கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி,
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு,
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை,
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து, 5
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில-
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. 10

 

ஒரு பாலைவனம்.

அந்தப் பாலைவனத்தில் வெயில் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது. அணல் மிதக்கிறது.

அந்தப் பாலைவனத்தில் ஒரு ‘யா’ மரம். உயரமாக வளர்ந்திருக்கிறது. அந்த ‘யா’ மரம்.

அந்த ‘யா’ மரத்தின் அடித்தூரில் ஒரு பச்சோந்தி உக்காந்துக்கிட்டுருக்கு. அது ஆண் பச்சோந்தி. அதுக்கு வயசாய்ட்டுது. வயதான அந்தப் பச்சோந்தியால் அந்த ‘யா’ மரத்தில் ஏற முடியல. அது உக்காந்த இடத்திலேயே உக்காந்துகொண்டு அது அடிக்கடி நிறம் மாறிக் கொண்டிருக்கிறது.

அந்த பாலைவனத்தில் நடந்து வந்த பாணர்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் வீணையை வாசித்துக்கொண்டு போகிறார்கள். பாணர்களின் வீணையிலிருந்து புறப்பட்டு வருகிற நாதம் அந்தப் பெரிய பாலைவனத்தை இசையால் நிரப்பிக்கொண்டிருக்கிறது.

வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மிகவும் களைப்படைந்திருந்த வயதான அந்தப் பச்சோந்தி பாணர்களின் வீணையில் இருந்து புறப்பட்டு வருகிற இசை நாதத்தைக் கேட்டதும் அது வருத்தம் எல்லாம் நீங்கி உயரமான அந்த ‘யா’ மரத்தில் அது மேலே மேலே ஏறிப் போய்க்கொண்டிருக்கிறது.

பாணர்களின் வீணையிலிருந்து புறப்பட்டு வருகிற நாதம் அந்தப் பெரிய பாலைவனத்தை இசையால் நிரப்பிக் கொண்டிருக்கிறது.

அறுவை வாணிகன் இள வேட்டனார்
நற்றிணை 186