ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி, பொன்வண்ணன், சரவணன், ப்ரியாமணி, கருப்பு ஆகியோர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் ராஜா முகமது தொகுப்பில் ராம்ஜியின் ஒளிப்பதிவில் அமீர் சுல்தான் எழுதி இயக்கிய படம் பருத்திவீரன்.

மதுரை வட்டாரத்தில் நடைபெற்ற நிஜத்தைப் புனைவாக்கி எடுக்கப்பட்ட திரைப்படம் 2007 ஃபிப்ரவரி 23 ஆம் தேதி வெளியான பருத்திவீரன்.

காதலித்து கலப்பு மணம் புரிந்த பெற்றோரின் மகன் பருத்திவீரன். சாதி பிடிமானத்தில் ஊறிய மாமன் கழுவத்தேவனின் மகள் முத்தழகுமீது பருத்திவீரனுக்கு சிறுவயதிலிருந்தே பெருங்காதல் அவளும் காதலிப்பதை உறுதிசெய்து கொள்ளுகிற நிமிடம் வாழ்வில் தனக்கு எல்லாமே கிடைத்து விட்டாற்போல் கொண்டாடி மகிழ்வது வீரனின் இயல்பு.சித்தப்பன் செவ்வாழையுடனும் பாட்டியுடனும் வாழ்ந்து வரும் வீரன் சிறு சிறு குற்றங்களுக்காகக் காவலும் தண்டனையும் பெற்று வருபவன். எப்படியாவது பெரிய குற்றம் ஒன்றை செய்து பெரிய ஜெயிலில் கொஞ்ச நாட்களாவது இருந்துவிட வேண்டுமென்பதே அவனுடைய வாழ்கால லட்சியம் எனக் குறிப்பிடுபவன்.

முத்தழகும் பருத்திவீரனும் பழகுவதை தெரிந்துகொள்ளும் கழுவத்தேவன் எப்படியாவது அவர்கள் இருவரிடையே இருக்கும் காதலை துண்டாடிவிட என்னென்னவோ முயன்று பார்த்தும் அத்தனையும் தவிடுபொடியாகிறது. ஒரு கட்டத்தில் வேண்டா திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள் பெற்றோர் முத்தழகு பருத்திவீரனோடு வாழ்வதற்காகக் கிளம்பிச் செல்கிறாள்.

பருத்திவீரன் வந்து சேர்வதற்குள் முத்தழகி எதிர்பாராத நிகழ்வொன்றுக்கு ஆட்படுகிறாள். தன்னைக் கண்டம் துண்டமாக வெட்டிவிடுமாறு பருத்திவீரனை இறைஞ்சுகிறாள். பருத்திவீரன்தான் அவளுடைய மரணத்துக்குக் காரணம் என்று தவறாகக் கருதும் கழுவத்தேவனும் அவனுடைய ஆட்களும் பருத்திவீரனைக் கொல்வதோடு நிறைகிறது படம்.

ப்ரியாமணிக்கு மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்த படம் பருத்தி வீரன். காட்சி அமைப்புக்களின் அழகியலுக்காகவும் படம் மொத்தமும் நமக்கு நிகழ்த்தித் தருகிற செஞ்சாந்து வண்ண அனுபவத்திற்காகவும் இயல்பான தெற்கத்தி வசனங்களுக்காகவும் கூர்மையான பாத்திரமாக்கலுக்காகவும் படத்தின் இயங்குதளத்தினுள் உறுத்தாமல் தொனித்துச் சென்ற நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒளிப்பதிவு மற்றும் யுவனின் முன் நேரா இசைமழைக்காகவும் கூடக் காலம் கடந்து நிற்கும் திரைப்படம் பருத்திவீரன்.

இளையராஜா தன் குரலில் பாடி வழங்கிய அறியாத வயசு புரியாத மனசு பாடல் இனம் புரியாத நிம்மதியை நிரவிற்று. விட்டேற்றியாக வாழ்வைக் கழித்துக்கொண்டு திரியும் அச்சு அசலான மனிதர்களை அதற்குமுன் யாருமே கதைப்படுத்தாத அவர்தம் நுட்பமான யதார்த்தங்களைத் திரையில் பெயர்த்துத் தன் திரைவாழ்வின் முக்கியமான படமாக பருத்திவீரனை உருவாக்கினார் அமீர்.

இந்தப் படத்தின் மூலமாக நடிகர் சிவக்குமாரின் முகவரியிலிருந்து சூர்யாவுக்கு அடுத்த வரவாக கார்த்தி தன் முதல் படத்திலேயே பெருவாரி ஜனகவனத்தை ஈர்த்தவண்ணம் அறிமுகமானார்.பருத்திவீரன் கார்த்தி என்பதே அவரது அடைமொழியாக மாறி ஒலிக்கலாயிற்று. ப்ரியாமணி சரவணன் பொன்வண்ணன் கருப்பு என பலரும் தங்கள் திரைவாழ்வின் உன்னதங்களை நடித்து வழங்கினர்.

பருத்திவீரன் எப்போதாவது வந்து திரும்புகிற பேருந்து சன்னலின் வழி ஒலிக்கிற பெருவிருப்பப் பாடலின் சலிக்காத இசைக்கோர்வைபோல வொரு திரைவழி அபாரம்.