ஒரு குழந்தையாகவும் முதியவராகவும் ஒருங்கே திகழ்வதற்கான வாய்ப்பை ஒருவருக்கு சினிமா வழங்குகிறது. நிஜ வாழ்வில் அது நிகழாவொன்று.

அப்பாஸ் கிராஸ்தொமி

காவியத் தன்மை மிகும் கலைப்படைப்புகள் அவை உண்டாகிவரும் காலத்தில் பெறக்கூடிய வெற்றி தோல்வியைத் தாண்டிய வேறொன்றாக காலத்தின் மடியில் உறைபவை. அப்படியான தன்மை சினிமாவுக்கும் உண்டு. பல படங்கள் அவை வெளியான காலத்தில் அலட்சியப்படுத்தப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் சரிவர ஏற்றுக்கொள்ளாமலும் கடந்து சென்று பிற்பாடு கலையின் ஒளிர்தலை நிரந்தரமாக்கிக் கொண்ட காவிய மலர்களெனவே உயிர்த்திருக்கின்றன. அதைவிடவும் அபூர்வமான வெகு சில படங்களுக்கு மட்டுமே வெளியாகும் காலத்திலும் கொண்டாடப்பட்டு காலங்கடந்தும் போற்றப்படுவது நிகழும். அப்படியான ஒரு படம் ஆறிலிருந்து அறுபது வரை.

ரஜினி கர்நாடக மாநிலத்திலிருந்து மதராஸூக்கு வந்து நடிகரானவர். அன்றைய காலத்தில் தென் மொழிப் படங்கள் மட்டுமின்றி பெருவாரி இந்திப் படங்களுமே சென்னை சார்ந்து படப்பிடிப்புகளும் பிற்சேர்க்கை வேலைகளும் நடந்து வந்தது சரித்திரம். அப்படி இருக்கையில் எல்லா மொழிப் புதுமுகங்களுக்கும் சென்னை ஒற்றை ஸ்தலமாக தேடலுக்கும் காத்திருத்தலுக்குமாய் இருந்ததில் வியப்பில்லை. ரஜினிகாந்த் தமிழில் நடிகரானார். முதல் சில படங்களில் சாதாரணமான வேடங்களில் நடித்தவர் தன்னைப் பிறரினின்றும் அன்னியம் செய்து தனித்து நோக்கச் செய்வதற்காகக் கையில் எடுத்த விஷயம்தான் ஸ்டைல் என்பது, முன் காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்ஜி.ஆர் அரசியலில் கடுமையான போராட்டத்தில் இருந்து கொண்டிருந்த நேரம் ரஜனியின் உதயம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆரின் சகாவான சிவாஜி போட்டியில்லாத ராஜாவாக வலம்வரத் தொடங்கி இருந்தார். அடுத்த காலத்தின் ஒளிர்தலை நோக்கிய பயணத்தில் கமல்ஹாஸன், விஜய்குமார், ஜெய்கணேஷ், சிவச்சந்திரன், சுமன், ஸ்ரீகாந்த், ஜெய்சங்கர், ஏவிஎம்ராஜன், முத்துராமன் எனக் கலந்து கட்டிய பழைய புதியவர்களுக்கிடையிலான போட்டியும் அடுத்தது யார் என்கிற வினவாத வினாவுமாய்க் குழம்பிய காலம் 1975 முதல் 1980 வரையிலான 5 ஆண்டுகள். இந்தக் காலத்தில் தன்னை ஒரு நாயகனாக நின்று நிதானமாக நிலை நிறுத்திக்கொண்ட கமல்ஹாசனையும் விஞ்சி முதலிடத்தை அடைந்த ஆச்சர்யம்தான் ரஜ்னிகாந்த்.

ரஜினியிடம் இருப்பதை மாற்றித் தன்னை வேரூன்றிக் கொள்ளும் பிடிவாதம் இருந்தது. எத்தனை பேர் கொண்ட கூட்டத்திலும் தான் தனித்துத் தெரியவேண்டியதன் அவசியத்தை எப்போதும் மறந்துவிடவில்லை. ஒரு பக்கம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டாற்போலத் தோற்றமளித்தாலும்கூட அவற்றால் தன்னுடைய ஏற்றத்திற்கு என்ன பயன் என்பதைப் பார்த்தவண்ணமே ரஜினி நடை போட்டார். ஒருவழியாக பைரவி, பில்லா, ப்ரியா போன்ற படங்கள் இனி ரஜினி என்று ஆக்கிற்று. மக்கள் தங்கள் தேர்வுகளில் எந்தவித ஆதிக்கத்தையோ பரிந்துரையையோ ஏற்பதேயில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்தவண்ணம் உதயமானார் தமிழின் அடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

அனேகமாக ரஜினியின் ஐம்பதாவது படமாக வந்திருக்க வேண்டிய அவரது 51ஆவது படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினிகாந்த் எனும் மக்கள் ப்ரிய நடிகர் தனக்கென்று நடித்து மிளிர்ந்த வெகு சில படங்களில் முள்ளும்மலரும் ஜானி ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எப்போதும் இடம்பெறும். தணியாத நடிப்பு தாகம் கொண்ட கலைஞன் ஒருவனால் மட்டுமே வென்றெடுக்கக்கூடிய காத்திரமான சந்தானம் எனும் பாத்திரத்தில் மிளிரவே செய்தார் ரஜனி. ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடல் இப்படத்தின் முகவரியானது.

சிறுவயதில் தாய் தந்தையரை இழக்கும் சந்தானம் எனும் சின்னஞ்சிறுவன் தன்னை அடுத்த தம்பி தங்கையரை வளர்த்தெடுக்க தன்னையே மெழுகாக்கிக் கொள்வதும் மாறும் காட்சிகளில் அவனால் வளர்க்கப்பட்டு முன்னேற்றம் கண்ட உடன்பிறந்தோர் மின்மினிக் காலம் முடிந்ததென எண்ணி உறவைத் துச்சமென்றெண்ணித் துண்டாடிப் பிரிவதும் சந்தானம் வாழ்க்கையின் எல்லா கடினங்களையும் ஒன்றன்பின் ஒன்றென அடைவதும் அவனது ப்ரியமான மனைவியை தீவிபத்தில் இழப்பதும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் அந்தக் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதும் சந்தானம் பெரிய எழுத்தாளனாகப் புகழடைவதும் சுயநலமிக்க அவனது சகோதரர்கள் அவனை மீண்டும் அண்டுவதும் தனக்கென்று இருந்த ஒற்றை உறவான தன் மனைவியை எண்ணியபடி அறுபது வயதில் மரித்துப் போகும் சந்தானத்தின் முழு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் ஆறிலிருந்து அறுபது வரை. நம் கண்களுக்கு முன்பாக சந்தானம் எனும் மனிதனைத் தெரியச் செய்ததுதான் ரஜினி எனும் புகழ்பிம்பத்தின் வியக்கத்தக்க நடிப்பாற்றலின் பலன் எனலாம்.

“உதவி செய்தவன் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் உதவி பெற்றவன் அதை உயர்வாகப் பேசுகிறான்”  என்றொரு வசனம் வரும் இந்தப் படத்தின் இறுதியில் வணிக நிர்ப்பந்தங்கள் எது குறித்த சிந்தனையும் இன்றி முழுவதுமாகக் கதையின் செல்திசையிலேயே படத்தை எடுத்திருந்தார் எஸ்.பி.முத்துராமன். பிற்காலத்தில் ரஜினியை முழு சூப்பர்ஸ்டாராக வடிவமைத்து வார்த்தெடுத்ததில் பெரும் பங்கு வகிக்கும் அதே எஸ்.பி.எம் இயக்கத்தில்தான் நம்பமுடியாத அபூர்வமான ஆறிலிருந்து அறுபது வரை எனும் காவியமும் உருவானது.

ஆறிலிருந்து அறுபது வரை மலைக்குறிஞ்சி

முந்தைய தொடர்: https://bit.ly/2XobxLi