ஒரு சிறந்த கதையை அடைய வேண்டுமானால் நாயகனை விரும்புகிறாற்போலவே நீங்கள் வில்லனையும் விரும்பியாக வேண்டும்

-ஆண்ட்ரூ ஸ்காட்

சோழா பிக்னிக் வில்லேஜின் மர்மங்களைத் துப்பறியச் செல்கிறான் பத்திரிகையாளன் ராஜா. அவனுக்கும் பத்திரிகை ஆசிரியர் சந்திரனுக்கும் படிப்படியாக எதிர்ப்புகள் வருகின்றன. ராஜாவுக்கு உதவுகிறாள் எம்.எல்.ஏ சட்டநாதனிடம் வேலை பார்க்கும் உமா. சட்டநாதனுக்கும் பிக்னிக் வில்லேஜ் உரிமையாளன் கே.ஆர்.கேவுக்கும் இருக்கும் ரகசிய தொடர்புகளை அம்பலமாக்குகின்றான் ராஜா. அதனால் கோபமடையும் எதிரிகள் உமாவைக் கொல்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்க வருகிறார் டீ.எஸ்.பி தீனதயாள் மர்மம், பகை, அரசியல் அதிகாரம் எனப் பல சூழ்ச்சிகளை முறியடித்து எங்கனம் சோழா வில்லேஜின் அனைத்து மர்மங்களையும் வெளிக்கொணர்கின்றனர் என்பது மீதிக் கதை.

ஊமை விழிகள் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் முதலில் குறும்படமாக எடுத்து அதை அடுத்து விரித்துப் பெருந்திரை நோக்கி நகர்த்திய படம். அகில இந்திய அளவில் மாபெரும் தொடக்கத்தை திரைப்படக் கல்லூரி மாணவர்களின் முயற்சிக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தது ஊமை விழிகள். ஆபாவாணன் திரைக்கதை, பாடல்கள், வசனம் இவற்றை எழுதி தயாரித்தார். மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைத்தார்கள். ரமேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய அரவிந்தராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்றது ஊமை விழிகள்.

எந்த நாயக பிம்பமும் இல்லாமல் வழங்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்தார் விஜய்காந்த். அவருக்கு இணையாக வேடமேற்றார் சரிதா. கார்த்திக், சசிகலா, சந்திரசேகர், விசு, கிஷ்மு, அருண்பாண்டியன், மலேசியா வாசுதேவன் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் திரை கண்டார் ரவிச்சந்திரன். தன் முந்தைய அத்தியாயத்தின் அமுல்குழந்தை நடிப்பிலிருந்து விலகி மாபெரும் வில்லனாக இந்தப் படத்தில் தோன்றினார். அதுவும் இந்தப் படத்தின் வில்லனுக்கு வழங்கப்பட்ட பூர்வ கதை உணர்வுகளைக் கிளறுவதாக அமைந்திருந்தது. எடுத்துக்கொண்ட கதையை படமாக்கிய விதத்தில் சர்வதேச மர்மப் படங்களுக்கு இணையான வழங்கலைக் கொண்டிருந்தது இந்தத் திரைப்படம்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் தூண்களைப்போலத் தாங்கின எனலாம். திரைக்கதையின் போக்குக்கு உறுத்தாத பாடல்களும் வசனங்களும் ஊமைவிழிகளின் பலங்கள். அதுவும் க்ளைமாக்ஸில் அணிவகுத்து வரும் அத்தனை அம்பாஸிடர் கார்வலக் காட்சி அகில இந்திய அளவில் பேசப்பட்டது.

முப்பதாண்டுகளுக்குப் பிறகும் இன்றளவும் விறுவிறுப்புக் குறையாமல் இருப்பது ஊமைவிழிகள் பட உருவாக்கத்தின் பெருஞ்சிறப்பு.

ஊமைவிழிகள் பேசாப் பெருமொழி

முந்தைய தொடர்: https://bit.ly/32kWCVJ