இப்படிச் சொன்னால் ரஜினி ரசிகர்களுக்குக் கண்டிப்பாகக் கோபம் வரும். தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக நடித்த தில்லுமுல்லு படத்தின் இரண்டாவது நாயகன் ரஜினிகாந்த். நானே என்னைத் திட்டிக்கொள்ளும் அளவுக்கு எனக்கும் ரஜினி பிடிக்கும்தான். என்ன செய்வது? உரக்கச் சொன்னாலும் உள்ளூர முணுமுணுத்தாலும் உண்மை அதுதான். பொதுவாக பாலசந்தர் பிறர் உருவாக்கிய படங்களை தமிழில் ரீமேக் செய்வதை அவ்வளவு விரும்புகிறவர் இல்லை. ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் சைலேஷ் டே எழுதிய கதையை இயக்குனரும் கதாசிரியருமான சச்சின் பௌமிக் திரைக்கதை அமைக்க, உருது கவிஞர் ராஹி மாஸும் ராஜா எழுதிய வசனங்களுக்கு அமோல் பலேக்கர், உத்பல் தத், பிந்தியா கோஸ்வாமி ஆகியோர் நடிப்பில் கோல்மால் என்ற மராத்திய செவ்வியல் தன்மைகள் மிகுந்த ஒரு இந்தித் திரைப்படம், தமிழில் பின்னாளில் உச்ச நட்சத்திரமாகப் போற்றுதலுக்கு உள்ளாகப் போகிற ரஜினிகாந்தின் திரைவாழ்வில் ஆக முக்கியமான படங்களில் ஒன்றெனவே தனிக்கப் போகிறது என்பதைத் தமிழுக்கேற்ப திரைக்கதை அமைத்த விசுவும், இயக்கிய பாலசந்தருமே சற்றும் எண்ணியிருக்க மாட்டார்கள். அதுதான் நிகழ்ந்தது.

வலி கண்டு நகைத்தலின் இன்னொரு அம்சம் ஒருவன் ஏமாற்றப் படும்போது பார்வையாளன் மனதில் அரும்புவது. உண்மையில் அது தனக்கு நிகழவில்லை என்பதிலிருந்து தொடங்கக்கூடிய எதார்த்தத்தின் வெளியே உருவாகக்கூடிய நியதி மாற்று. வேகமாகச் செல்லுகிற வாகனத்தை இன்னும் வேகமாகச் செல்வதன் மூலமாக முந்துகிற ஒருவனை வென்றவன் என்று பாராட்டுவது ஏற்புக்குரியது அதுவே பேச்சுக் கொடுத்து தன் பங்காளி முயலை ஓரிடத்தில் அமரச் செய்துவிட்டு ‘நா வர்ற வரைக்கும் இங்கயே இரு’ என்கிற பொய்யோடு கிளம்பிப் போய், பந்தயத்தின் வெற்றிக் கோட்டைத் தாண்டிவிட்டதாகக் குதூகலம் கொள்ளும் ஆமை பொறாமையைவிடக் கல்மிஷத் தீய ஆமை என்றால் தகும். அப்படி படம் நெடுக தேங்காய் ஸ்ரீனிவாசனைத் தன் பொய்க்கொத்துகளால் ஏமாற்றுகிற தில்லுமுல்லுப் பேர்வழி தான் ரஜனிகாந்த்.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தனக்கெனத் தனிக்கொள்கைகளைக் கொண்ட கோமகன். அவரது நிறுவனத்தில், ஒரு வேலை கிடைப்பதற்காகத் தன்னை ஒழுக்க சீலனாகக் காட்டிக்கொள்கிறான் சந்திரன், அந்தப் புள்ளிதான் தில்லுமுல்லு படத்தின் ஆரம்பம் ஆகிறது.

தந்தையின் நண்பரான மருத்துவர் (பூர்ணம்) முன்கூட்டி அளித்த துப்புகளின் உபயோகத்தில் நூற்றுக்கு ஆயிரக் கணக்கில் மதிப்பெண் பெற்று ‘நீதாம்பா நான் எதிர்பார்த்த ஜூனியர் விவேகானந்தர்’ என முதலாளி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மெய் மறக்க, எப்படி இவரைச் சமாளிக்கப் போகிறோம் என்கிற மலைப்போடு பொய்களின் உலகத்தின் முதல் கதவைத் திறந்து கொள்ளுகிறான் சந்திரன். ஒரு பொய் தன் சகாக்களை அறிமுகப் படுத்தியபடியே தலைதெறிக்க ஓடக் கூடிய திறன் பெற்றது.

கால்பந்தாட்டக் களத்தில் தன்னைப் பார்த்துவிட்ட முதலாளியிடம் இல்லாத தம்பியை உருவாக்கி, நாடகப் பித்துக்கொண்ட சௌகார் ஜானகியின் புண்ணியத்தில் இல்லாத அம்மாவை வரவழைத்து நாகேஷின் உதவியுடன் மீசை வைத்தால் ஒருவன், இல்லாவிட்டால் இன்னொருவன் என்ற குதிரையை அல்லது புல்லட்டை மாறி மாறி ஓட்ட நிர்ப்பந்திக்கப் படுகிற பரிதாபத்துக்குரிய பொய்க்காரன் தன் பொய்களின் எல்லையில் நின்றுகொண்டு, தானும் தன் உண்மையுமாய் உடைபடுவதே கதை.

தேங்காய் சீனிவாசனின் நடிப்பில் இந்தப் படம் ஒரு ஜர்தா முத்தம். அவருக்கு அடுத்த கனமான பாத்திரம் சௌகார் ஜானகிக்கு. ரஜினி மகா சிரமப்பட்டு இந்தப் படமெங்கும் மின்னினார். மாதவியின் கண்கள், எம்எஸ்விஸ்வநாதனின் ஆச்சரியமான ‘ராகங்கள் பதினாறு’ பாடல், இவற்றுக்கெல்லாம் மேலாக எந்த மொழியிலும் பெயர்க்க முடியாத, எங்கேயிருந்தும் தருவிக்கவும் முடியாத விசுவின் வசனங்கள் இந்தப் படத்தின் கலாச்சார அந்தஸ்தை நிர்ணயித்தன. மறு உருவில் ரஜனி வேடத்தில் தமிழ்ப்படம் சிவாவும், தேங்காய் வேடத்தில் பிரகாஷ் ராஜும், சௌகார் வேடத்தில் கோவை சரளாவும் நடித்து இனிப்பு நீக்கப்பட்ட குளிர்பானம் போல் அந்த வருடத்தின் யாரும் எதிர்பார்த்திராத மிகச் சிறந்த ஏமாற்றத்தை உண்டு பண்ணியதுதான் மிச்சம். வரலாற்றில் நல்ல படங்கள் முதல் காதலைப் போன்றவை.

‘சட்டையில என்ன பொம்ம?’ ‘பூனை சார்?’ ‘அதுல என்ன பெருமை? கெட் அவுட்’
‘சுப்பியாவது கப்பியாவது டஸ்ட் பின்’

ரணகளம் செய்யும் தேங்காய் சீனிவாசன், கோபத்தோடு வெளியே வரும் சுப்பி, தன்னைத் தாண்டி உள்ளே நுழையப் பார்க்கும் ரஜினியிடம்  ‘முன்னாடியே டிசைட் பண்ணிட்டாங்கப்பா, எல்லாம் eye was’ என்பார். உள்ளே தேங்காய் ஒரு வரியைத் திருப்பிச் சொல்லச் சொல்ல, ‘வேணாம் சார், றிஸ்கு’ என்பார். தேங்காய் அவர் எழுந்து போகும்போது ஒரு முகபாவம் காண்பிப்பார்.
சொல்லலர்ஜி, பொருளலர்ஜி, இவ்விரண்டும் கலந்த
மொழியலர்ஜி முகத்தில் தெரியும்
என்றாற் போல் பாவம் சொட்டும் அந்த முகபாவம்.

தில்லுமுல்லு அதன் மூலப் பிரதியைத் தாண்டிய செவ்வியல் அழகியல் திரைமாதிரியாகத் தமிழில் நிரந்தரிக்கிறது. தீராத நடிக நதி.