வலி என்பது தற்காலிகமானது : திரைப்படம் எப்போதைக்குமானது

-ஜான் மிலியஸ்

பாலகுமாரனுடன் செல்வராகவன் இணைந்து வசனங்களை எழுதிய படம் புதுப்பேட்டை. வெளியான காலத்தில் குழப்பமான வரவேற்பை ரசிகர்களிடமிருந்து பெற்றது பின்வந்த காலகட்டங்களில் தமிழின் உன்னதங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிற படம் புதுப்பேட்டை. உயர்ந்ததே உயிர்த்திருக்கும் என்பதை இந்தப் படத்தின் பெயர்கீழ் வாசகமாக இடம்பெறச்செய்தார் செல்வராகவன். இந்தியாவில் எடுக்கப்பட்ட அரசியலினூடாக சாமான்யனின் வாழ்க்கையை தரிசிக்கச் செய்த படங்களில் குறிப்பிடத்தக்க படமாக புதுப்பேட்டையை முன்வைக்க முடியும். தமிழில் அதுவரை போற்றுதலுக்கு உரித்தாக்கப்பட்ட அல்லது அதிகம் கவனிக்காமற்போன படர்க்கை உலகத்தைத் தன் படத்தின் இயங்கு களமாக நிர்ணயித்ததில் தொடங்குகிறது செல்வராகவனின் வெற்றி பாத்திரங்கள் அனைத்துமே ஆழமாக காலங்காலமாய்க் கதாபுராணங்களின் பாத்திரங்களைப் போலவே அவற்றின் தோன்றலும் எழுச்சியும் முரணும் வீழ்ச்சியும் இடம்பெறச் செய்திருந்தது நன்றாகக் கரம் கொடுத்தது. புதுப்பேட்டை அதன் மனிதர்களுக்காகவும் அவர்தம் வாழ்க்கை மாறுபாடுகளுக்காகவும் அதனூடாகக் கிட்டிய அந்தரங்கமான அக அனுபவமாக மாறியது. நெடுங்காலமாய்த் தனித்தலையும் ஒற்றைப் படகின் மீது படரும் ஒருபுற நிலவொளியும் அதற்கீடெதிர் நிழலிருளுமாய் இந்தப் படம் ஒரு அற்புதம்.

குமாரின் உலகம் அவனுடைய அம்மாவுக்கும் அவனுக்குமான பிணைத்தல். தன் மகனை ஆபீசராக்கி அழகுபார்த்துவிட வேண்டுமென்பதே அவளது ஒற்றைப் பெருங்கனா. அதற்கிடையூறாக குமாரின் அப்பனின் கோபக் கணமொன்றில் அவன் கையால் கொல்லப்படுகிறாள் அம்மா. அவளது மரணத்தைப் பார்த்து விக்கித்து அழுதபடியே அந்த இரவெல்லாம் கழிக்கிறான் குமார். எப்படியான இரவு அது? சற்றுமுன்தான் அவனுடைய அப்பனின் சிநேகிதர்கள் வந்து பிணத்தைக் கொண்டு போய் நடுக்கடலில் மூட்டைகட்டி வீசிவிடுகின்றனர். இந்த உபகாரத்தின் இணைப்பாக அவர்களில் ஒருவன் குமார் எப்போதும் அழுதபடி இருக்கிறான். எப்படியும் வெளியே சென்று அம்மாவை அப்பன் கொன்றுவிட்டதாகக் கூறிவிடப் போகிறான், ஆகவே அவனை விட்டுவிடாதே என அப்பனை எச்சரிக்கிறான். மேலதிகமாக உனக்குத்தான் இன்னொரு குடும்பம் இருக்குதில்ல என்று போகிற போக்கில் OFFER விளம்பரங்களின் கண்மயக்கும் வாசகம்போல ஏற்றிச் சொல்ல அதனை சிரமேற்கொண்டு குமாரையும் முடித்துவிடலாம் என்று முடிவில் வந்து அன்றைய இரவைக் குமாரோடு கழிக்கிறான் தகப்பன். ஒரு உசிதகணத்தில் அப்பனின் பிடியிலிருந்து தப்பி ஒரே ஓட்டமாக ஓடி சென்னை எனும் யாருமற்ற நகரத்தின் இருளில் கலைந்து ஒளியில் மீள்கிறான் குமார். அந்தக் குமாருக்கு என்ன நடந்தது என்பது இந்தக் கதையின் முடிச்சு.

யாருமற்றவர்களை ஒரு செவிலித் தாய்போல அரவணைத்துக் கொள்வது நகரங்களின் இயல்பு. குமார் வேலை தேடித் தோற்று அயர்கிறான். அவனுக்குப் பசிக்கிறது. குமார் பிச்சை எடுக்கிறான். கிடைத்த பணத்தில் சாப்பிடுகிறான். அது அவனது விடுதலைக்குப் பிந்தைய முதல் உணவு. பிறகு குமார் பிச்சை எடுப்பதிலிருந்து அன்பு எனும் அந்த வட்டாரத்தின் செல்வாக்கான மனிதரின் குழுவில் ஒருவனாக இடம்பெறுகிறான். அவனுக்கென்று நண்பர்கள் உருவாகின்றனர். மெல்ல மெல்ல அன்பு கூட்டத்தில் குமாருடைய நாற்காலி கனம் பெறுகிறது. அவன் தேவைப்படுகிறான். தன் கால்களால் உறுதியாக நிற்கத் தொடங்குகிறான். கிருஷ்ணவேணிமீது அவனுடைய அன்பின் முதல் மலர் வியப்பின் தினமொன்றில் பூத்து மிளிர்கிறது. கிருஷ்ணவேணி அன்புவின் கட்டுப்பாட்டில் இருக்கிற பல பெண்களில் ஒருத்தி. ஏழ்மையை பாதுகாப்பின்மையை நோய்மையை இரக்கமற்ற தனிமையை இன்னபிறவற்றை எல்லாம் கையிலெடுத்துத் தன் அடிமைகளாக எளிய மனிதர்களை மாற்றிக்கொள்பவன் அன்பு. அவனுக்கு மேலே கட்சி இருக்கிறது. அதன் தலைவர் தமிழ்ச்செல்வன் மாநிலத்துக்கே எதிர்க்கட்சி நாயகர். அவரது அன்பும் ஆசீர்வாதமும் பெற்றவன் அன்பு என்பது அவனுடைய விலாசம்மீதான பயத்தின் இருள்மீது எந்தச் சிறு ஒளியுமே பூத்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அப்படியான அன்புவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவனாக மாறும் குமாருக்குக் கிருஷ்ணவேணி மீது பித்தாகிறது. அவள் தனக்கே தனக்கென்று வேண்டுமென அவன் நினைப்பதற்குக் காரணம் அவள் ஒருத்தியை மாத்திரம் வன்மவாழ்விலிருந்து விபச்சாரத்தின் கரங்களிலிருந்து விடுவித்துவிடவேண்டும் என்கிற பேரன்பின் சொல்லில் வராத காதல்தான். அதை உணரும் குமார் அன்புவிடம் நேரே சென்று கிருஷ்ணவேணியை விட்டுவிடுமாறு கேட்கிறான். தன் கால் பற்றி வாழத் தொடங்கிய இரண்டு பேர் என்ற கருணை கொஞ்சமும் இல்லாத அந்த மனிதன் பெயரில் மட்டும் அன்பு என்று கொண்டவன் குமாரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி விடுகிறான். கிருஷ்ண வேணியை மிகவும் க்ரூரமாகத் தாக்கி குமாருக்கும் சேர்த்து அவளைத் தண்டித்து அதன் மூலமாக அவளை எச்சரிக்கிறான். குமார் வழியற்றுத் திகைக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை சமரசம் செய்து மறுபடி அன்புவிடம் ராசி செய்துவைக்க அழைத்துச் செல்கிறார்கள். அன்பு முதலில் குமாரை வெறி அடங்கும்வரை அடித்து நொறுக்கிவிட்டு எச்சரித்து லேசாக மன்னிக்கவும் செய்து இனி ஒழுங்காக இரு என்கிறான். அந்த நேரத்தில் அவன் காலில் விழுந்து நன்றி சொல்கிற சாக்கில் அன்புவை வெட்டிக் கொலை செய்கிறான் குமார். அந்தக் குமாருக்கு என்ன நடந்தது என்பதுதான் இந்தக் கதையின் முடிச்சு.

தமிழ்ச்செல்வனிடம் அன்பு மரணச்செய்தி தெரிவிக்கப்படுகிறது. இனி அன்புவின் ஏரியாவை யார் பார்த்துக் கொள்வார்கள்? இனி தனக்கு யார் கப்பம் கட்டுவார்கள் என்கிற தன் கவலைகளுக்கு நடுவே அவரைச் சந்திக்க வரும் குமார் மற்றும் நண்பர்களைக் காறி உமிழ்ந்து அன்புவின் இழப்புக்கு யார் பதில் சொல்வது எனக் கேட்கிறார். ‘என்னை நீங்க உயிரோட விட்டா உங்களை நானும் உயிரோட விட்டுர்றேன்’ என்று முதுகிலிருந்து பெருவாள் ஒன்றை உருவும் குமாரைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் தமிழ்ச்செல்வன். இத்தினி பெரிய கத்தியை வச்சிட்டா எங்கிட்ட அடிவாங்குனே என்று வியக்கிற தலைவர். ‘இங்கேருந்து போயிட்டா நீ தப்பிச்சுடுவியா..? அன்புக்கு எத்தினி பசங்க இருக்கானுங்க..? விசுவாசிங்க உன்னை உயிரோட விடப்போறதில்லை. நீ மட்டும் இன்னிக்கு ஒரு ராத்திரி உசிரோட இருந்து தப்பிச்சிட்டா நாளைக்கு காலைல அன்போட ஏரியா உன்னுதுடா’ என்று ஏற்றிவிட்டு அனுப்புகிறார். குமாரின் உயிர் வீதியில் எதிராடுகிற அத்தனை பேரின் ஆயுத நுனிகளில் இருக்கிறது. தன் சொற்பக் கூட்டத்தையும் உயிர் பயத்தையும் வீரமாய் வாள் நுனிக்கு மாற்றிக் கொண்டபடி அந்த இரவின் மடியில் புகுகிறான் குமார். ஒருகட்டத்தில் தன் தகப்பனின் இரண்டாவது குடும்பத்தின் விலாசத்தில் அடைக்கலம் புகுகிறான். அந்தக் குமாருக்கு என்ன நடந்தது எனபது இந்தக் கதையின் முடிச்சு.

இரவெல்லாம் ரத்தம் எதிரில் வருகிர யார் முகத்தைப் பார்த்தாலும் பயம். அந்த இரவு நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் இருளின் கரத்திலிருந்து சாவியைப் பிடுங்கி அடுத்த தினத்தைத் திறந்து வைக்கிறது சூரியன். நேரே தலைவர் தமிழ்ச்செல்வன் வீட்டு வாசலுக்குச் சென்று அவரது புதிய தளபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறான் குமார். அவர் அவனை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டாலும் முன்பு அன்புவுடன் இணக்கத்திலிருந்த சிலரால் அவனது எழுச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களில் ஒருவன் தாட்டியத்தோடு எழுந்துவந்து குமாரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறான். இனி நான்தான் என்று அங்கேயிருந்து கிளம்பிச் செல்கிறான். இந்தப் புதிய வந்து சேர்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்க்கும்போது தன்னை எதிர்க்கும் அனைவரையும் கொன்று தள்ளுகிறான் குமார். தன்னுடைய புதிய வாழ்வின் செல்வந்தத்தில் கொஞ்சத்தை தகப்பனின் இரண்டாவது குடும்பத்திற்கு பகிர்ந்து தந்து அவர்களை அனுப்பி வைக்கிறவன் தகப்பனை மட்டும் நண்பர்களோடு தனியே அனுப்புகிறான். அவர்கள் தகப்பனை ஊரின் ஒதுக்குப் புறத்துக்குக் கூட்டிச் சென்று குழிவெட்டி அதில் படுக்கச் சொல்கிறார்கள். குமாரிடம் கெஞ்சுகிறான் தகப்பன். அவனது ஈவு இரக்கமற்ற அதே குணங்களை அவனுக்கே பரிசாய் மீட்டுத்தந்து அந்தக் குழியில் தள்ளிக் கொல்லுமாறு கட்டளையிடுகிறான் குமார். சகாக்கள் செவ்வனே செய்கிறார்கள். தாயின் ஆன்மா மீது கொலைமலர்களைச் சொரிந்தபடி எதுவும் நடக்காத பாவனையில் தன் குற்றவுலகில் சஞ்சரிக்கிறான் குமார். அவனுக்கு என்ன நடந்தது என்பது இந்தக் கதையின் முடிச்சு.

குமார் வளர்கிறான். தமிழ்ச்செல்வனின் குடும்பத்தில் ஒரு பிரச்சினை வருகிறது. அவரது மகளை போதையில் சிலர் படமெடுத்து மிரட்டுவதைச் சொல்லித் தனக்காக எதாவது செய் என்று குமாரிடம் கெஞ்சுகிறார் தலைவர். அத்தனை பேரையும் கொன்று அந்த வீடியோ டேப்பை அவரிடம் தருகிற குமாரிடம் நன்றிப் பெருக்கில் கண் நீர் உகுக்கிறார் தமிழ்ச்செல்வன். அவர் குடும்பமே குமாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று போற்றுகிறார். தன் மகள் காலமெல்லாம் குமாரின் படத்தைக் கடவுளாக எண்ணி வழிபடவேண்டும் என்று காற்றில் கட்டளையிடுகிறார். எல்லாவற்றையும் நாசூக்காகக் கடந்து தன் உலகம் திரும்புகிறான் குமார். கூடவே இருக்கும் மணியின் தங்கை செல்வி கல்யாணத்தில் தடபுடல் மரியாதை குமாருக்கு தாலியை ஆசீர்வதித்துத் தரச்சொல்கிறார்கள். அவனோ செல்வி கழுத்தில் தாலியைத் தானே கட்டி விடுகிறான். காதலற்ற கட்டாயத்தின் நிமித்தம் அவனோடு வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறாள் செல்வி. மணி குறிவைத்தது பிசகி குமாருக்கு பதிலாக ரவியைக் கொன்றுவிடுகிறான். தன் அண்ணனைக் கொன்றுவிடவேண்டாம் என்ற வேண்டுகோளோடு அவனோடு வாழத் தொடங்குகிறாள் செல்வி. தன் வயிற்றில் குமாரின் குழந்தை வளர்வதைச் சொல்லி தன்னால் இறக்கவும் முடியவில்லை வாழவும் முடியவில்லை என்று அழுகிறாள் கிருஷ்ணவேணி. தன் வாரிசின் வருகைக்காக அந்தக் கணத்திலிருந்தே பரவசத்தோடு காத்திருக்கிறான் குமார். அந்தக் குமாருக்கு என்ன நடந்தது என்பது இந்தக் கதையின் முடிச்சு.

குமாரின் அடுத்தகட்ட வளர்ச்சி அவன் எழும்பூர் பகுதிச் செயலாளராக அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்து ஆரம்பமாகிறது. தன்னை எதிர்க்கும் மூர்த்தியின் தம்பியைக் கொன்று மூர்த்தியை பாதிக்குமேல் உடல் செயலிழக்கச் செய்து பேருரு எடுக்கிறான் கொக்கி குமார். அடுத்து வரக்கூடிய இடைத்தேர்தலில் தனக்கு எழும்பூர் தொகுதி ஸீட் வேண்டுமெனக் கேட்கிறான் குமார். அதனை எள்ளி நகையாடுகின்றனர் கட்சியின் மனிதர்கள். அவனிடம் இன்னும் பத்து வருசம் போகட்டும் பார்க்கலாம் என்று
கடுமை காட்டும் தலைவரிடம் முரண்பட்டு அவர் குடும்ப மானத்தைத்தான் காத்தது உட்பட, கட்சிக்காகத் தன் தியாகங்களை பட்டியலிட்டு கிட்டத்தட்ட மிரட்டல் விடுக்கிறான் குமார். அவனது மிரட்டல் பலனற்றுப் போகிறது. கட்சி எழும்பூருக்கு வேறொருவரை அறிவிக்கிறது. கூட்டமத்தியில் தலைமையை எதிர்த்து பேசும் குமாரை அங்கேயே கொன்றுவிடக் கட்சியினர் துடிக்கிறார்கள். இங்கே வேண்டாம் வெளியே வைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார் தமிழ்ச்செல்வன். அங்கே இருந்து தப்பித்து ஓடுகிறான் குமார். அவனுடைய உடனாளிகளை எல்லாம் அனுப்பிவிட்டுத் திகைக்கும்போது மணி அங்கே வருகிறான். கொக்கி குமாரின் கையில் அவனது குழந்தையைத் தந்துவிட்டு என்ன இருந்தாலும் ஒரு குழந்தையைக் கொல்ல மனம் வரவில்லை என்று செல்கிறான். குழந்தையை யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம் தந்து எப்படியாவது படிக்கவைத்து வளர்க்குமாறு வேண்டியபடி மீண்டும் தன் குற்ற இருளுக்குள் திரும்புகிறான். இந்தக் குமாருக்கு என்ன நடந்தது என்பது புதுப்பேட்டையின் இறுதிக் காண்டம்.

மூர்த்தியை இந்தமுறை மிச்சம் மீதியின்றிக் கொன்றழிக்கிறான் குமார். மூர்த்தியின் கட்சியான ஆளுங்கட்சிக்கு மூர்த்தியின் இடத்தை நிரப்ப ஒருவன் தேவைப்படுகிறான். அந்த இடத்தை அக்கட்சியின் தலைவர் குமாரைக் கொண்டு நிரப்புகிறார். அவனுக்கு அங்கே எம்.எல்.ஏ ஸீட் வழங்கப்படுகிறது. அவனைவிட்டு வெகுதூரம் சென்றுவிடுகிறாள் செல்வி. தன் தொலைந்த குழந்தையைத் திரும்பப் பார்க்கவே முடியவில்லை குமாருக்கு. அடுத்த காலங்களில் எம்.எல்.ஏ மந்திரி எனப் பல பதவிகளை வகிக்கிறான் குமார். தமிழ்ச்செல்வன் அரசியல் துறவறம் பெற்று வெளிநாடு சென்று விடுகிறார். இப்படியான சிதைவுகள் இழத்தல்களுக்கு அப்பால் நிலைபெற்று ஓடுகிறது கொக்கி குமாரின் வாழ்க்கை நதி. இங்கே நிறைகிறது புதுப்பேட்டை.

இந்தப் படத்தினூடாகப் பெறக்கூடிய அனுபவம் அலாதியானது. அன்பு கதாபாத்திரத்தில் வரக்கூடிய பாலாசிங் அவருடைய நடிப்பு ஒரு அரக்கனை ஈவு இரக்கமற்ற மனித உருவிலான கொடூரனை அச்சு பிசகாமல் நம் மனத்திரைகளில் லயிக்கச் செய்கிறது. எத்தனையோ திரைப்படங்களில் எவ்வளவோ அதீதமான மன ஒப்புமைக்கு சம்மந்தமே அற்ற வில்லன்களைப் பார்த்துச் சலித்த மனங்களுக்கு மத்தியில் யதார்த்தத்தின் அளவீடுகளுக்குச் சற்றும் பிசகாத முழுமையான மனிதராகவே கண்முன் தோன்றினார் பாலாசிங்.

தனுஷின் திரைவாழ்வில் ஆடுகளத்தை அனைவரும் போற்றக்கூடும் என்றாலும் புதுப்பேட்டை ஒரு ஒற்றை. இனி ஒரு சட்டகத்தைக்கூட இதனை விஞ்சி தனுஷ் எனும் கலைஞனால் செய்துவிட முடியாது என்று சொல்வதுகூட ஏற்றிச் சொல்வதாகாது. புதுப்பேட்டை படத்தை தனுஷ் என்கிற கலைஞனைத் தவிர்த்து வேறொரு நடிகரைக் கொண்டு ஒரு ஷாட்டைக்கூட கற்பனை செய்துவிட முடியாது. அப்படி ஒரு முழுமையான சித்திரம் தனுஷ் என்பவரின் ஆளுமைக்கு உள்ளேயும் வெளியேயும் கொக்கி குமார் என்ற கற்பனை மனிதனை இயல்புமாறா அவதரித்தலெனவே தன் நடிப்பை நல்கினார் தனுஷ். அவருடைய உடல்மொழி குரல் கண்கள் முகமொழி எனப் பல காரணிகள் முன்பறியாத நல் நடிப்பை வெளிப்படுத்தின. தனுஷ் ஆடுகளத்திற்காக தேசிய விருது பெற்றார். அது புதுப்பேட்டையின் கொக்கி குமாருடைய கரங்களில் ஒரு வருடலுக்குத் தந்தே ஆகவேண்டியது.

தமிழ்ச்செல்வனாக வந்த அழகம்பெருமாளை அவருக்கு நன்றாக அறிமுகமானவர்கள் கூட அதன் பிற்பாடுகளில் அரசியல்வாதி என்றே அறிய விரும்புவார்கள். சற்றே பிசகி இருந்தாலும் கூடிக் குன்றி இருந்தாலும் தமிழின் வழமையான வில்ல பாத்திரங்களின் வரிசையில் சென்று காலாவதி ஆகிவிடக்கூடிய அபாயம் இந்தப் பாத்திரத்தின் தோன்றல் கணங்களெங்கும் தொடர்ந்து வந்தது என்றாலும் அனாயாசமாக அதனையெல்லாம் தன் தனித்துவம் கொண்டு தகர்த்தெறிந்தார் அழகம்பெருமாள். உள்ளூர ஒரு இயக்குநர் நடிகராகவே அவர் தன்னை உணர்ந்திராவிட்டால் இந்தப் பாத்திரம் சோபித்திருக்காது. புதுப்பேட்டை படத்தை இவர்கள் இன்றி மீவுரு செய்யவே முடியாது என்று சொல்வதற்கான காரணங்களாக வருங்காலத்தில் எஞ்சப் போகிற காரணிகளில் தனுஷூக்கு அடுத்த காரணியாகவே அழகம்பெருமாளைச் சொல்லத் தோன்றுகிறது. அரசியல்வாதி என்னும் பதத்தின் ஏற்ற இறக்கங்கள் ஆழவுயரங்கள் துரோகத்தின் உச்சம் கைகழுவிச் செல்லும் பட்டவர்த்தனம் என்று அவர் இந்தப் படத்தில் தோற்றுவித்த பல பிம்பங்கள் அசலானவை மாத்திரமல்ல முதன்முதலானவைகளும் கூட.

செல்வராகவனின் பெண் கதாபாத்திரங்கள் செல்வியும் கிருஷ்ணவேணியும் அவர்களது தோன்றுதலும் சொற்களும் இயலாமையைக் கண்கள் வழி படர்த்துவதும் நடிகைகளின் நிஜம் அழிந்து அந்தப் பெண்களாகவே நமக்கெல்லாம் காணவாய்த்த வகையில் இருவருமே முக்கியத்துவம் பெறுகிறார்கள். இத்தனை நெடிய குமாரின் கதைகளில் மூன்றாவது பெண்ணாகத் தன் பெயர்சொல்லாப் பெரியவளாக வந்து குமாரின் குழந்தையைக் கைகளில் ஏந்திச் செல்லக் கூடிய பசி சத்யாவின் வருகையும் நீங்குதலும் புதுப்பேட்டையின் திசைகளாகவே நிலைபெறுகின்றன.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தின் பின் இசைக்காகவும் தீம் ம்யூசிக் கோர்வைகளிலும் தனித்துப் பல இடங்களில் ஸ்கோர் செய்தார். உறுத்தாத பாடல்கள் புதுப்பேட்டையின் தனிகீதங்களாகவே காலம் தாண்டி ஒலிக்கின்றன. இசை இந்தப் படத்தின் ஒரு கூடுதல் கதாபாத்திரமாகவே வியாபித்தது என்பதே சரிநிகர் சொல்லாடல்.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு பொறுப்பான ஒளி இருள் பங்கீட்டை நேர்த்தியதன் மூலம் நிஜத்திற்கருகாமையில் காண்விழிகளைக் கொணர்ந்து நிறுத்திற்று. கோலாபாஸ்கரின் தொகுப்பு நல்ல அனுபவத்திற்கான உடனிருத்தலாகவே கவனம் கொள்ளத்தக்கது.

செல்வராகவன் தமிழில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னால் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக புதுப்பேட்டையை அளித்தார்.

கொண்டாட்டத்திற்குரிய சினிமா.

முந்தைய தொடர்: https://bit.ly/2Y4Mykm