வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்,
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்,
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே;
அளிதோ தானே- தோழி!- அல்கல் 5
வந்தோன்மன்ற குன்ற நாடன்;
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்;
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி, 10
மையல் மடப் பிடி இனைய,
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே.

மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிக் கொண்டிருக்கிறது.

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

ஆங்காரமாக முழங்கிக் கொண்டிருக்கிறது இடி.

அந்தப் பெரிய காட்டில் ஒரு பெரிய ஆண் யானை மெள்ளமாய் ரொம்ப்ப மெள்ளமாய் நடந்து ரூபாய்க் கொண்டிருக்கிறது. அந்தப் பெரிய ஆண் யானை தன் தும்பிக்கையை தனக்கு முன்னால் தரையில் ஊன்றி, அது தரையை ஆராய்ந்து பார்த்தப் பிறகுதான் அந்தப் பெரிய ஆண் யானை அதன் முன்னங்கால்களை மெல்ல மெல்ல எடுத்து வைக்கிறது.

மலைக்கு மேலேயிருந்து சீறிப்பாய்ந்து கொண்டு தரைக்கு வந்து கொண்டிருக்கிறது ஒரு இடி.

அந்த இடி அந்தப் பெரிய ஆண் யானை மேல் விழுகிறது.

செத்து விழுகிறது யானை.

செத்துப்போன அந்தப் பெரிய ஆண் யானையை அந்த ஊர் மக்கள் அறுக்கிறார்கள்.

அவர்கள் அந்தப் பெரிய ஆண் யானையின் தந்தங்களைக் கவனமாக அறுத்து எடுக்கிறார்கள்.

அந்த ஊர் மக்கள் அந்தப் பெரிய ஆண் யானையின் பெரிய உடம்பை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டுகிறார்கள்.

கறிநாத்தம் நாறிக்கொண்டிருக்கிறது.

ஊர் மக்கள் ஒருத்தரும் உறங்கவில்லை.

முழித்துக் கொண்டிருக்கிற அந்த மக்கள் தெருவில் நின்றுகொண்டு சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஊர் சத்தக்காடாருக்கு.

காட்டாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

பலத்த மழையையும், ஆவேசமான இடி முழக்கத்தையும்,முழித்துக் கொண்டிருக்கிற ஊர் மக்களையும் பொருட்படுத்தாமல் ஒரு இளைஞன் அந்தக் காட்டாற்றில் நீந்திக் கரையேறிநடந்து போய்க் கொண்டிருக்கிறான்.

பயமறியாத அந்த இளைஞன் அந்த நடூராத்திரியில் அவன் காதலியைச் சந்திக்கிறதுக்குப் போய்க்கொண்டிருக்கிறான்.

தொல்கபிலர்
நற்றிணை 114