கலை எதையும் எதிர்க்கும். கலையையும்

-யாரோ

தமிழ்ப்படம் துரை தயாநிதி தயாரிப்பில் சீ.எஸ்.அமுதன் இயக்கத்தில் கண்ணனின் இசையில் டி.எஸ்.சுரேஸ் எடிடிங் செய்ய நிரவ் ஷா ஒளிப்பதிவு புரிந்து 2010 ஆமாண்டு உருவான தமிழ்ப் படம்.

தர்ம சாத்து என்பார்கள் அதை அனுபவித்தது தமிழ் சினிமா. இப்படி ஒரு சினிமா வரும் என முன் தலைமுறை எதிர்பார்த்திருக்குமா தெரியாது. ஆங்காங்கே நாகேஷ், தங்கவேலு தொடங்கி கவுண்டமணி வடிவேலு வரை பலரும் பல படங்களில் கிடைத்த இடங்களிலெல்லாம் சினிமாவை நக்கலடித்துக் கொண்டே சினிமாக்கள் செய்து வந்திருந்தாலும்கூட தமிழ்ப்படம் அளவுக்கு எதுவொன்றுமே இறங்கி அடித்ததில்லை. சி. ரங்கநாதன் தொடர்ந்து தன் படங்களில் சினிமாவை ஆனவரைக்கும் கிண்டல் செய்தார். ஆயினும் அவர் படங்கள் விதிவிலக்குப் படங்களாக ஒருபோதும் ஆகவில்லை. சி.எஸ். அமுதன் கையிலெடுத்தபோது சர்வசினிமாவும் நடுங்கியாக வேண்டியிருந்தது

‘நீ வளரணும்னா அந்த சைக்கிள்லே ஏறி பெடலை சுத்துப்பா’ என்பார் பாட்டி. சுத்தியதும் பெரிய பய்யன் ஆவார் சிவா. ஒரு பாட்டில் பணக்காரர் ஆவார் சிவா, அவரது வளர்ச்சியை இரண்டு விதத்தில் காட்டுவார் இயக்குனர் ஒன்று, வெளி உலகத்தில் சிவா மின்சார வாரியம், சிவா விமான போக்குவரத்து நிலையம், சிவா மார்ச்சுவரி, சிவா ரத்த வங்கி, சிவா ரயில் நிலையம் என்றெல்லாம் காணக்கிடைக்கும். இன்னொரு புறம் யாரிடம் சவால்விட்டு விட்டு உழைத்து சிவா முன்னேறினாரோ அந்த நாயகியின் அப்பா அழகு ஒரு காஃபி கேட்டு அது அவர் கைக்குக் கிடைக்கும்போது பணக்கார மாப்பிள்ளையாக திரும்பியிருப்பார் சிவா. அதகளம்

அரசியல்வாதி கேட்கும் லஞ்சத்துக்கு பதிலாக மூன்று ரூபாய் ப்ளஸ் ஒரு ஐம்பது பைசா சாக்லேட் ப்ளஸ் வெளியே நிற்கும் ஓட்டை சைக்கிள் என தந்துவிட்டு சைக்கிளைப் பிரியமனமில்லாமல் கடக்கும்போது ஒரு பார்வை பார்ப்பார் சிவா. சிவாஜி தோற்பார் அந்த இடத்தில். உள்ளே சாவி தரும் போது சைக்கிள் சாவி கார்ச்சாவி போலவே இருக்கும்.

ஒரு இரவில் பரதநாட்டியம் கற்றுக்கொள்வது எப்படி என சிவா படிக்கும் அதே காதலார்வத்துடன் ஒரு இரவில் பிரியாணி சமைப்பது எப்படி என இன்னொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார் சிவாவின் க்ளாஸ்மேட் எம்.எஸ்.பாஸ்கர். சிவாவின் மற்ற சகாக்கள் வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் மனோபாலா. வெண்ணிற ஆடை மூர்த்தியின் அப்பாவாக வந்து கண்கலங்க அட்வைஸ் செய்து செல்லும் நடிகர் சிறுவயதினராக இருப்பார். அவர் வந்து செல்லும்வரை அரங்கங்கள் அதிரும்.

குடும்பப் பாட்டு அதுவும் இங்கிலீஷ் பாட்டு பாடி பிரிந்த குடும்பம் சேரும். அமெரிக்க ஜனாதிபதி ஃபோன் செய்து எனக்காக நீங்க மறுபடி வேலைக்கு வந்துதான் ஆகணும் என சிவாவிடம் கெஞ்சுவார். இதெல்லாம் சிறு சாம்பிள்கள் தான். மொத்தப் படமுமே சரவெடியாய் சிதறும்.

சங்கர் முதல் கே.எஸ்.ரவிக்குமார் வரை ரஜினி முதல் சிம்புவரை யார் படத்தையும்விடாமல் வாரி அடித்தது தமிழ்ப் படம். காலங்காலமாக எதையெல்லாம் செய்து ரசிகன் ரசிப்பான் என்று பூ சுற்றினார்களோ அத்தனை பூவையும் எடுத்து திரும்பிச் சுற்றுவது ஒன்றே நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தில் இருநூறு சதம் ஜெயித்தது இந்தப் படம்

தமிழ்ப்படம் தனக்குள் அடித்து துவம்சம் செய்த தமிழ்ப்படங்கள்:

பாட்ஷா, தேவர்மகன், கந்தசாமி, ரமணா, மாப்பிள்ளை, பில்லா, வேட்டையாடு விளையாடு, காக்ககாக்க, மௌனராகம், சிதம்பர ரகசியம், விருமாண்டி, மொழி, காதலுக்கு மரியாதை, அண்ணாமலை, அந்நியன், பாய்ஸ், அபூர்வசகோதரர்கள், சிட்டிசன், வீராச்சாமி, தளபதி, நாயகன், சந்திரமுகி, மின்சாரக் கனவு, கிழக்கே போகும் ரயில், போக்கிரி, ரன், கஜினி, சூர்யவம்சம், நாட்டாமை, சின்னத் தம்பி, திருப்பாச்சி, தசாவதாரம்,
காதலன், நாளைநமதே, தூள், 7ஜி ரெயின்போ காலனி, வைதேகி காத்திருந்தாள், சென்னை 28, திருமலை, கேப்டன் பிரபாகரன்.

நகைச்சுவை என்பது ஆகக் கடினமான விசயம். அடுத்தவரை சிரிக்கச் செய்வதற்கு முழுமையான ஒப்புக்கொடுத்தலுடன் கூடிய உழைப்பும் முயற்சியும் அவசியம். ஒரு மொழியின் கதை, இசை, நடனம் ஏன் நடிப்புத் திறன் கூட பல மொழிகளிலும் வெல்லும். காமெடி எனப்படுகிற நகைச்சுவை பெரும்பாலும் அந்தந்த நிலத்துடனே உறையக்கூடிய கலாவினோதம் நகைச்சுவைக் கலைஞர்கள் மொழிவழி நிகழும் வைடூர்யங்கள். நகைச்சுவைப் படம் என்பது திரைப்பட உருவாக்கத்தில் கடினமான பகுதிதான். தமிழ்ப்படம் நகைச்சுவைப் படங்களைத் தொடவே இல்லை. ஸ்பூஃப் எனப்படுகிற எள்ளல்வழி அங்கதம் தமிழில் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் எடுக்கப்படுவதும் வெற்றி தோல்விகளை சந்திப்பதும் காலம் காலமாகத் தொடர்ந்துவரக் கூடியதுதான். தமிழ் மொழியைப் பொறுத்தவரை அபாரமும் அபூர்வமும் இரட்டைக் குழந்தைகள். எழுபது வருட சினிமா வரலாற்றில் 2010 ஆமாண்டு எடுக்கப் பட்ட தமிழ்ப் படம் அடைந்த வெற்றியை அதன் இரண்டாம் பாகமாக வெளியான தமிழ்ப் படம் 2 பெறவில்லை. இதுவும் நம் நிலத்தின் திரைரசனையின் வித்யாசங்களில் ஒன்றாகவும் கருதமுடியும்.

தமிழ்ப்படம் எள்ளலும் கிண்டலும்