குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, 5
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனாக் கௌவைத்துஆக,
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?

இது எங்கள் ஊர்.

எங்கள் ஊரில் ஒரு பணக்கார வீடு இருக்கிறது.

அந்தப் பணக்கார வீட்டில் அழகான ஒரு இளம்பெண் இருக்கிறாள்.

ஒரு வெளியூர்ப்பையன் இரவில் எங்கள் ஊருக்கு வந்து அந்தப் பெண்ணைச் சந்திக்கிறான்.

இது ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கிறது.

இது ஊர் பூராத் தெரியும்.

சில பொம்பளையாளுக்க அந்தப் பொட்டப்புள்ளையச் சாடைமாடையா வைவாக. சில பொம்பளையாளுக்க அந்தப் பொட்டப்புள்ள முகத்துக்கு நேராக வைவாக.

அந்த வெளியூர்ப்பையன் எங்கள் ஊருக்குள் வந்தாள் அவனை அடித்துத் துரத்துவது என்று ஊர் எளவட்டங்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

எங்கள் ஊர் எளவட்டங்கள் எங்கள் ஊரை இரவு நேரத்தில் காவல் காக்கிறார்கள்.

எங்கள் ஊர் ஆம்பளையாளுக்களும் பொம்பளையாளுக்களும் இரவில் உறங்காமல் முழித்திருந்து தெருவில் கூடி நின்று கொண்டு சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் ஊர் அந்தப் பையனை காவல் காக்கிறது.

அவள் வீடு அந்தப் பெண்ணை காவல் காக்கிறது.

அந்தப் பெண் அவள் காதலனைச் சந்திக்காமல் மெலிஞ்சிட்டாள்.

அந்தப் பெண் ஊர்க்காரர்களைப் பார்த்துக் கேட்கிறாள்.

“நான் என் காதலனை இழந்தேன். நான் என் பெற்றோர்களின் ஆதரவை இழந்தேன். நான் என் உடல் நலத்தை இழந்தேன். நான் என் உறக்கத்தையும் இழந்தேன்.

“நான் இழந்தது ஏராளம்.”

“ஊர் எதை இழந்தது?”

“ஊர் இந்த நடு இரவில் கண் உறங்காமல் கண் முழித்துக்கொண்டிருக்கிறதே என்னத்துக்கு?”

மதுரை சீத்தலைச் சாத்தனார்
நற்றிணை 36