி.ரங்காராவ், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா என மூன்று நடிப்பு அசுரர்கள் இந்தப் படத்தில் இருப்பதை அனாயாசமாகக் கையாண்டிருப்பார் சிவாஜி. நடிப்பைப் பயில விரும்புவோர்க்கு இந்த மூவருக்கும் சிவாஜிக்கும் இடையிலான காம்பினேஷன் காட்சிகளிலெல்லாம் சிவாஜி எப்படி நடிக்கிறார் என்பதைக் கொண்டே நடிப்பின் கடினங்களை மேலாண்மை செய்வதற்கான உத்திகளை விளக்கிச் சொல்ல முடியும்.

அழகான உணர்வுகளின் கூட்டுத் தொகையாக பச்சைவிளக்கு மனித மதிப்பீடுகளின் பூக்கூடை. இன்றைய நவ வாழ்வு நமக்கு விதித்திருக்கும் பல கண்காணா சங்கிலிகள் முற்றிலுமாக இல்லாத முன் பழைய சொர்க்ககாலம் இப்படத்தின் இயங்குகளம். வண்ணமயமான அத்தனையையும் ஒருபுறம் ரசித்துக் கொண்டே விரும்பிக் கொண்டே பற்றிக் கொண்டே இன்னொரு புறம் முன்னர் பழைய மனிதர்களின் கருப்புவெள்ளை சினிமாக்களை ஏக்கமாகப் பார்ப்பதும் நிகழாமலா இருக்கிறது?

எழுபது எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு பச்சை விளக்கு போன்ற திரைப்படங்களை எப்போது எங்கே பார்க்க வாய்த்தாலும் கண்கள் லேசாய்ப் பனிப்பதற்கும் உதடுகள் உலர்ந்து போய் சொல்லொணா இறுக்கம் அப்போது துவங்கி நாளெல்லாம் கூடவே முதுகிலிருந்து வழிந்தபடி பயணிக்கிற சொந்த நிழலின் அன்னியம் போலவே நிகழ்கிறது.

கேள்வி பிறந்தது அன்று, அவள் மெல்லச்சிரித்தாள், குத்துவிளக்கெரிய போன்ற க்ளாசிக் பாடல்களோடு பச்சை விளக்கு படத்தின் மறக்க முடியாத நற்பாடலாக இன்னுமின்னும் பகிரப்பட்டும் பாடப்பட்டும் வருவது ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது டி.எம்.எஸ். எனும் மாமேதையின் குரல்வழி வழிந்தோடிய இசைநதி எப்போதும் வற்றாமற் பாடலாய்க் கிட்டுவது.

படிக்காத விவசாயியான தன் மைத்துனன் பசுபதி தங்கை சுமதி மீது ஆசை வைத்திருக்கிறான் என்பதை அறிய நேரும் போது அதனை ஆட்சேபித்து விடுவான் அண்ணன் சாரதி. அதே பசுபதியை வேறுவழியின்றி சூழலின் காரணமாகத் தன் தங்கை சுமதி மணக்க நேரும் போது மனம் குழம்புவதையும் தங்கையும் மைத்துனனும் குடித்தனம் நடத்தக் கிளம்பும் போது தவிப்பையும் வெளிப்படுத்திய விதம் சொல்லி விளக்க முடியாத அற்புதமாயிருக்கும். பேசிக் கொண்டே அழுது மைத்துனனின் தோளில் துவளுவதை யார் வேண்டுமானாலும் நடிக்கக் கூடும். ஒரே ஒரு சிவாஜியால் மட்டுமே நிஜமென்று நிகழ்த்த முடியும். நூற்றுக்கணக்கானவை சிவாஜி படங்கள். அவற்றின் மீதான நிரந்தர ஒளி நல்கும் ஏ.பீம்சிங்கின் பச்சை விளக்கு.