நாடகம், கலை, இலக்கியம், திரைப்படம், பத்திரிக்கை பதாகைகள் மற்றும் சாளரக் காட்சிகள் ஆகிய யாவையும் நமது புரையோடிய உலகின் அனைத்து வெளிப்பாடுகளையும் சுத்தப்படுத்தி ஒரு தார்மீகமான அரசியல் மற்றும் கலாச்சார யோசனையில் ஆழ்த்த வேண்டும்.

-அடால்ஃப் ஹிட்லர்

செல்வந்தன் ஹரிதாஸ் முதலில் மனைவி பேச்சைக் கேட்டுக் கொண்டு தாய் தந்தையரை புறந்தள்ளுகிறான். பிறகு ரம்பா எனும் நடனமாதுவின் பரிச்சயம் கிடைத்ததும் அவளுக்காக மனைவியை ஏய்க்கிறான். ரம்பாவோ தன்னை அவமானப்படுத்திய ஹரிதாஸின்  மனைவி லட்சுமியைப் பழிவாங்க திட்டம் தீட்டி முதலில் தாய் தந்தையரிடமிருந்து ஹரி லட்சுமி இருவரையும் பிரித்து பிறகு ஹரியின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்கிறாள்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து லட்சுமியோடு செல்வந்தத்தை இழந்த ஹரிதாஸ் வெளியேறுகிறான். திடீரென முனிவர் தோன்றுகிறார். அவரை ஹரி ஏளனம் செய்கிறான். அவனது கால்கள் துண்டாகின்றன. அவன் முனிவரைக் கெஞ்சுகிறான். அவனது தாயும் தந்தையும் அங்கே வருகையில் முனிவர் மறுபடி அவனுக்குக் கால்களை அளிக்கிறார். தாய் தந்தை ஹரி மூவரும் சேர்கிறார்கள். பிறகு லட்சுமி தன் தந்தை வீட்டுக்குக் கோபித்துக் கொண்டு போய்விடுகிறாள்.

அவரோ அவளை நீ உன் கணவனோடுதான் இருக்க வேண்டுமென்று அனுப்பிவிட மறுபடி வந்து மூவரோடு இணைந்து நால்வராகின்றனர். எல்லா சொத்துக்களையும் அரசர் ரம்பாவிடமிருந்து பறித்து மாதவிதாஸிடம் வழங்குகிறார். ஹரிதாஸ் தன் சொத்துக்களை தானம் செய்துவிடு என மாதவிதாஸ் வசமே தந்துவிடுகிறான். ரம்பா அரசரால் மன்னிக்கப்பட்டு அவளும் ஆன்மீகத்தைத் தன் பாதையென்று ஏற்கிறாள். தாய் தந்தையர் மனம் கோணாமல் அவர்களுக்குச் சேவை புரியும் ஹரிதாஸின் கண்களுக்கு கிருஷ்ணபரமாத்மா காட்சியளிக்கிறார். அவனோடு அவனது குடும்பத்தார் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கிறது. படத்தின் மொத்தம் இருபது பாடல்களுக்கு முன்பின்னாய் இந்தக் கதை நமக்கெல்லாம் காணக்கிடைக்கிறது.

பாபநாசம் சிவன், எம்கேடி கூட்டணி பல நல்ல பாடல்களைத் தமிழ்த் திரைக்கு அளித்தவர்கள். இந்தப் படத்தில் பாபநாசம் சிவன் இசையமைத்ததை பதிவுசெய்து அளித்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். இதன் முதல் காட்சியே வசனத்திலிருந்தல்ல வாழ்விலோர் திருநாள் என்றுதான் ஆரம்பிக்கிறது. தீபாவளி ரிலீஸை முன்னிட்டு திட்டமிடப்பட்டதோ என்னவோ மன்மத லீலையை வென்றார் உண்டோ என் மேல் உனக்கேனோ பாராமுகம் என்று பாகவதர் பாடிய பாடல் காலங்களைக் கடந்து இன்றளவும் தமிழின் க்ளாசிக் ஆரம்பங்களில் ஒன்றெனத் திகழ்கிறது.

பாகவதரின் குரல் வகைமைகளுக்குள் அடங்காதது. மென்மையும் உறுதியும் மிக்கது. ஒப்பிடுவதற்குச் சிரமமான தனித்துவம் மிக்கது. ஒரே நபரின் அடுத்தடுத்த பாடல்கள் கேட்பவரைப் பரவசத்தில் ஆழ்த்துவதற்கு அவற்றிடையே தொடர்பொதுத் தன்மைகள் மிகுந்திருத்தல் அவசியம். ஆனால் பாகவதர் தன் குரலைப் பொதுவில் நிறுத்தித் தொனி என்பதைத் தன் தனித்த அடையாளமாக மாற்றுவதைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். இதே படத்தில் இடம்பெறுகிற அன்னையும் தந்தையும் பாடலாகட்டும் கிருஷ்ணா முகுந்தா முராரே ஆகட்டும் வெவ்வேறு தன்மைகளில் பெருக்கெடுப்பவை. தனித்தொலிப்பவை.

இளங்கோவன் எழுதிய கதை வசனத்தை இயக்கியவர் சுந்தர் ராவ் நட்கர்னி. வசனங்கள் ஆங்காங்கே தூய தமிழும் பல இடங்களில் வடமொழிக் கலப்புடனும் அமைந்திருந்தது இன்றைக்குப் புதிதாய்க் கேட்க வாய்க்கையில் வினோதமாய் ஒலிக்கிறது. முதன் முதலில் சந்திக்கும் ஹரிதாஸ், ரம்பா இருவரையும் உடனிருப்போர் அறிமுகம் செய்து வைக்கும் காட்சி ஒரு ஸாம்பிள் இங்கே “சகல சம்பர்ண கலா பூஷித தர்க்க சாஸ்த்ர பாண்டித்ய சங்கீத ரசஞான ஸ்ரீப்ரிய ஸ்ரீமான் ஹரிதாஸ் ப்ரபு” என ஹரிதாஸை ரம்பாவிடம் அறிமுகம் செய்துவிக்கிறான் கண்ணன். பதிலுக்கு இன்னொருவர் முன்வந்து “நாட்டியக் கலாமணி நாரீரமணி கானலோல வீணாவாணி வேணுகான வினோதினி குமாரி ரம்பா…” என்று ஹரிதாஸூக்கு ரம்பாவை அறிமுகம் பண்ணுகிறார்.

டி.ஆர்.ராஜகுமாரி, என்சி, வசந்தகோகிலம், டி.ஏ மதுரம் என மூன்று நடிகைகளின் வெவ்வேறு பாத்திர வெளிப்பாடுகளும் ஹரிதாஸ் படத்தை வெற்றிகரமாக்கியதில் பெரும்பங்கு வகித்தவை. என்.எஸ்.கிருஷ்ணன்., டி.,ஆர்.ராமசாமி அண்ணாஜிராவ், எஸ்.ஆர்.கிருஷ்ணன் என நடிகர்களும் அவரவர் பாத்திரங்களில் பொருந்தி நடித்தனர். முக்கியமாக என்.எஸ்.கே மதுரம் இணையின் இயல்பான காதலும் திருமணமும் பின்னர் அவர்கள் வாழ்வில் வந்து செல்லும் மாதவிதாஸ் பாத்திரத்தில் நடித்த டி.ஆர்.ராமசாமியின் சிண்டுமுடிதலை கலைவாணர் சமாளிக்கிற விதமும் குறிப்பிடத்தக்கவை.

ஹரிதாஸின் கதை எளிமையான ஒன்று. சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அல்ல அதற்கு முந்தைய காலத்தின் கதையாக்கத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டிய பழைய கதை. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரைப்படங்களின் ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களின் வழக்கமான கட்டுமானத்தை அப்படியே பின்பற்றியே திரைப்படங்களை எடுக்க முனைந்தார்கள். திரைக்கதை என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மக்களுக்குப் பரிச்சயமான புராண இதிகாச கதைகள் அறிந்த சம்பவங்களைக் கலைத்தும் சேர்த்தும் வெட்டியொட்டியும் செய்யப்பட்ட கதைகள் போதுமானதாக இருந்தன.

கண்முன் நிகழ்த்துக் கலையாகப் பார்த்துப் பரிச்சயமான கதைகளைத் திரைக்கு அப்பால் நிசமாகவே நின்றும் நடந்தோடியும் நடிப்பதாகவே திரைப்பட ரசிகனின் ஆரம்ப எண்ணங்கள் வாய்த்தன. அவர்களைத் திரைக்கு அழைத்து வருவதற்கான பெரிய சாகசமாகத் திகழ்ந்தவை பாடல்கள். அது பாடல்களின் காலம்.

எம்.கே.டி சரசரவென்று புகழ் ஏணியில் ஏறியவர். உச்சம் தொட்டவர். அங்கேயிருந்து வீழ்ந்தவர். ஹரிதாஸின் கதையின் நகர்திசைக்கும் அவரது வாழ்க்கைக்குமான பெரிய வித்யாசங்கள் இல்லை. 1944ஆமாண்டு நவம்பர் 8 ஆம் தேதி சினிமா தூது பத்திரிக்கையை நடத்திய லட்சுமிகாந்தன் கத்திக்குத்துக்கு ஆளாகி இன்ஸ்பெக்டரிடம் மரண வாக்குமூலமளித்து மறுதினம் பெரிய ஆஸ்பத்திரியில் உயிரிழந்து உடலானார். அன்றைய காலகட்டத்தின் மகா பிரபலங்கள் மூவர் ஒருவர் கோவை பட்சிராஜா குழுமத்தின் உரிமையாளர் செல்வந்தர் ஸ்ரீராமுலு. அடுத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூன்றாமவர் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜபாகவதர்.

மூவருக்கும் லட்சுமிகாந்தன் கொலைக்கும் முகாந்திரம் உள்ளதென வழக்குத் தொடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரில் ஸ்ரீராமுலு மட்டும் குற்றம் நிரூபணமாகாமல் பின்னர் விடுவிக்கப்பட்டார். என்.எஸ்.கே மற்றும் எம்.கே.டி. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசாங்கம் ஆகப் பரபரப்பான இரண்டுபேரின் கால்ஷீட்டுக்களை மொத்தமாகக் கைப்பற்றியது. சினிமாவும் நிசமுமாய் இருவேறு உலகங்கள் அதிர்ந்தன. பின் காலத்தில் அவர்கள் இருவரும் அதே வழக்கை மறுமுறை நடத்தியதில் விடுவிக்கப்பட்டார்கள் என்றாலும் இழந்த புகழும் பொருளும் மீளவில்லை.

என்.எஸ்.கே பலவித பாத்திரங்களை ஏற்றார் எனினும் எம்.கே.டி 1959 ஆமாண்டு மரிக்கும்வரை மொத்தம் அவர் நடித்தது 14 படங்கள்தான். ஹரிதாஸ் அவர் நடிப்பில் உருவாகி ஒரு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி அடுத்த இரண்டு தீபாவளிகளைத் திரையரங்கில் பார்த்து மொத்தம் 110 தொடர்ச்சியான வாரங்கள் ஒரே அரங்கில் ஓடிய மாபெரும் பெருமையை அடைந்தது. பாகவதர் லட்ச ரூபாய் சம்பளம் பெற்றார் என்பர் விவரமறிந்தோர். இன்றைக்குப் பல கோடிகளுக்குச் சமம். தன் இறுதிக் காலத்தில் பக்தி மார்க்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பாடல்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து எண்ணிலடங்காத இதயங்களைக் கவர்ந்த மாபெரிய நட்சத்திர பிம்பம் எம்.கே.டி. அவருடைய குரல் அவர் வாழ்ந்த காலம் இரண்டையும் இணைத்துப் பார்க்கையில் புரியவரும் பேருரு.

ஹரிதாஸ்: வேர்ப்பலா

முந்தைய தொடர்: http://bit.ly/33rBHkk