தனித்தலையும் பெண்கள் : கலைச்செல்வியின் இரவு

பெண்ணின் எதிர்நிலை ஆண்.பெண்ணும் ஆணும் இரண்டும் பால்சுட்டும் பொதுப் பெயர்கள். பால் சுட்டும் பொதுப்பெயர்கள் பாத்திரத்தின் பெயராக மாறும்போது எதிர்ப்பாலுக்கான பாத்திரம் ஒன்றை மொழி உருவாக்கிக் கொள்கிறது. சில பாத்திரங்களுக்குப் பொதுச்சொற்களே போதும் என்றும் மொழி கருதுகிறது. குழந்தை என்ற சொல் பாலடையாளம் இல்லாத பொதுச்சொல். ஆனால் சிறுமியும் சிறுவனும் பாலடையாளங்கள் கொண்ட சொற்கள். தமிழ் மொழியில் பெண்பால் விகுதிகள் எனவும் ஆண்பால் விகுதிகள் எனவும் சொல்லின் இறுதி நிலைகள் இருக்கின்றன. அவ்விறுதிநிலைகளைக் கொண்டு தமிழின் பெயர்ச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. 

மொழியின் பால் விளையாட்டு

======================

பொதுவெளியில் பொதுச் சொற்களால் அறியப்படும் பாத்திரங்கள் குறிப்பான வெளிகளாலும் குறிப்பிட்ட காலப்பின்னணியில் வெவ்வேறு பாத்திரங்களாக மாறுகின்றனர். சிறுமியாகவும் சிறுவனாகவும் அறியப்படும் பாத்திரங்களே குடும்பப் பரப்பிற்குள் மகளாகவும் மகனாகவும் மாறுகின்றார்கள். திருமணம் என்னும் நிகழ்வுக்குப் பின்னர் மருமகள் எனவும் மருமகன் எனவும் உருமாறும் நபர்களும் அவர்களே.

தமிழர்களுக்கு நிரந்தரமான புழங்குவெளியாக இருப்பது குடும்பம் என்னும் அரூபவெளியே. அவ்வரூப வெளியைப் பருண்மையாக மாற்றுவது வீடு  என்னும் நிலவெளி.நிரந்தரமான குடும்பத்தை உருவாக்கும் சமூகப் பொறுப்பைச் செய்யும் இனவிருத்திக்குப் பின்னர் தாயெனவும் தந்தையெனவும் என அழைக்கப்படுகின்றனர். மரியாதையோடு சொல்லப்படவேண்டும் என நினைக்கும்போது மொழி -ஆர் விகுதியை வழங்கி தாயாராகவும் தகப்பனாராகவும் ஆக்கிவிடுகிறது. இச்சொற்கள் பழைய சொற்களென நினைப்பவர்களால் அம்மாக்களாகவும் அப்பாவாகவும் அழைக்கப்படுகின்றனர். வயது கூடும்போது இன்னொரு தலைமுறை உறவு வந்து பாட்டி, தாத்தாக்களெனக் கதாபாத்திரங்களை உருவாக்கிப் பார்க்கிறது. தலைமுறைகளின் பின்னோக்கிய பார்வையில் பாட்டிகளும் பாட்டன்களும் பூட்டிகளாகவும் பூட்டன்களாகவும் நகர்கின்றார்கள்.தமிழ்நாட்டுக் குடும்பவெளிக்குள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்கை- தம்பி, அக்காள் – அண்ணன் -அண்ணி, நாத்தனார்-மைத்துனன்- மைத்துனி, கொழுந்தியாள் -கொழுந்தன்   என்பதான உறவுப்பெயர்களும் இருக்கின்றன. 

நிரந்தரமான  குடும்பவெளியைத் தாண்டி தற்காலிகமான வெளிகளுக்குள் நுழையும் மகள்களும் மகன்களுமே அந்தந்த வெளிகளுக்கேற்ப் பாத்திரப்பெயர்களைத் தாங்குகின்றனர். கல்விச்சாலைகளில் மாணவியாகவும் மாணவனாகவும் மாறும் நபர்களே பணியிடங்களில் பணிகளின் தன்மைக்கேற்ப பாத்திரப்பெயர்களைத் தாங்குகின்றனர். வேலைக்காரியாகவும் வேலைக்காரனாகவும் சொல்லிப் பழக்கப்பட்ட மொழி, பணியிடங்களில் இருபால்பெயர்ச்சொற்களை உருவாக்காமல் இருப்பதையும் பார்க்கிறோம்.உழவர்களும் உழத்திகளும் இருக்கிறார்கள். கவிதாயினிகளும் இருந்திருக்கிறார்கள்; கவிஞர்களும் இருந்திருக்கிறார்கள். பொதுவாக் கவிகளும் இருக்கிறார்கள். பாடினிகளும் பாணன்களும் அலைந்து திரிந்த மொழி இது.

 இதே நேரத்தில் பரத்தை இருந்திருக்கிறாள்; பரத்தன்களைப் பழைய கவிகள் சுட்டவில்லை. உழவன் நிலக்கிழாராகவும் வேளாளனாகவும் மாறியபோது பெண்ணுக்கு அந்த அடையாளம் தரப்படவில்லை. அமைச்சன் இருந்தான்; அதற்குப்  பெண்பாலாக அமைச்சி அப்போதும் இல்லை; இப்போதும் இல்லை. கம்மியன், கொல்லன், தச்சன், கம்மாளன் எனக் கைவினைத்தொழில்களுக்குப் பெண்பால் சொற்கள் இல்லை. குரு உண்டு; அது ஆணையே குறிக்கும். நர்த்தகிகள் உண்டு அது பெண்ணையே குறிக்கும். ஆண்கள் நடனம் ஆடாமல் இருந்திருக்கிறார்கள். தொழிலாளி என்ற இகர ஈற்றுச் சொல் விநோதமாகப் பெண்ணைக் குறிப்பதாக இல்லாமல் ஆணைக் குறிக்கும் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆசிரியன் இருக்கிறான்; ஆசிரியை இப்போதுதான் உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஓட்டுநர், நடத்துநர் என்பன பொதுச்சொற்களாக இருபாலாரையும் குறிக்கின்றன. அமைச்சர்கள் இருக்கிறார்கள்; அமைச்சிகள் இல்லை. பெண்ணில் தளவாய்களும் தளபதிகளும் இல்லை  . 

ஒரு மொழியில் சில வகையான உறவுப்பெயர்களும் பாலடையாளப் பெயர்களும் இல்லை என்றால் அம்மொழியின் அத்தகைய பாத்திரங்களும் இல்லையென்றே கொள்ள வேண்டும். தமிழின் அகராதிகளில் கைம்பெண் இருக்கிறாள்; விதவை இருக்கிறாள்; அறுதலி இருக்கிறாள். இவற்றிற்கான ஆண்பால் சொற்கள் இல்லை. அதனால் தான் தமிழும் ஆண் மொழியாகவே இருந்தது; இருக்கிறது என்கின்றனர் பெண்ணியவாதிகள்.

எதிர்பால் அடையாளச் சொற்களை மொழி தானே உருவாக்கிக் கொள்கிறது என்று சொல்வதைவிடச் சமூகத்தின் தேவை கருதியே உருவாக்கப்படுகின்றன.  விதவைகளை உருவாக்கிய இந்திய/தமிழ்ச் சமூகம் விதவன்களைக் கொண்டிருக்கவில்லை. தாரத்தை இழந்தவன் மறுதாரத்தைச் செய்துகொண்டான். புற உடலில் கைம்மை அடையாளத்தோடு மனைவிக்காக நோன்புகள் நோற்ற ஆண்களைப் பாடவில்லைப் பெண்கவிகளும் ஆண்கவிகளும். ஆனால் உடன் கட்டை ஏறிய பெண்களைச் செவ்வியல் பாடல்களே காட்டுகின்றன. திருமணத்தில் பெண்களுக்கு மட்டுமே தாலி கட்டப்பட்டதால் அவளது கணவன் இறந்தவுடன் தாலையை அறுக்கும் சடங்கும் நடந்தது. ஆனால் ஆண் மனைவியை இழந்த தற்காக எந்த அடையாளத்தையும் இழக்கவேண்டியவனாக இல்லை. இந்த வேறுபாடு முக்கியமான வேறுபாடு. இந்த வேறுபாட்டை உணரச்செய்ததின் பின்னணியில் இருந்தது ஐரோப்பியக் கல்வியின் பயனாக உருவான பகுத்தறிவு  

இந்தியாவின் தேசியவிடுதலைப் போராட்டம் நடந்தபோதே இந்தியப்  பெண்களுக்கான உரிமைகளையும் விடுதலையையும் முன்னெடுத்த அன்னிபெசண்ட் அம்மையார், சகோதரி நிவேதிதா, ராஜாராம் மோகன்ராய், தந்தை பெரியார், அம்பேத்கர், காந்தி, நேரு போன்றோர் பெண்களைக் குறித்தும் அவர்களின் நிலையை மாற்றும்   சீர்திருத்தங்கள் குறித்தும் பேசினார்கள். சதி என்னும் பெயரில் நடந்த உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பெற்றது. கைம்பெண் அடையாளங்களை விடுவது பற்றியும், ஆண்கள் மறுதாரத்தை ஏற்றுக் கொள்வதைப் போலப் பெண்களும் மறுமணம் புரிய முன்வர வேண்டும் எனப் பேசினர்; எழுதினர். பாரதி, பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் தீவிரமாக விதவைகளின் நிலையைக் களையவேண்டும் என்றனர். தொடக்க காலச் சிறுகதைகளில் பெண்களின் முக்கியமான சிக்கலாக வித

வைப் பிரச்சினை பேசப்பட்டதை 1960 வரை வாசிக்கலாம். வெள்ளுடை அல்லது காவி உடை, மொட்டை அடித்தல், நகைகளையும் வளையல்களையும் அணிவதைத் தவிர்த்தல் போன்ற புற அடையாளங்களைக் காட்டி விதவைப் பிரச்சினையை முன்வைத்த கதைகளை மணிக்கொடு எழுத்தாளர்களும் திராவிட இயக்க எழுத்தாளர்களும் எழுதிக்காட்டினர். என்றாலும் இந்திய/ தமிழ்ச் சமூகத்தில் விதவைகள் என்னும் பாத்திரம் இன்னும் ஒழியவில்லை இந்த நிலையில் அத்தகைய பாத்திரங்களின் அக உணர்வை எழுதிக்காட்டிப் பேசும் எழுத்துகள் வரத்தொடங்கியுள்ளன. குறிப்பாகப் பெண்ணெழுத்துகளில் இளம் விதவைகளின் பாலியல் 

விருப்பங்கள் அடக்கப்படுவதும், குடும்ப வெளிக்குள் தனித்திருக்கும்படி தூண்டப்படும்போது மனம் தவிக்கும் தவிப்பையும் பெண்கள் எழுதிக்காட்டியுள்ளனர். அதன் ஒரு மாதிரியாக கலைச் செல்வியின் இந்தக் கதையை வாசித்துப் பார்க்கலாம்.

விதவையானதால் ஒதுக்கப்படும் ஒரு பெண்ணின் முழுநாள் வாழ்க்கையைக் கூடக் கதை முன்வைக்கவில்லை. இரவுகளில் விதவையின் மனம் படும் அல்லாட்டங்களையே கதை முன்வைக்கிறது. விதவையான பெண், புதிதாகத் திருமணமாகிப் போயிருக்கும் தன் மகள் வீட்டின் இரவொன்றை எப்படி நகர்த்துகின்றாள் என்பதாகக் கதை எழுதப்பெற்றுள்ளது. 

பதினேழு வயது குழந்தையாக பனிரண்டாம் வகுப்பு முடித்திருந்த நேரம். இந்த வரன் வந்து இருந்தது மழை அடித்து ஓய்ந்தது போல ஒரு மாத காலத்தில் எல்லாமே மாறிப் போனது “கல்யாண நேரம் வந்துட்டா கட்டி வச்சாலும் நிக்காது” என்றாள் மாமியார். “எம்மவன் இருந்து செய்ய வேண்டிய விசேஷம்.. குடுப்பினை இல்லாம போச்சு தான் நட ஒடயா இருக்கும்போதே முடிச்சு விட்டுட்டா நிம்மதியா போய் சேர்ந்துடுவன்” என்றார் மாமனார். அவர்தான் பேத்திக்கு வீட்டு வேலைகள் கற்று தந்து விட்டு வருமாறு அனுப்பியிருந்தார்.

மகள் வீட்டில் தனித்திருக்கும் அவளுக்குத் தனது பெரிய குடும்பமும் படுப்பதற்காகத் தரப்பட்ட அறையும் முதலில் நினைவில் வருகிறது.

கணவன் இல்லையேயொழிய புகுந்த வீட்டில் ஆட்களுக்கு குறைவில்லை. மாமியார்.. மாமனார்.. திருமணமாகாத நாத்தி ஒருத்தி… கணவனிடம் கோபித்துக்கொண்டு வந்திருக்கும் நாத்தி ஒருத்தி…. பூஜை புனஸ்காரம் என்ற ஆன்மீகத்தேடலோடு சம்பாதிக்கும் நாட்டமில்லாத கொழுந்தன் ஒருவன்.. இவர்களோடு நானும் மகளுமாக வாழ்ந்த வாழ்க்கையில் இத்தனை பொறுமையாக படுக்க  வாய்த்ததில்லை அவளுக்கு. தலையை உயர்த்திக் கடிகாரத்தைப் பார்த்தாள் மணி பத்தாகி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. கோயில் கோயிலாக சுற்றிவிட்டு இந்நேரம் தான் கொழுந்தன் வீடு திரும்புவார். இரவு விளக்கின் ஒளியில் கடிகாரத்தின் தங்க கரங்கள் மின்னின. மகளுக்கு சீராக அளித்த கடிகாரம் தான் இது.

நினைவுகள் மகள் வீட்டிற்கும்  தனது கணவன் வீட்டிற்குமாக அலைகிறது தனித்திருக்கும் அம்மாவிற்குத் தொல்லையாக ஆகிவிடக் கூடாது என்று கருதியே மகளும் மருமகனும் கதவைத் திறந்து நிதானமாக மூடுகிறார்கள். ஆனால் அவளுக்கோ இரவின் கொடுங்கரம் பெருஞ்சத்தமாகப் படுகிறது.  

படுக்கையறை கதவு திறக்கும் ஓசை கேட்டது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். இரவு விளக்கு தான் என்றாலும் சிறிய அறை என்பதால் வெளிச்சம் நிறையவே இருந்தது. 

மருமகனும் மகளும் காட்டும் நாகரிகத்தைத் தனது கணவனின் இருப்போடு நினைத்துக்கொள்கிறாள்.

இவளின் கணவன் கூட முற்றத்தை கடப்பதற்கு இப்படித்தான் சங்கோஜப்படுவான்.

********** 

கணவன் இறந்து போன பிறகு அவளும் கைக்குழந்தையான மகளும் கணவருடன் இருந்த அதே அறையைத்தான் உபயோகித்துக் கொண்டனர். நாத்தனாருக்கு திருமணம் ஆன பிறகு மாப்பிள்ளை வரும்போதெல்லாம் அறையை ஒழித்துக் கொடுக்க வேண்டி வரும். இடம் மாறினாலும் வேலை களைப்போ என்னவோ தூக்கம் பாதிப்பதில்லை.

திருமணத்திற்குப் பின்னான தலையாடிப் பிரிவில் கணவனை இழந்தவள் அவள் . அதுவும் அந்த இரவில் நினைவுகளாக அலைகின்றது 

அவளுக்கும் தலை  ஆடி வந்தது. மாப்பிள்ளைக்கு மகளுக்கும் புது துணிமணிகள் எடுத்து வைத்திருந்தனர்.அவளின் பெற்றோர்கள். பிறந்த வீட்டிற்குச் செல்லவே அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் கணவனுக்கும் மனைவியை அனுப்ப எண்ணம் இல்லை. முதல் நாள் இரவு இரண்டு பேருமே பிரியப் போகும் ஒரு மாத காலத்தை எண்ணிக்கொண்டே அருகருகே படுத்து இரவைக் கழித்திருந்தனர் “மாசம் முழுக்கன்னா எங்கம்மா ஒண்டியாளா சோறாக்க சிரமப்படும். பதினெட்டு முடிஞ்சதும் அவளை அனுப்பி வுட்டுடுங்க அத்தை” என்றான் கிளம்பும்போது மாமியாரிடம். ஆனால் அதற்கு தேவையேயின்றி பதினைந்தாவது நாளில் இறந்து போனான். மகள் அப்போதுதான் உருவாகி இருந்தாள்.

 அந்த மகளுக்குத் திருமணமும் ஆகிவிட்டது. ஆனால் வயது பதினேழுதான். மகளுக்குப் பதினேழு என்றால் அம்மாவுக்கு வயது என்னவாக இருக்கும் என்பதெல்லாம் கதையில் பேசப்படாத விசயம். திருமணமாகி ஓராண்டுகூட ஆகாத நிலையில் கணவனை இழந்தவளின் பொறுப்புகளை மாமனார் எடுத்துக் கொண்டு பேத்தியின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.  அப்போது அவர் சொன்ன சொல் இவளுக்கும் இந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வுக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்பதுபோலப் படுகிறது. அதையும் அவள் தாங்கிக் கொண்டவளாக இருக்கிறாள்.

 “தகப்பன் இல்லாத புள்ள ஏதோ இந்த தாத்தன் எனக்கு தெரிஞ்ச முட்டும் வளத்திருக்கேன்… கம்னாட்டி வளத்த புள்ளன்னு நாக்கு மேல பல்ல வச்சுப் பேசிப்பிட கூடாதேன்னுதான் இத சொன்னேன்… என்றார் மாமனார். அவள் மகளை பெண் பார்க்க வந்த அன்றே.


பெருங்குடும்பமாக – கூட்டுக்குடும்பமாக இருந்தபோதிலும் கணவனின் மறைவுக்குப் பின்னர் அவள் தனியாக இருப்பதாகவே நினைக்கிறாள். அந்தப் பெண்ணின் மனவோட்டமாக கதையை எழுதிக்காட்டும் கதாசிரியர் ஒருநாள் இரவுத் தூக்கம் -நிம்மதியான தூக்கம் மகள் வீட்டில் கிடைத்த து என்ற போதிலும் அவள் மனம் பெருங்குற்றவுணர்விலேயே அலைகிறது என்பதாகக் காட்டிக் கதையை முடிக்கிறார். விதவையாக இருப்பது – அவளின் இரவுகளை நகர்த்துவது எப்போதும் ஒரு குற்றச்செயலாகவே இருக்கிறது என்பதைக் கதையின் கடைசியில் தாய்க்கும் மகளுக்கும் அந்தச் சிறிய உரையாடல் வழியாகவும் முன்வைக்கிறார். அந்த உரையாடல் இப்படி இருக்கிறது:

எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை “அசந்து தூங்கிட்டிருந்தியா அதான் உன்னை எழுப்பாமல் நானே காபி போட்டுக் கொண்டாந்தேன் என்றாள் மகள் கட்டிலருகெ வந்து நின்று நேரம் தாழ்த்தி எழுந்ததில் சற்றே குற்ற உணர்வு தோன்ற வேகமாக க் கழிவறையை நோக்கி நடந்தாள் அவள் .

“அப்படியே பல் வெளக்கிட்டு வந்துடும்மா.. காபி ஆறிடும்…” முதுகுப்புறமாக மகளின் குரல் கேட்டது

“சரி” முகத்தில் வழிந்த சில்லென்ற நீரால் கழுவி தள்ள முயற்சித்தான் அவள் 

விதவைகளின் தூங்காத இரவுகளில் ஒன்றைத் தான் வெட்டி எடுத்துத் தருகிறது கலைச்செல்வியின் கதை.