ஒருவர் தனது விருப்பங்களைத் தான் நேசிக்கிறார்.விரும்பப் படுபவைகளை அல்ல.

– ஃப்ரெட்ரிக் நீட்ஷே

கே.எஸ்.ரவிக்குமார் தன் அதிரடி வணிக வெற்றிகளால் கவனம் ஈர்த்தார். ரஜினிகாந்துடன் முத்து, படையப்பா, லிங்கா. கமல்ஹாஸனுடன் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம். அஜீத்தை வைத்து வரலாறு, வில்லன். விஜய் நாயகனாக மின்சாரக் கண்ணா என்று அவருடைய காம்பினேஷனுக்கென்று தனித்த மார்க்கெட் இல்லாமல் இல்லை. அப்படியான படங்களில் ரவிக்குமார் இயக்கிய தசாவதாரம் கமலும் அவரும் சேர்ந்து உருவாக்கிய அதுவரையிலான தமிழ்ப் படங்களில் மிகப் பிரமாண்டமான படமாக விரிந்தது.

நடிகனாக ஜெயிப்பவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் தன்னைக் காண்பது கூடுதல் பரவசம். தனக்கென்று தானே கோர்த்துச் சூடிக் கொள்கிற நன்மாலை. மூன்று நான்கு வேடங்களிலெல்லாமும் நடிப்பது சத்தியமாகக் கதையின் தேவை அல்ல. ரசிகனைப் பரவசப்படுத்துகிற சாக்கில் தன்னைத்தானே ஊக்கம் செய்து கொள்வதற்கான ஏற்பாடு. வேறு எந்த நிலத்திலும் இப்படி ஒரே மனிதன் ஒரே படத்தில் பல வேடங்களை ஏற்றல் என்பது கிடையாது. இங்கேயே கன்னட மலையாள மொழிகளில் அப்படி நடிப்பதைப் பெரிதாக ரசிக்க மாட்டார்கள். இந்தி தெலுங்கு தமிழில் அமோக விளைச்சலுண்டு.

ஒருமுறை இந்தியின் பிரபல நடிகர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது அப்போதுதான் அவர் மூன்று வேடங்களில் நடித்து மிகவும் பரபரப்பாக ஒரு படம் பேசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பயணம். அயல்நாட்டில் அவர் சந்திக்க வாய்த்த அந்த ஊரின் திரையுலக மனிதரிடம் இன்னார் மூன்று வேடத்தில் நடித்த படம் சக்கை போடு போடுகிறது எனச் சொல்லி அறிமுகம் செய்தபோது அவர் சீரியஸாகவே ஏன் மற்ற இரண்டு வேடங்களுக்கு உகந்த நடிகர்கள் உங்கள் ஊரில் கிடைப்பதில்லையா? எனக் கேட்டாராம். நாம் கேட்டிருக்க வேண்டிய வினா அவ்வளவு தொலைவிலிருந்து ஒலித்திருக்கிறதல்லவா?

சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்கள் ஏற்றார். எம்.என்.நம்பியார் திகம்பர சாமியார் படத்தில் பதினோரு வேடங்களில் தோன்றினார். ரஜினி மூன்றுமுகம் கொண்டார். கமல் மைக்கேல் மதன காமராஜனில் நான்கு வேடம் பூண்டார். இவையெல்லாமும் மக்களால் பெரிதாக ரசிக்கப்பட்ட படங்களே. தசாவதாரம் சுனாமி தாக்கியதற்கு முன் பின்னாகப் பின்னப்பட்ட கதை. அதனையொட்டி ஒரு புள்ளியில் வந்து சேரும் மக்களில் விதவிதமான கதாபாத்திரங்களை கமல் ஏற்ற படம்.

பத்து வேடங்களில் மிகவும் உயரமான மனிதர் கலிஃபுல்லா, ஜப்பானைச் சேர்ந்த குங்ஃபூ வீரர், பாடகர் அவதார் சிங், அமெரிக்க அதிபர் புஷ் போல ஐந்து வேடங்கள் வந்து செல்பவை. முக்கியமான வேடங்கள் இன்னும் ஐந்து. பழங்காலத்தில் சைவ வைணவ சண்டையில் கொல்லப்படுகிற ரங்கராஜ நம்பி சிறிது நேரமே வந்தாலும் ஆவேசமான நடிப்பைத் தந்தார் அந்தக் கமல். அடுத்து மணல் கொள்ளையைத் தடுக்கும் பூவராகனாக அவரது நடிப்பு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. பாட்டியாக வந்த கமலும் ஃப்ளெட்சராக வந்த கமலும் கதையின் தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள். முக்கியமாகச் சொல்லப்படவேண்டிய கமல்களில் பல்ராம் நாயுடு என்ற ரா அதிகாரியாக அதிகம் ஸ்கோர் செய்தார் கமல்தான்.

நாயகனும் அவரே வில்லனும் அவரே என்ற அளவில் ஃப்ளெட்சர் என்கிற கமலிடம் அதிகம் மாட்டிக் கொள்ளும் கோவிந்தராஜன் என்ற நாமகரணத்திலான கமல்ஹாஸனின் அலைதல்தான் படமெங்கும் கதையாய்த் திரிந்த பிரியிழை.

சுனாமிக்கு முதல் கணத்திற்கு யாரையெல்லாம் திரட்டி அந்தப் புள்ளிக்கு கொண்டு வருவது என்கிற விஷயம்தான் கதையாக விரிவது. கமல் இத்தனை வேடங்களில் நடிப்பதற்குக் காட்டிய எத்தனமும் அவைகளில் காட்டிய வித்யாசமும் பிரமிக்கச் செய்தது. தன் பாணி வசனங்களால்தான் எந்தத் தரப்பு என்பதை எப்போதும்போலவே குழப்பத்தைவிட விளக்கிக் குழப்பித்தான் இந்தப் படத்திலும் தெரிந்தார் என்றாலும் அசினுடன் அவர் நிகழ்த்துகிற காதல் தடவிய மென்மையான உரையாடல்கள் ஈர்த்தன.

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து சேரும் சின்னதொரு மூக்குப்பொடி பெட்டி ஸைஸ் ‘வைல்’ அது வெப்பமானால் உலகமே அழியும். அத்தனை வீரியமான வைரஸ் அதனுள் இருக்கிறது. அதைப் பத்திரமாக எடுத்து கடலில் எறிந்து ஊருலகத்தைக் காப்பாற்றுவதற்கு இடையில் சுனாமி வந்து விடுகிறது. அந்த வைல் ஃப்ளெட்சர் கையில் கிடைக்காமல் இருப்பதற்காக போராடி அதில் வெற்றி பெறுகிறார் கோவிந்தராஜ். இந்தப் படம் பல உபகதைகளின் இழைகள் ஒருங்கே சேர்ந்து முடிவது போன்ற ஏற்பாடு. எந்தக் கதாபாத்திரமும் குழப்பியடிக்காமல் அளவாய்ப் பேசியதும் கதையின் பெரும்போக்கைத் துண்டித்துவிடாமல் பார்த்துக் கொண்டதும் தளர்வறியாமல் செய்தன.

பல்ராம் நாயுடுவின் மொழிப்பற்று, பாட்டியின் விசால மனம், பூவராகனின் உலகம் மீதான வாஞ்சை, கோவிந்தராஜனின் தன் உயிர் போனாலும் ஆண்டாளையும் உலக மக்களையும் காத்துவிடவேண்டுமென்கிற பிரயாசை, கலிஃபுல்லாவின் நன்றி மறவாமை, அவ்தார் சிங்கின்தான் பாட வேண்டிய பாடல்களின் கருணை, ரங்கராஜ நம்பியின் பக்தி, தன் தங்கை கொலைக்குப் பழிவாங்குவதற்காக கண்டம் கடந்து வந்து திரும்புகிற ஜப்பானியனின் உறுதி, இத்தனை பாஸிடிவ் பாத்திரமாக்கலுக்கு நடுவே எப்படியாவது இந்த உலகைத் தன் கையால் அழித்துவிட வேண்டுமென்று பிரயாசையால் உயிரே போனாலும் பரவாயில்லை என்று அலையும் ஃப்ளெட்ச்சர் என அத்தனைக் கதாபாத்திரங்களுக்கும் தனித்தனிக் குணங்களைப் பின்னி இருந்தது ரசிக்க வைத்த இன்னொன்று.

நெப்போலியன், ஜெயப்ரதா, நாகேஷ், கே.ஆர்.விஜயா, பி.வாசு, ஆர்.சுந்தர்ராஜன், ஈரோடு சவுந்தர், ஆகாஷ், ரமேஷ் கண்ணா, ரேகா, சந்தானபாரதி, கபிலன், வையாபுரி, மல்லிகா ஷெராவத், எம்.எஸ்.பாஸ்கர், டான்ஸ் ரகுராம் எனப் பெரிய பட்டாளமே நடித்திருந்தனர். தணிகாசலத்தின் எடிடிங், ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ஹிமேஷ் ரேஷம்யாவின் பாடலிசை, தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை, வாலி, வைரமுத்து இருவரின் பாடல்கள் கமல்ஹாஸனின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை இயக்கினார் கே.எஸ்.ரவிக்குமார்.

முகுந்தா முகுந்தா கிருஷ்ணா பாடல் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தசாவதாரம் ஒப்புக்கொடுத்தல்

முந்தைய தொடர்: http://bit.ly/2kcGm83