முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின் 5
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.

ஒரு இளம் பெண்.

அவளுக்கு இப்பொழுதுதான் திருமணம் ஆகியிருக்கிறது. அந்தப் பெண் அவள் கணவன் வீட்டில் இருக்கிறாள். அவள் நன்றாகத் துவைத்த அழகான சேலையை உடுத்தியிருக்கிறாள்.

அந்தப் பெண் சமையல் செய்து கொண்டிருக்கிறாள்.

அவள் கட்டித் தயிரைப் பிசைகிறாள்.

அடுப்பில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.

பொரிக்கான் சட்டியில் நெய் உருகிக் காய்ந்துகொண்டிருக்கிறது.

அவள் அவசரமாக தயிர்பிசைந்த அவள் சேலையில் துடைக்கிறாள். அவள் பிசைந்த தயிரைப் பொரிக்கான் சட்டியில் கொட்டுகிறாள். பொரிக்கான்சட்டியில் இருந்து புகை எழும்புகிறது. அவள் கண்களைப் புகை நிரப்புகிறது.

கணவனுக்கு அவன் சோறு பரிமாறுகிறாள்.

வட்டில் நிறையச் சோறு, சோறு தெரியாமல் குழம்பு.

அவள் கணவன் ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

அவன் மனைவியிடம் சொல்கிறான்.

“குழம்பு நல்லாருக்கு..”

அவள் சமையலைக் கணவன் புகழ்ந்து பேசுவதைக் கேட்டதும் அந்தப் புதுப்பெண்ணின் முகத்தில் மெல்லிய புன்னகை பூக்கிறது.

-கூடலூர்க் கிழார்
குறுந்தொகை 167