‘விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்?’ என்றி ஆயின்-
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், 5
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. 10

 

“காரி…”

ஒரு மன்னன் பெயர்.

“ஓரி…”

இதுவும் ஒரு மன்னன் பெயர்தான்.

இந்த இரண்டு மன்னர்களுக்கும் போர் நடந்தது.

‘காரி’ அவனுடைய கொலைவாளால் ‘ஒரி’யை வெட்டிக் கொன்றுவிட்டான்.

வெற்றி பெற்ற மன்னன் ‘காரி’.

‘காரி’ அவன் கொலைவாளைக் கையில் ஏந்திக்கொண்டு ‘ஓரி’யின் தலைநகரத்தில் நுழைகிறான்.

‘காரி’யை அந்தப் பெரிய தலைநகரத்தின் மக்கள் வரவேற்கவில்லை. அந்தப் பெரிய தலைநகரத்தின் மக்கள் அவர்களின் பாசத்துக்குரிய மன்னனைக் கொலை செய்த ‘காரி’யை வெறுத்தார்கள்.

அந்த மக்கள் அவர்கள் வெறுப்பைத் தெரிவித்தார்கள்.

ஆவேசத்தோடு அவர்கள் முழங்கினார்கள்…

“கொலைகாரன் வருகிறான்..”

“கொலைகாரன் வருகிறான்..”

“ஓடுங்கள்…”

“ஒளிந்துகொள்ளுங்கள்…”

வெற்றிபெற்ற மன்னன் ‘காரி’ அவன் கையில் கொலைவாளை ஏந்திக்கொண்டு அந்தப் பெரிய தலைநகரத்தில் நகர்வலம் வருகிறான்.

அந்த நகரத்தின் பெண்கள் அவர்கள் கணவன்மாரை – வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டிக்கொண்டு ஒளிந்து கொண்டார்கள்.

வெற்றிபெற்ற மன்னன் காரியை அந்தப் பெரிய தலைநகரத்தின் மக்கள் வரவேற்கவில்லை.

கபிலர்
நற்றிணை 320