சனம் இன்னும் சம்பிரதாயங்களைவிட்டு முழுமையாக வெளியே வரவில்லைதான். சம்பிரதாயங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையாய் இருக்கிறது. எதையாவது செய்யும் சம்பிரதாயத்தில் ஒன்று விட்டுப்போனாலும் வீட்டுக்காரர்கள் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று பயந்தே அசம்பாவிதங்களைத் தேடிக்கொள்கிறார்கள். பரிகாரம் செய்தால் எதுவும் சரியாகிவிடுமென்று இன்னமும் சனம் நம்பிக்கொண்டிருக்கிறது. பரிகாரம் என்று பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.

கல்யாணப்பேச்சு ஒரு வீட்டில் ஆரம்பித்ததிலிருந்தே சம்பிரதாயங்களும் கூடவே எழும்பிவிடுகின்றன. வெளியில் கல்யாண வீட்டார் கிளம்பிச் செல்கையில் எதிர்க்கே விறகுச்சுமை வரக்கூடாது. வந்தால் போற காரியம் விளங்காது என்று வீடு திரும்பிவிடுகிறது. செம்பூத்து குறுக்கே வரக்கூடாது. செம்பூத்து என்ற பறவை இனமே அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அவைகளும் அதிகம் கண்ணில் படுவதுமில்லை. கேஸ் சிலிண்டர் பெருகிவிட்டதால் எதிரே விறகுச்சுமை வருவதில்லை. அப்படி வந்தாலும் வீடுபோய் திண்ணையில் அமர்ந்து ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு போய்விடலாம் என்று சம்பிரதாயத்தை உடைத்தார்கள்.
ஒருமுறை சிறுவலூரிலிருந்து இரவில் என் சகளையின் டூ வீலரில் பின் இருக்கையில் அமர்ந்து வந்துகொண்டிருந்த நேரம் இரவு மணி எட்டு. மாமனார் வீடு வந்து இறங்கியதும் என் வயிற்றில் நான் செருவி வைத்திருந்த பீர் பாட்டில் நழுவி டொப்பென வாசலில் விழுந்து உடைந்துவிட்டது. மாமனார் அந்த இரவிலும் சாணி வைத்து உடைந்த துண்டுகளை தொட்டெடுத்துக் கொண்டு சென்று தூர வீசினார். சகளை மீண்டும் வண்டியைக் கிளப்பிவிட மீண்டும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன். “வர்றப்ப மொசலு ஒன்னு குறுக்க ஓடுச்சுங்க! அப்பவே நெனச்சேன் எதாச்சிம் நடக்குமுன்னு!’’ என்றார்.

பிணம் எதிரே வந்தால் மிகவும் நல்லது என்கிறார்கள். இதிலெல்லாம் என்ன கணக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. பழமைகளைக் கட்டிக் கொண்டிருந்தவர்கள் உலகமயமாக்கலால் தடுமாறி அவைகளைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்.

திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பதே சுமங்கலி பாக்கியம் உள்ளதா? என்று அறியத்தான் என்று இருக்கும்போது அடுத்த நாளே கார் விபத்தில் இருவரும் இறந்துவிடுகிறார்களே! பேப்பரில் நாம் வாசிக்கிறோம். விபத்தில் சம்பவ இடத்திலேயே மணமக்கள் மரணம் என்று. இதற்காக எந்த ஜோதிடன் மீதாவது கேஸ் போட்டு அவனை உள்ளே தள்ளிவிட்ட நிகழ்ச்சி எங்காவது நடந்திருக்கிறதா? பேச்சு ஒன்று மட்டுமே ஜோதிடர்களிடம் உள்ள ஒரே முதல். பேச்சை வைத்துத்தான் அவர்கள் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.

கிளி ஜோதிடக்காரன் எடுத்துப்போட்ட சீட்டுகளைக் கலைத்து ஒரு சீட்டை எடுத்துவைக்கிறது. அந்தக் கிளிக்கு நெல்மணிகளைப் பரிசளிக்கிறான். பாம்புப்படம் வந்தால் மனப்பாடம் செய்ததை அப்படியே ஒப்பிப்பான். கைரேகை இங்கு பார்க்கப்படும் என்று சின்ன அட்டையை வைத்துக்கொண்டு சாலையில் அஞ்சாம் வகுப்பை மூனு வருசம் படித்தும் தாண்டாத ஒருவன் உட்கார்ந்துவிட்டால் அவனைச் சுற்றிலும் கணிசமான கூட்டமிருக்கும். மனிதர்கள் வாழ்க்கை மீது ஏன் இத்தனைப் பயத்தோடு சுற்றுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அவர்களுக்குப் பிடிமானத்திற்கு எதுவோ தேவை என்கிறபோது கடவுளைப் பிடித்துக்கொண்டார்கள். பார்க்கலாம் நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மூன்று கோவில்கள் இருப்பதை. கடவுள் மனிதனின் சொல்பேச்சை கேட்கவில்லை என்றால் அலகு குத்தி பயங்கரம் செய்கிறார்கள்.
கேள்விப்பட்ட கதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது. கடவுளை வரவழைத்து தன் ஆசையை அவரிடம் சொல்லி பயன் பெறுவதற்காக ஒருவன் யாகம் வளர்த்தான். யாகம் வளர்ப்பவர்கள் அனைவரும் முனிவர்களாக இருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. ஒரு குப்புச்சாமியோ சின்னச்சாமியோகூட யாகம் வளர்த்துக் கடவுளை அழைக்கலாம். பக்தன் குப்புச்சாமியின் யாக வேண்டுதல் கடவுளைக் குளிர்விக்கவே குப்புசாமியின் முன்பாக தோன்றினார். பக்திப் பரவசத்திலிருந்த குப்புச்சாமி, சீக்கிரமாக தன் விருப்பத்தை கடவுளிடம் சொன்னான்.

“கடவுளே! எனக்கு தாங்கள் ஆயிரம் குறிகளை வளங்க வேண்டும்!’’ என்றான்.

“அப்படியே ஆகக் கடவது பக்தா!’’ என்று குப்புச்சாமிக்கு ஆயிரம் குறிகளைப் பரிசளித்தார் கடவுள்.

வரத்தைப் பெற்றுக்கொண்டவுடன் குப்புச்சாமி இடத்தைக் காலி செய்து போய்விட்டான். கடவுள் திருதிருவென விழித்தார். அவர் கையில் இரண்டாயிரம் விரைகள் இருந்தன. அவசரத்தில் குப்புச்சாமி அவைகளைப் பெற்றுக்கொள்ளாமலேயே ஓடி விட்டான். கடவுள், “டேய் குப்புச்சாமி! எங்கடா போனே அதுக்குள்ள? இதுங்களை வச்சிட்டு நான் என்னடா பண்டுவேன்?’’ என்று தேடிக்கொண்டு சென்றார்.

ஒரு வீட்டில் இறப்பு சம்பவம் நடந்துவிட்டால் சம்பிரதாயங்கள் ஆரம்பமாகிவிடுகின்றன. பங்காளி மாமன் மச்சான் என்று இழவு வீட்டில் குவிந்ததும் கோடித்துணி போடுவதிலிருந்து ஆரம்பித்துவிடுகிறது. இதுவெல்லாம் இன்னும் எத்தனை காலம் நடக்கும் என்று தெரியவில்லை. நகர்ப்புறங்களில் பிணம் விழுந்ததும் மின்மயானத்திற்கு உடனேயே தூக்கிவிடுகிறார்கள். கிராமங்களில்தான் இன்னும் சம்பிரதாயங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
அடுத்த தலைமுறைக்கு கிராமங்களில் சேவிங் செய்து கொள்ளவோ, கட்டிங் செய்து கொள்ளவோ, துணிமணி வெளுத்து பந்தம் பிடிக்கவோ ஆள் கிடையாது. காலகாலமாக வருடக் கூலிக்காக அவர்கள் தோட்டம் தோட்டமாகச் சென்று கட்டிங் போட்டுவிட்டு வந்தார்கள். அவர்கள் ஊர் நாயம் பேசிக் கொண்டே ‘சிரிக்காம உக்கோருங்க சாமி!’ என்று சொல்லி அக்குள் முடியை சேவிங் செய்தார்கள். அப்படியே தன் வாரிசுகளை படிக்க வைத்து வேலைக்கு என்று வெளியூர் அனுப்பி விட்டார்கள். ஊருக்குள் இருக்கும் இரு பெரியவர்களும் இல்லாது போகிற போது சுடுகாட்டிலும், வீட்டிலும் நடைபெறும் சம்பிரதாயங்களுக்கு என்ன செய்வார்கள் சனம்? என்பதைக் காண வேண்டும் சீக்கிரமாய் நான்.

நைட்டி என்ற உடைவகை வேலை செய்து களைப்படைந்த பெண்களுக்காக இரவில் மட்டுமே பயன்படுத்திக் கொள்வதற்கான உடை. அதை இன்று கிராமப்புறங்களில் பகல்வேளையிலும் பெண்கள் அணிந்து சுற்றும் காட்சியை பார்த்திருக்கலாம் நீங்கள். ஆக சம்பிரதாயங்கள் அழிக்கப்படுகின்றன அல்லது மறக்கடிக்கப்படுகின்றன. வசதிக்கேற்ப மாறிக்கொள்வதில் தவறு இருப்பதில்லைதான். பின்னால் குஞ்சம் வைத்து எந்தப்பெண் இப்போது சேலை அணிகிறார்? ஆத்தாளுக்கு பின்னால வாலு பாருடி! என்று குழந்தைகள் ஒருகாலத்தில் இழுத்து இழுத்து விளையாடின.

கம்ப்யூட்டர் சாதனம் நம் அறிவு விருத்திக்கு நிச்சயம் தேவைதான். ஏராளமான விசயங்கள் கொட்டிக்கிடக்கிறது. ஒரு அறிஞரைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் கூகுள் தேடலில் அவர் பெயரைப் போட்டால் போதுமானது. அவரின் வண்டவாளங்கள் முழுதும் நம் கைக்கு வந்துவிடுகிறது. நம்ம பயல்கள் லைப் ஷைன் மென்பொருளை ஏற்றி ஜாதகம் பார்க்க பயன்படுத்துகிறார்கள். இங்கு கம்ப்யூட்டர் ஜாதகம் பார்க்கப்படும் என்று மாட்டிவிடுகிறார்கள் போர்டு! அந்த மென்பொருள் பல விலைகளில் கிடைக்கிறது. அதை வாங்கிப் போட்டுக்கொண்டால் நாமும் ஜோதிடர்கள் ஆகிவிடலாம்.

பிறந்த தேதி, பெயர் மட்டும் அதற்கு அளித்தால்போதும். இன்னமும் 25 வருட காலம்வரை நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று அது சொல்லிவிடும். இதை வைத்துக்கொண்டு இங்கு நாட்களை நகர்த்துபவர்கள் ஏராளம். பகுத்தறிவை கொண்டுதான் மனிதன் கம்ப்யூட்டரை கண்டுபிடித்தான். கம்ப்யூட்டர் எப்படிடா பொய் சொல்லும்? என்று மக்கள் குழந்தை பிறந்தவுடன் ஜாதகக் கணிப்புக்காக ஓடுகிறார்கள். தனியாக அதற்குப் பயங்கரமான அறிவு இருப்பதாக நம்பிக்கொண்டு இருப்பதால் பிழைப்பு ஓடுகிறது கம்ப்யூட்டர் ஜோதிடக்காரர்களுக்கு.

விஞ்ஞானத்தின் அதி அற்புத கண்டுபிடிப்பு கைப்பேசிதான். அதை நன்மைக்கு பயன்படுத்துகிறோமா தீமைக்கு பயன்படுத்துகிறோமா என்பது அதை வைத்திருப்பவர்களின் மனநிலையை பொறுத்து ஆகிவிட்டது. பள்ளியில் படிப்பவர்களுக்கு எதற்கு கைப்பேசி என்ற கேள்விக்கு பெற்றோர்கள் ஆயிரத்தெட்டு விளக்கங்கள் சொல்லலாம். கேட்க அவைகள் நன்றாக இருக்கும்.

ஆனால், மாணவர்கள் சினிமா பாடல்களையும், பாலியல் படங்களையும் ப்ளூடூத் வழியாக ஏற்றிக்கொண்டு சின்ன வயதிலேயே தவறான பாதைக்குள் நுழைந்து விடுகிறார்கள். சிறுவர்களுக்கு அக்காலத்தில் ஓடியாடி விளையாட வகைவகையான விளையாட்டுகள் இருந்தன. இன்று ஒரே இடத்தில் அமர்ந்து கைப்பேசியில் கேம் விளையாடுவதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாடல் வசதி, கேமரா வசதி இல்லாத கைபேசிகளை வாங்கி இனியேனும் கொடுப்பார்களாக!

சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மாணவ மாணவிகளுக்காக பேசச் சென்றிருந்த நான் பல விசயங்கள் பற்றிப் பேசுகையில் சில சமயம் கொந்தளித்தும்விட்டேன். இன்று கோவை மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறத்திலும் வளர்ந்து நின்றிருந்த புளியமரங்கள் எதுவுமில்லை. சாலையை அகலப்படுத்தும் பணியில் மரங்களனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. திரும்ப வருகையில் அன்னூர் சாலையில் இருமருங்கிலும் புளியமரங்கள் நின்றிருக்கின்றன. எத்தனை காலம் இவைகள் நின்றிருக்கும்? கூடிய சீக்கிரம் அவைகளும் வெட்டப்படலாம்.

அழகாகச் சொல்கிறார்கள் மழை வேண்டுமெனில் மரங்கள் நடுவோம் என்று! இருக்கும் மரங்களை அடியோடு அழிப்பதில்தான் கவனம் கொள்கிறோம். இருக்கும் நிலத்தடி நீரையும் போர்போட்டு உறிஞ்சி மாடித்தோட்டம் வைத்து அங்கே பைப்பிடித்து ஊற்றி, காய்கறிகள் வளர்த்து இயற்கை காய்கறி வகைகளுக்கு திரும்பிவிட்டோம் என்று மகிழ்கிறார்கள்.

இதில் கிராமப்புறங்களில் மண்ணை விற்று சோறு தின்னும் நிலைக்கும் வந்துவிட்டார்கள். இந்த இடம் விலைக்குப் போகாது என்பதை உறுதியாய் தெரிந்துகொண்ட பின் மண்ணை விற்றுவிடுவது நடக்கிறது. டிப்பர் லாரிகள் சாமம் ஏமம் பாராமல் எங்கேடா சென்று வருகிறது என்று பார்த்தால் காட்டிலிருந்து மண்ணை நிறைத்துக்கொண்டு உறுமிச் செல்கின்றன சாலைகளில். திடீர் திடீரென பயிர்கள் விளைந்த நிலம் இருந்த இடத்தில் குளங்கள் நின்றிருக்கின்றன தண்ணீரில்லாமல். தான் வாழும் காலத்தில் நிம்மதியாக சொகுசாக வாழ்ந்து விட்டு போய் விடுவதை சனம் விரும்ப ஆரம்பித்து விட்டது. முந்தைய காலத்தில் தன் சந்ததியும் நலமாய் வாழ வேண்டும் என்பதற்காக நிலங்களை வாங்கிப் போட்டு பயிர் செய்தது சனம்.

“டவுன்ல தடுக்கி உழுந்தா ஆஸ்பத்திமேலதான் உழுகோணுமாட்ட இருக்குங்கய்யா! சந்து சந்தா ஆஸ்பத்திரிதான் நிக்குது. ஒரு காய்ச்சல்னு போயி நிக்க முடியுதா? 2000 ரூவாய கவுண்டர்ல கட்டி ஃபுல் செக்கப் எடுத்துட்டு வா நீயிங்குறாங்க! அதுல நாலஞ்சு நோவைக் கண்டுபுடிச்சு அதுக்கு மொத வைத்தியம் பண்டுங்கறாங்க! அட்டை ஒன்னு குடுத்து தாட்டி உடறாங்க.. வருசம் பூராவும் அட்டைய காட்டீட்டு போயிப் போயி நின்னாலும் ஒன்னு போயி ஒன்னு வந்துடுச்சுங்கறாங்க! டவுன்லயே பெரிய ஆஸ்பத்திரிங்கறாங்க.. உள்ள போயிட்டா பொணமாத்தான் திருப்பி குடுக்குறாங்க!

கடற்கரையில எதாச்சிம் ஊர்வலமான்னு பார்த்தா காத்தால கூட்டமா ஓடுறாங்க.. நடக்குறாங்க.. கேட்டா சக்கரை இருக்குன்றாங்க.. டாக்டரு நடக்கச் சொல்லியிருக்காருன்றாங்க! ப்ரஸ்சர் இருக்குன்றாங்க.. காத்தாலயு பொழுதோடயு சனம் நடந்துட்டும் ஓடீட்டும் தான் இருக்குது!

தீனியே நோவக் கொண்டாந்துடுங்கய்யா அங்க! பர்க்கர்ங்கான்.. சாப்ட்டா பர்ர்ர் பர்ர்ர்ங்குது! பீட்சாங்கான் வகைவகையா வக்கனையா.. தின்னம்னா பின்னாடி பீச்சுது! பாஸ்ட்டு புட்டுங்காங்க! தின்னம்னா.. பாஸ்ட்டா பாத்ரூமுக்கு ஓடவேண்டியிருக்குது.

எல்லாரும் நோவை வச்சுட்டே மாத்திரை முழுங்கிட்டே சம்பாதிச்சுட்டு சுத்துறாங்க! பாவமா இருக்குதுங்கய்யா! இங்க என்னடான்னா ஆட்டுக்கால் சூப்புன்னு அம்மா குடுக்குறது எப்பிடி இருக்குது! அங்க நாலு காலை வெச்சு நாப்பது பேருக்கு ரோட்டுல ஊத்தீருவாங்க!

சரி ஞாயித்துக்கிழமெ வாயிக்கி சீச்சி திங்க ஆசை வந்து மெஸ்சு, ஹோட்டலு, வீட்டுச் சமையலு, மண்ணு சட்டி சமையலுன்னு போயி உக்காந்தா… நாயிக் கறியக்கூட போட்டுடறாங்க! மசாலா பொடிங்க எதை திங்கறோங்கறதையே உணர முடியாம நாக்கை சாவடிச்சுடுது!

இதுல என்னடான்னா ஊரே முச்சூடும் தண்ணிக்குள்ள இந்த வருசம் போயிரும் அடுத்த வருசம் போயிரும்னு கொட்டமுத்து உருட்டாமயே சொல்றாங்க! எனக்கென்னமோ சரியாப் படலீங்கய்யா! அதனால சென்னைக்கெல்லாம் நான் இனி போவ மாட்டேனுங்கய்யா!”

படித்து வேலையில் இருந்த நண்பர் ஒருவர் பொள்ளாச்சி திரும்பி இப்போது தேங்காய் பொறுக்கிக்கொண்டு தன் தோப்பிலேயே நிம்மதியாக தங்கி விட்டார். நல்ல சம்பளம் வாங்கிட்டு இருந்தீங்களே! என்று நான் கேட்டால், “உசுரோட ரொம்ப நாளு இருக்கோணுமுல்லங்க கோமு!’’ என்கிறார்.

“என்னங்கய்யா விவசாயம் பாக்கீங்க? பாருங்க… அங்க பாருங்க… என்ன கெடக்குதுன்னு? உரம் போடறேன் உரம் போடறேன்னு நிலத்துல வெளிநாட்டு உரத்தைப் போட்டு மண்ணை சாவடிச்சுட்டு இருக்கீங்கய்யா! மண்ணு வெந்து போயிருக்கும்! தென்ன மரத்தை அன்னாந்து பாருங்க! கொல கொலயா காய்ச்சுத் தொங்குற மரத்துல வெறும் மட்டைதான் தொங்குது காயக் காணம்! அதுலயும் எங்காச்சும் காயிக இருக்கு… அதும் நோவுக் காயிங்களா சொறிக் காயிங்க!’’

“ஆமாப்பா! இப்ப சடுதிக்கி நாலு வருசமாவே மரங்க செரியா பாளை வுடமாட்டீங்குது! சரி அதெல்லா உனக்கு எதுக்கு… கெழக்கால நம்ம அம்பது ஏக்கராவெ சக்கரை பேக்டரிகாரன் கேட்டுட்டு இருக்கான். உன்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு மொத்தமா குடுத்துடலானு இருக்கேன்!’’

“என்னுங்கய்யா சொல்றீங்க! சக்கரை பேக்ட்ரிக்காரனுக்கு குடுத்துட்டா அவன் கழிவுங்களை ஆத்துல அனுப்புவான். நொய்யல்னு ஒரு நதியோட நெலமெ தெரியுமாங்கய்யா… சோப்பு நொறைதான் வந்துச்சுனு சொன்னாங்கள்ல!

தொழில் வளர்ச்சின்னு சொல்லி சிப்காட்னு வந்துச்சு! சுத்திலும் இப்ப பத்து பாஞ்சு மைலுக்கு நிலத்தடி தண்ணி கெட்டு விவசாயமே போச்சு! கழிவுநீர் சுத்திகரிப்புன்னு வச்ச இடத்துல மூக்கப் பொத்திட்டே போறாங்க வர்றாங்க!

மழெ பேஞ்சுதான் ஓடையில தண்ணி போகும்னு சொல்வாங்க… அட வருசம் பூராவும் நாத்தத்தண்ணி போயிட்டே இருக்குது! நிலத்த விக்குறேன்னு சொல்லிட்டீங்களே பொசுக்குனு!

எனக்குன்னு அம்பது மாடு வாங்குங்க! நான் மாட்டுப் பண்ணை போடப்போறேன். மாட்டுச் சாணிய மண்ணுக்கு உரமாப் போடலாம்! வெந்துபோன மண்ணு சீராக நாளாகலாம்… ஆனாலும் மோசம் போயிராது! நம்மாழ்வார் அதத்தான சொன்னாரு.’’ பேசுவதற்கு மட்டும் விசயங்கள் அழகாக என்றுமே இருக்கிறது.