கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுப் புதினமான பார்த்திபன் கனவு 1960களில் தமிழில் படமாக்கப்பட்டது. இந்தப் பலவண்ணப் பார்த்திபன் கனவு 2003 ஆமாண்டு வெளியானது முந்தைய கனவல்ல. கரு பழனியப்பன் எழுதி இயக்கிய இந்தப் பார்த்திபன் கனவு தமிழின் புத்திசாலித்தனமான திரைக்கதைகளின் பட்டியலில் தனது இடத்தை உறுதி செய்து கொண்ட படம். பல காரணங்களுக்காக இந்தப் படத்தின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. மாய யதார்த்தப் புனைவாக்க வரிசையில் இந்தப் படத்தை தாராளமாக சேர்க்க முடியும் வாழ்வின் எதிர்பாராமை முன் வைக்கக் கூடிய சின்னஞ்சிறு பொறி போதுமானதாக வேறொரு கதையை அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய கதையின் முற்றிலும் எதிர்பாராத திசையைத் திறந்து வைத்துவிடும் என்பதைக் கொண்டு தன் கதையை இழைத்தார் பழனியப்பன்.

இரட்டை வேடக் கதைகளில் இந்தப் படம் ஒரு மடைமாற்று. பார்த்திபன் ரசனை மிகுந்தவன். வாழ்வில் தனக்கென்று கனவுகளைக் கையிலேந்திக் காத்திருப்பவன். தான் அடிக்கடி சந்திக்கிற பெண்ணைப் பார்த்து மனதினுள் அவள் மீது பெரிய ஈர்ப்பை வளர்த்துக் கொண்டவனுக்குப் பெண் பார்க்கச் செல்கையில் அவளே வரனாகப் பார்க்க வாய்க்கிறது. மேற்கொண்டு எதையுமே கேளாமல் நீயே என் நாயகி எனத் திருமணத்தைப் பேசி முடிக்கிறான். திருமணமும் நிகழ்ந்து விடுகிறது. தனக்குப் பிரியமானவளே தன் வாழ்விணை என்பதில் பூரித்துக் கொண்டே அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவன் பார்க்கும் அவள் தான் அவன் ஏற்கனவே பலமுறை பார்த்ததும் விருப்பம் கொண்டதுமாகிய ஜனனி என்பது தெரியவருகிறது. திருமணம் செய்துகொண்டதோ ஜனனியின் தோற்ற ஒற்றுமையில் இருக்கும் சத்யாவை. உருவம் ஒன்று என்றாலும் உள்ளம் வெவ்வேறு ரசனைகள் வேறு குணம் வேறு எல்லாமே வேறாகப் புரிய வரும் புள்ளியில் இனித்த அதே வாழ்வு துவர்க்கத் தொடங்குகிறது. தன்னுள் மருகுகிறான் பார்த்திபன்.

அந்த ஜனனி அவர்கள் வசிக்கும் அதே அபார்ட்மெண்டுக்கு எதிர்வீட்டுக்குக் குடிவருவதும் மெல்ல பார்த்திபனுக்கும் அவளுக்கும் லேசான அறிமுகம் பூப்பதும் இரண்டு பெண்களுக்கும் இடையே நட்பு வலுப்பதும் பார்த்திபனின் வினோதமான இழத்தல் குறித்து அவனது நண்பன் மனோ ஜனனி என நினைத்துக் கொண்டு சத்யாவிடமே பகிர்வதும் ஊடல் விரிசலாகிப் பிரிதல் பின் சேர்தலுமாய் நிறையும் திரைக்கதை.மணிவண்ணன் தேவன் உள்ளிட்ட அனைவருமே நன்கு பரிணமித்தார்கள். ஸ்ரீகாந்த்தும் சினேகாவும் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் அவரவர் திரைப்பட்டியலில் முக்கியமான பங்கேற்றலை நிகழ்த்திக் கொண்டனர்

வசனங்களும் கதை நகர்வுக்குத் துணை நிற்கும் காட்சிகளின் கோர்வையும் யதார்த்தத்தை மீறாமல் களமாடினார் கரு.பழனியப்பன். அத்தனை பாத்திரங்களும் தத்தமது தனித்துவமும் கெடாமல் மைய நீரிழைய்லும் கலந்து தொனித்தது அழகு. கரு பழனியப்பன் படைத்த உலகத்தில் பெண் கதாபாத்திரங்கள் தனித்துவம் ஓங்கித் தென்பட்டனர்
விவேக் தேவதர்ஷனி சோனியா பங்குபெற்ற நகைச்சுவைக் காட்சிகள் கருத்தாழம் கலந்து உருக்கொண்டது நளினம். வித்யாசாகரின் இசையில் அத்தனை பாடல்களுமே தித்திக்க மறுக்கவில்லை. ஆலங்குயில் கூவும் ரயில் பாடல் சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடலின் வேறொரு புதிய கால நல்வரவானது. கனாக்கண்டேனடி பாடலில் தன்னைக் கரைத்து அமுதம் படைத்தார் மதுபாலகிருஷ்ணன் பக் பக் பக் ஹே மாடப்புறா பாடல் படமாக்கப் பட்ட விதம் ரசிக்கவைத்தது.

எளிய மனிதர்களைக் கூட அவரவர் சுயமரியாதை வளையத்துக்குள் படைத்துத் தன் படங்களெங்கும் தோன்றச் செய்தது இயக்குனர் கரு பழனியப்பனின் தனித்துவம். லேசான எள்ளலும் எதிர்பார்ப்பை முன்வைக்கிற கண்டிப்பும் மிக்க மனிதரின் படங்களாகவே கரு.பழனியப்பனின் படங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.திரைக்கதை என்பதன் தன் மெனக்கெடல் படைப்பாளியின் பிடிவாதமாகவே மாறுவது பலமுறை நிகழ்கிறது. அந்த வகையில் தான் சேராமல் பிரச்சினை தீர்வு என்பதைத் தாண்டி வாழ்வென்பது நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கலயம் மட்டுமே. இதனை நெருங்கிச் சென்று படமாக்கியவர் கரு பழனியப்பன். மாபெரும் திருப்பங்களோ மிகைக் கூவல்களோ இல்லாமல் பார்த்திபன் கனவு யாருக்கு வேண்டுமானாலும் நிகழக் கூடிய சாத்தியங்களின் இருப்புப் பாதையில் நேரந்தவறாமல் கிளம்பிச் சேர்விடம் காண விரைந்தோடும் யதார்த்த ரயிலாய் மனங்கவர்ந்தது. வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்கு அப்பாலும் அடிக்கடி வெவ்வேரு காரணங்களுக்காகக் குறிப்பிடப் பட்டுக் கொண்டே இருக்கக் கூடிய பார்த்திபன் கனவு புத்தகத்தினிடையே பொத்தி வைத்துத் தொலைக்க விரும்பாத மயிலிறகு போலவே அவரவர் மனங்களில் உறைகிற

பார்த்திபன் கனவு: அழகான நல்ல படம்

முந்தைய தொடர்: https://bit.ly/2RtpOoA