எமைல் ஜோலா: ஏன் பிக்வார்ட் எதையுமே சொல்லவில்லை?

லூஸி ட்ரிஃபெஸ்: கர்னல் பிக்வார்ட் ஒரு நல்ல அதிகாரி. அவரது உயரதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் அமைதி காத்தார்.

எமைல் ஜோலா அதாவது அவர்களுக்கெல்லாம் உண்மை தெரியும், தெரிந்த உண்மையைச் சொல்லாமல் மறைக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள் அப்படித்தானே?

(‘The Life of Emile Zola’ (1937) – பால்முனி ஜோலாவாகவும் கேல் சொண்டர்கார்ட் லூஸியாகவும் தோன்றிய படத்தின் வசனம்)

இஷ்டத்துக்குக் கதை பண்ணினார்கள். பலரும் ஆளுக்கொரு யோசனை சொல்ல அத்தனையையும் ஒரே படத்தில் எப்படியாவது கொண்டுவந்து விடுவதற்காக மாயம் மந்திரம் என கழற்றிய தலை உடைந்த கை எல்லாவற்றையும் பல தினங்கள் கழித்தெல்லாம் ஒட்டுகிறாற்போலவும் சாபம் பெற்று மானாக நரியாக கரடியாக மாற்றப் பட்டு பல காலம் கழித்து மறுபடி மனித உருவுக்குத் திரும்பினாற் போலெல்லாம் புராண காலக் கதைகளை மாவாய்ப் பிசைந்து அவரவர் மனவோட்டத்துக்கேற்ப படங்கள் வந்து கொண்டிருந்தன போதாக் குறைக்கு இருமினால் பாட்டு தும்மினால் கானம் நடுவே ரெண்டு சாங் அப்புறம் சிலபல டான்ஸ் ஒரு வித்யாசமான கோஷ்டிப்பாடல் எனக் குறைந்தது பாஞ்சு இருவது பாடல்கள் இல்லாமல் எப்படி ஸார் படம் என்று தமக்குத் தாமே கேட்டுக் கொண்டார்கள். எத்தைத் தின்றால் பித்தைத் தெளியும் என்று ஒவ்வொரு படத்திலும் கண்ணை மூடிக் கொண்டு அடுத்தவர் வழியிலேயே தாங்களும் செல்வதே ஸேஃப்டி என்று தமிழ்த் திரையுலகம் இருந்த காலத்தில் =தான் அது நிகழ்ந்தது.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்வாதாரத்துக்கு மட்டும் என்றோ அல்லது அரசியல் கொள்கைகளை விதந்தோதுவதற்கு மட்டும் என்றோ பிரித்தறியவில்லை என்றாலும் சினிமா என்னும் புதியகாற்று இனி நெடுங்காலத்துக்குச் செல்வாக்காய்த் திகழப் போகிறது என்பதை உணர்ந்தார்கள். பல ஆளுமைகள் நேரடி அரசியலை மக்களிடம் எடுத்துச் செல்வதை ஒருபுறம் நிகழ்த்திக் கொண்டே சினிமாவினுள்ளே என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தார்கள். திருவாரூர் தங்கராசு துவங்கி அறிஞர் அண்ணா வரை அப்படிப் பலரும் தங்கள் கொள்கை முகத்தைத் தமிழ்ப்புலம் அறியச் செய்வதற்காகத் திரைப்பட ஊடகத்தைப் பற்றிக் கொண்டார்கள். அப்படியானவர்களில் கலைஞரின் பங்கும் புகழும் அளப்பரியது. கலைஞர் முழுமையான திரைப்பட ஆளுமை என்பதைத் தன் வாழ்காலமெங்கும் நிரூபணம் செய்தவர். அண்ணா அவரது பங்குக்குப் பல படங்களில் தானும் பணியேற்றவர்தான்.

1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த வருடம். அதே வருடம் வெளியான வேலைக்காரி திரைப்படம் அதன் வசனவீர்யங்களுக்காகப் பெயர் போன படம். சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு அது ஏழைகளுக்குக் கிட்டாதது என்பது மிகவும் பிரபலமான வசனத்துளி இன்னொரு புகழேந்திச் சொல்லாடல் கத்தியைத் தீட்டாதே உன் புத்தியைத் தீட்டு என்பது. அண்ணா தன் தமிழாலும் அதன் சுவையாலும் எல்லோரையும் கவர்ந்தார். அடுக்குமொழி அண்ணாத்துரை என்று எங்கே பார்த்தாலும் பேச்சாக இருந்தது. இந்தப் படத்தின் மையக் கதை அதன் புதுமை என்பதை எல்லாம் விடவும் மொத்தப் படமுமே பகுத்தறிவின் பல அடுக்குகளை எடுத்து வைத்ததை மக்கள் வரவேற்று அது குறித்த கலந்துரையைத் திரையரங்கைத் தாண்டி நிகழ்த்தியது அண்ணா எனும் மந்திரப் பெயர் நிகழ்த்திக் காட்டிய மாயம்தான்.

எம்.என்.நம்பியார் இதில் மூர்த்தியாகவும் சாமியார் ஹரிஹரதாஸ் ஆகவும் நடித்தார். இரண்டு வேடங்களில் ஒன்று இன்னொன்றைக் கொலை செய்வதுபோல் அவர் நடித்தது கதாபாத்திரமாக்கலின் அரிய வகை முரண் அதை எல்லோரும் போற்றும் வண்ணம் நடித்திருந்தார் நம்பியார். இன்னொரு பேராளுமை டி.எஸ்.பாலையா தன் குரலாலும் முகமொழியாலும் நடை உடை பாவனைகளாலும் ஆனமட்டும் தன் பாத்திரத்துக்கு நியாயம் செய்யத் தெரிந்த பாலையா இந்தப் படத்தில் மணி எனும் நண்பன் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கினார்.கதையின் பெரும் போக்குகளை எல்லாம் நிகழ்த்துகிற ஆகவீரியமான பாத்திரம் அவருடையதாகவே இருந்தது.டி.பாலசுப்ரமணியம் வேதாசலமாக வந்தார்.வீஎன் ஜானகி சரசா வேடத்தில் நடித்தார். முஸ்தஃபா சுந்தரம்பிள்ளையாகத் தோன்றினார். புளிமூட்ட ராமசாமி பாலுமுதலியாக வந்திருந்தார்.

வேலைக்காரி படத்தின் கதை இதுதான்

பெரும் செல்வந்தரான வேதாச்சலம் முதலியாரிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார் சுந்தரம்பிள்ளை. சொன்னபடி திருப்பித்தர முடியாமல் போகும் சுந்தரம்பிள்ளையை ஊர் மத்தியில் அசிங்கப்படுத்தி விடுகிறார். வேதாச்சலம் அவமானம் தாங்க முடியாமல் சுந்தரம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சுந்தரத்தின் மகன் ஆனந்தன் எப்படியாவது தன் அப்பா சாவுக்கு பழி வாங்கியே தீருவேன் என்று சபதம் எடுக்கிறான். பெரும் பணக்காரனுடன் நேருக்கு நேராய் எப்படி மோதுவது என்று சமயம் பார்க்கும் ஆனந்தனுக்கு நண்பன் மணி உதவுகிறான்.

மணியின் நட்பின் காரணமாகத் தானும் ஒரு பகுத்தறிவுவாதியாக மாறுகிறான் ஆனந்தன். தன் நிலைமைக்காக கடவுளை நிந்திக்கிறவனைக் கோயிலிலிருந்து ஊரார் துரத்துகிறார்கள் மணியின் யோசனையினால் ஒரு பாழடைந்த இடத்தில் ஒளிந்து கொள்கிறான் ஆனந்தன். அந்த இடத்தில் ஒரு சாக்கு மூட்டை அதில் ஒரு பிணம் மேவார் விலாசம் எனும் ஊரைச்சேர்ந்த பரமானந்தம் எனும் செல்வந்தன் உடையது அவன் பார்ப்பதற்கு ஆனந்தனை போலவே இருக்கிறான். அவனது டைரியிலிருந்து அத்தனை விபரமும் தெரிந்துகொள்கிறார்கள் மணியும் ஆனந்தும். அவர்களுக்கு சாதகமான முக்கிய விஷயம் எதுவென்றால் பரமானந்தத்தின் அம்மாவுக்கு கண் தெரியாது. ஆகவே பிணத்தை மறைத்து விட்டு மேவார் விலாசம் செல்லுகிறான் ஆனந்த் அங்கிருந்து பணக்கார பரமானந்தமாகத் திரும்பிவந்து ஒரு மாபெரும் டீபார்ட்டி கொடுக்கிறான். வேதாச்சலத்தின் ஒரே மகள் சரசாவை திருமணம் செய்து கொள்கிறான்.

வேதாசலத்தின் குடும்பத்தை மெல்லக் கையிலெடுக்கும் ஆனந்தன் அவரது மகன் மூர்த்தியை குடும்பத்தைவிட்டு வெளியேறச் செய்கிறான். வெளியேறும் மூர்த்தி அமிர்தத்தை விரும்புவது ஆனந்தனுக்குத் தெரியும்.வேதாசலத்திடம் பணிபுரிபவர் அமிர்தத்தின் தந்தை. தன் முதலாளிக்கு ஒவ்வாத திருமணத்தை செய்யவியலாமல் அவரோ அமிர்தத்தை வேறோரு கிழவனாருக்கு கல்யாணம் செய்து வைக்கப் பார்க்கிறார். சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறும் மூர்த்தியை அவனது நண்பர்கள் கைவிடுகின்றனர். அவனோ வேறுவழியின்றி சாமியார் ஹரிஹரதாஸின் ஆசிரமத்தில் அடைக்கலமாகிறான். அவர் ஒரு போலிச் சாமியார் என்பது பிறகுதான் தெரியவருகிறது மூர்த்திக்கு. அமிர்தம் தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவளைத் தன் மகள் என்று நினைக்கிறார் மகளை இழந்த கோடீசுவரர் ஒருவர். ஆசிரமத்தில் சாமியார் ஒரு தள்ளுமுள்ளில் கொல்லப்படுகிறார். மூர்த்தி கைதாகிறான். அமிர்தம் இறந்து விட்டதாகத் தனக்குக் கிடைத்த தகவலை உண்மையென நம்பி மனம் மருகிக் கொண்டிருக்கிறான் மூர்த்தி ஆனந்தனை வடநாட்டு வக்கீல் என மாறுபட்ட தோரணையில் அழைத்து வந்து வேதாசலத்துக்கு அறிமுகம் செய்கிறான் மணி.

ஆனந்தன் வழக்கை கோர்ட்டில் மூர்த்தி சார்பாக நடத்துகிறான். கொல்லப் பட்ட சாமியார் ஒரு நெடுங்காலக் குற்றவாளி போலீசாரால் தேடப்பட்டவன் என்பது தெரியவருகிறது. தற்காப்புக்காகத் தான் கொலை நிகழ்ந்ததென்று வலிமையாகத் தன் வாதங்களை எடுத்துவைக்கிறான் ஆனந்தன்.மூர்த்திக்கு சாமியாரைக் கொல்வதற்கென்று காரணமோ முகாந்திரமோ இல்லை என்று வழக்கிலிருந்து அவனை விடுவிக்கிறது நீதிமன்றம். மிகவும் மகிழ்வோடு தன் உயிரை மீட்டுக் கொடுத்த ஆனந்தனிடம் உனக்கு என்ன வேண்டுமோ கேள் என்னை விடுவித்ததற்கான ஊதியமாகத் தருகிறேன் என வாக்களிக்கிறான். பாலு முதலியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென அவனிடம் கேட்கிறான் ஆனந்தன்.அவனும் அதற்கு ஒப்புக் கொள்கிறான்.முதலில் அமிர்தத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறான் மூர்த்தி திருமணம் நடந்த பிறகு முதலியாரிடம் உன் மகன் திருமணம் செய்திருப்பது ஒரு வேலைக்காரனின் மகளைத் தான். உன் மகளின் கணவனான நானும் சுந்தரம் பிள்ளையின் மகன் தான் தெரிந்து கொள் என்று ஆவேசமாக உண்மையை உடைக்கிறான்.சுந்தரம் பிள்ளைக்குத் தான் செய்த கொடுமைகளை ஒப்புக்கொண்டு மனம் வருந்தும் வேதாசலம் மனமுருகி மன்னிப்புக் கேட்கிறார். குடும்பம் ஒன்றாகி நன்றாகிறது

ஏ.எஸ்.ஏ சாமி இயக்கிய மாபெரும் வெற்றிப் படம் வேலைக்காரி எஸ்.எம்.சுப்பையா நாயுடு சி.ஆர்.சுப்பராமன் இசை இரட்டையரின் நல்லிசை படத்தைப் பேரானந்த அனுபவமாக நிகழ்த்திற்று. மேற்கத்திய வாத்திய இசைக்கோர்வைகள் பலவற்றைத் தொகுத்து மாலையாக்கித் தந்தனர். ஓரிடம் தனிலே – நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே எனும் பாடல் வித்யாசமான இசையோடு குழைந்தொலித்தது.இது ஒரு ஃபாஸ்ட் பீட் ரகப் பாடல்.தொன்மமும் லேசான அயர்ச்சியும் கலந்தொலிக்கும் இசையுடன் வேறுபாடின்றிக் கலந்து நகர்ந்தது பிலீலாவுடன் கேவி.ஜானகி இணைந்து பாடிய இதனை உடுமலை நாராயண கவி எழுதினார்.லலிதா பத்மினி நாட்டியத்தோடு இதனைப் பார்த்து மெய் சிலிர்த்தவர் பலர். அந்தக் காலத்தின் ரேடியோ ஹிட் இந்தப் பாடல் ஒரு க்ளாசிக் முத்து

நாயகனாக நடித்த கே.ஆர்.ராமசாமியின் நீதிமன்றத் தோற்றம் சிகையலங்காரம் இன்னபிற இத்யாதிகள் அந்தக் காலகட்டத்தின் ஹாலிவுட் சூப்பர்ஹிட் படமான தி லைஃப் ஆஃப் எமைல் ஜோலா படத்தின் நாயகர் பால்முனியைப் போல அமைக்கப்பட்டிருந்ததாக அனேகர் கூறுவர்.வேலைக்காரி தமிழ்த் திரையுலகின் திரைக்கதை நகர்தலை வசனப்போக்கை கதாபாத்திரங்களின் கட்டுமானத்தை எல்லாம் மாற்றி அமைத்த முதல் கால ட்ரெண்ட் செட்டர் படமானது

வேலைக்காரி: மலைவனமழை

முந்தைய தொடர்: http://bit.ly/33MSs9W