நல்ல சினிமா என்பது எதை நம்மால் நம்ப முடியுமோ அது. நம்மால் நம்ப முடியாதது மோசமான சினிமா…

அப்பாஸ் கிரோஸ்தமி.

வாழ்க்கை நகர்ந்து செல்லும் பாதை நபருக்கு நபர் மாறிக்கொண்டே இருக்கக்கூடிய மேடு பள்ளங்களைத் தனதே கொண்டது. அவரவர் தடுமாற்றங்கள், அவரவர் தடைகள். சரியான சரி எது என்று தேடுவதே சாத்தியம். பலித்த மட்டும் தாயம். இன்றைய ஒவ்வாமை அடுத்த காலத்தின் இயல்பாகவும் இன்றைய நியதி அடுத்த காலத்தில் கைவிடுதல்களாகவும் தற்போதைய மறுமலர்ச்சியும் புரட்சியும் வருங்காலத்தின் உரிமைகளாகவும் யதார்த்தங்களாகவும் மாறுவது மாற்றம் என்பதன் தன்மைகள். அந்தவகையில் ஒரு காலத்தில் அதெப்படி? என்று மறுதலிக்கப்பட்ட ஒன்று அடுத்த காலத்தில் ஸோ வாட்? என ஏற்றுக்கொள்ளப்படுவதும் நடக்கிறது.

காதலுக்கு எதிராக ஏற்படுத்தப்படுகிற முட்டுக்கட்டைகளில் உணர்வு வழி அச்சுறுத்தல், பாசம், சாதி, பண வழி ஏற்றத்தாழ்வுகள் காலம் காலமாய்த் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருபவை. காரணிகளை வென்ற காதல்களும், கைகூடாமற் போகையில் உயிரையே துச்சமென்று உதறிய காதல்களும் தங்களது விதிவழி நடப்பதை ஏற்றுக்கொண்டு காதலை ஆழப் புதைத்துக்கொண்ட சமரசங்களும், கூடாமற்போன காதலை எண்ணி ஒற்றையராகவே வாழ்வெல்லை வரைக்கும் இருக்கத் துணிந்த காதற் பிடிவாதிகளும் காதலின் சென்ற நூற்றாண்டு சரித்திரத்தின் பக்கங்களெல்லாம் நிரம்பினார்கள்.

பாரதிராஜாவின் பாடசாலையிலிருந்து அவரது பெயர்சொல்லிப் புறப்பட்டவர்களில் நடிகராகவும், இயக்குனராகவும் தனக்கென்று தனியிடம் உருவாக்கிக் கொண்டவர் பாக்கியராஜ். இந்தியத் திரைக்கதை சொல்லிகளில் ஆச்சர்யம் மிகுந்த பெயர் பாக்கியராஜ். திரைக்கதையின் போக்கு, திசை, பரவல் எனப் பலவற்றையும் அடுத்த காலத்திற்கு ஏற்ப முன்கூட்டி மாற்றி அமைக்க முனைந்த தைரியமீறல்கள் அவருடைய திரைக்கதைகள். பெரும்பான்மை யதார்த்தத்தின் சாத்தியங்களுக்கு உள்ளேயே, பலரும் கவனிக்க மறந்த அதீதங்களை மிகச் சரியாக அறுவடை செய்தவர் பாக்கியராஜ். நாயகன் இடுப்பில் கயிறைக் கட்டிவிட்டு அவன் பிடிமானத்தைத் தன் கையில் ஏந்தி, ‘என்னை நம்பு, பயப்படாம குதி’ என்று மலை உச்சியிலிருந்து கீழே தாவச் சொல்லும் இயக்குனர் மற்றும் முன் சொல்லப்பட்ட நடிகன் ஆகிய இரண்டையுமே கிளைத்துத் தனித்த கலை வினோதம் பாக்கியராஜின் படங்களாகின.

ஓர் உதாரணத்துக்கு இப்படிச் சொல்லலாம், சமகாலத்தின் நடிக உச்சம் கமலஹாசன். திரைப்படத்தின் ஒரு பாத்திரத்துக்காகப் புதுவகை நடனம் ஒன்றையோ, சிலம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டு ஒன்றையோ, மலையாளம் போன்ற அயல் மொழி ஒன்றைப் பேசுதலையோ, கமலஹாசன் படத் தேவைக்காக அதைக் கற்றுக்கொண்டு செய்து காண்பிப்பது அப்படிச் செய்வதன் துல்லியத்துக்கு மிக அருகில் இருப்பதை உணரலாம். அதுவே பாக்கியராஜ் அவற்றைக் கையாளும்போது சாமான்ய மனிதரின் சராசரி ஏற்றத் தாழ்வுகளுடன் அவற்றைக் கையாள்வது நிகழும். இதில் வியப்புடன் கமலஹாசனை ஒப்புக்கொள்ளக்கூடிய அதே காலத்தின் அதே ரசிக மனங்கள் எதார்த்தத்தின் ஆட்சேபமற்ற நம்பகத்தோடு பாக்கியராஜை ஏற்றுக்கொண்டார்கள். தன் பலம், பலவீனம் இரண்டையும் முற்றிலுமாக அறிந்தவர் பாக்கியராஜ். அவரது இயக்கத்தில் வெளிவந்த எண்பது சதவிகிதப் படங்கள் கணிதம் தப்பாத வெற்றிகளை அவருக்குத் தந்தன.

ஆண்களும் பெண்களுமாய் வாழ்க்கையின் உரையாடல்களை உணர்வுகளின் வாதப் பிரதிவாதங்களாய் முன்வைக்கும் வண்ணம் பாக்கியராஜின் திரைப்படங்கள் அமைந்தன. மத்யம வாழ்க்கையின் நிகழ்கணச் சிக்கல்களை அழகுறக் கதையாண்டவர் பாக்கியராஜ். தன்னைக் கலைத்துக் கிழித்து இகழ்ந்து எள்ளலுக்கு உட்படுத்துவதன் மூலமாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளக்கூடிய நாயகவினோதத்தை முதல்முறை படைத்தார் பாக்கியராஜ். நடிகரும் இயக்குனருமாகிய பொறுப்பு-இடை-முரணை உலக அளவில் வெற்றிகரமாகக் கையாண்ட வெகு சிலரில், சார்லி சாப்ளின், மைக்கேல் ஜாக்சன், மெல் கிப்ஸன், போன்ற படைப்பாளிகளின் வரிசையில் பாக்கியராஜைச் சொல்ல முடியும்.

ஆனந்த் ஒரு மருத்துவன். மனைவியை இழந்தவன். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் தன் அன்னையின் விருப்பத்திற்காக பெண் பார்த்து வசந்தியைக் கல்யாணம் செய்து கொள்கிறான். திருமணத்தன்று இரவு தற்கொலைக்கு முயல்கிறாள் புதுமணப்பெண் வசந்தி. தற்கொலைக்கு முயன்றதன் காரணம் வசந்திக்கும் மாதவனுக்கும் இடையிலான காதல் என்பதை அறிந்து கொள்ளும் ஆனந்த், ஒரு வாரம் மட்டும் அந்த வீட்டில் இருக்கும்படி வேண்டுகிறான். அதன் பின் நீ உன் காதலனோடு சென்றுகொள்ளலாம் என்பதற்கிணங்க வசந்தி அந்த ஏழு நாட்கள் ஆனந்த் வீட்டில் இருக்கிறாள். அதன் முடிவில் பாலக்காட்டு மாதவனைக் கண்டறிந்து அழைத்து வந்து வசந்தியை அவள் விருப்பப்படி மாதவனோடு செல்லுமாறு கூறுகிறான். வசந்தி மறுத்து விடுகிறாள், மாதவனின் க்ளைமாக்ஸ் வசனம் புகழ்பெற்றது என் காதலி உனக்கு மனைவியாகலாம். ஆனால் உன் மனைவி என் காதலியாக முடியாது”

கவிதை அரங்கேறும் நேரம், மலர்க்கணைகள் பரிமாறும் தேகம் எண்ணி இருந்தது ஈடேற, தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ போன்ற பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதனின் தேன் நிகர் இசையில் உள்ளங்கொய்தன.

கே.பாக்யராஜின் திரை ஆளுமையை வடிவமைத்த படங்களில் மிக முக்கியமான படம் அந்த ஏழு நாட்கள். வாழ்க சினிமா!

முந்தைய தொடர்: https://bit.ly/2XkFHPD