அந்தத் துப்பாக்கியை அவர் மேல குறிபார்க்காதீங்க.அவர் பாவம் பயிற்சிக்குப் பணம் ஏதும் வாங்கிக்காதவர்.”

(தனது குழுவினரை கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக)

-ஸ்டீவ் ஜிஸ்ஸோ (முர்ரே) (The Life Aquatic with Steve Zissou (2004))

சினிமா எடுப்பது கடினம் என்றால் எந்த சினிமா ஜெயிக்கும் என கண்டறிவது ஆகச்சிரமம். திட்டமிட்டபடி எடுத்து முடித்து ரிலீஸ் ஆனபிறகு தெரிய வரும் பரீட்சை முடிவு மாதிரியான திக்திக் அனுபவம். இந்த லட்சணத்தில் காதல், கண்ணீர் தொடங்கி அரசியல், அறிவியல், புதினம் வரைக்குமான வித்யாசங்களை நம்பிப் படமெடுப்பதைவிட நகைச்சுவைப் படமெடுக்கிற காரியம் இருக்கிறதே அது இன்னும் கஷ்டம். ஒவ்வொரு காலத்திலும் சினிமா என்னவாக மாறுகிறது என்பதைப் பிற படங்கள் தீர்மானிப்பதைப் போலவே நகைச்சுவைப் படங்களும் தீர்மானித்துத் தருகின்றன. எல்லாக் காலத்திலும் நகைச்சுவைப் படங்களை விரும்புவதற்கென்று தனி ரசிகர் கூட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனியே ஒலிக்கும் நாதங்களாகின்றன நகைச்சுவைப் படங்கள்.

ஆர்.பாண்டியராஜன் பாக்யராஜிடம் படம் பயின்றவர். அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் கன்னிராசி. இரண்டாவது படமான ஆண்பாவத்தில் இரு நாயகர்களில் ஒருவராகத் தானே நடித்தார். கதை என்னவோ சாதாரணமாய்க் காதில் சொல்லிவிடக்கூடிய எளிய முடிச்சொன்றுதான். நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை என்ற பழைய கருப்பு வெள்ளைப் பாடல் வரியைத் தூக்கு இஷ்டவண்ணங்களிலெல்லாம் முக்கி எடுத்து வரைந்த கோலம்தான் ஆண் பாவம். ஆனால் நன்றாகப் பலித்த கனவு எனச் சொல்லி ஆக வேண்டும்.

தான் பார்க்க வேண்டிய பெண்ணைப் பாராமல் வேறு பெண்ணைப் பார்த்து வருகிறான் பெரிய பாண்டி. கண்டவள் முகமே கனவும் நிஜமும் ஆகிறது. அவனும் அவளும் எப்படி இணைந்தார்கள் என்பது ஒரு இழை. அண்ணன் பாராமற்போன வாத்தியாரின் மகளைச் சின்ன பாண்டி எப்படிக் கரம் பிடித்தான் என்பது அதே இழையின் மறுமுனை. இவர்களுக்கு மத்தியிலான பாத்திரங்கள் அவர்களின் உபகதைகள் இவ்வளவுதான் ஆண்பாவம் கதை.

இவ்வளவு தானா எனக் கேட்டுவிட முடியாத அளவுக்கு ஆர்.பாண்டியராஜன் படைத்துத் தந்த மனிதர்கள் அமைந்தது விசேடம்.

சர்க்கரைப் பட்டியின் செல்வந்தர் ராமசாமி. குளம் வெட்டி யாரும் குளிக்க வராமற் போய் பள்ளிக்கூடம் கட்டி எவரும் படிக்க வராமல் கோயில் புனரமைத்து யாரும் வணங்க வராமல் பிறகு தானாய்ச் சென்றடைந்து கண்டுகொண்ட புதிய ஞானத்தின் படி மிகத் தாமதமாக அந்த ஊரின் முதல் டெண்டு கொட்டாயை அமைக்கிறதாய் அங்கலாய்த்தபடியே அறிமுகமாவார். இரண்டே பசங்கள் பெரிய பாண்டியும் சின்ன பாண்டியுமாக வளைய வர துணைக்கிருப்பவள் ராமசாமியின் தாய்க்கிழவி. இந்தக் குடும்பத்தில் ராமசாமியின் மனைவி இல்லாமற்போனபிறகு நெடுங்காலம் கழித்து பெரிய பாண்டிக்கு திருமணம் செய்துவைப்பதன் மூலம் அவர்களது வீட்டில் விளக்கேற்றப் புதுக்கரம் வரும் என்பதால் அவனுக்கு திருமண ஏற்பாட்டில் இறங்குகிறார் ராமசாமி. உடனே பொறாமையில் பற்றி எரிகிறது சின்னப்பாண்டியின் அகம். எனக்கொரு பெண் பார்க்கக் கூடாதா எனக் கேட்பவனைத் தனக்குத் தோன்றுகிற வார்த்தைகளைக் கொண்டு திட்டிவிடுகிறார் ராமசாமி.

சர்க்கரைப் பட்டி ராமசாமிக்கு ஒரே ஒரு தம்பி. பொறாமையின் பிறப்பிடமே அவர்தான். அண்ணன் செல்வாக்காகத் திகழும் அந்த ஊரில் தனக்கென்ன குறைச்சல் என நாளும் புழுங்கும் மனிதர் கனகராஜ் என்னென்னவோ செய்து பார்க்கிறார். ஜோசியர் குறித்துத் தந்த நாளில் ஓட்டல் திறக்கிறார். அன்று ஊரே கடையடைப்பு என்றாகிறது. பிறகு யாரோ சொன்னதைக் கேட்டு ஓட்டலில் டி.வி ஒன்றை வைக்கிறார். அந்தக் காலத்தில் டி.வி எட்டாக்கனி எளிதில் கிட்டாக்கனியும் கூட. அப்படி இருக்கையில் விளக்கை அணைத்தால்தான் படம் நன்றாகத் தெரியும் என ஒரு கஸ்டமரின் வேண்டுகோளை ஏற்று அவ்வண்ணமே செய்கிறார். கடையே இருட்டில் காலியாகிறது. அடுத்து இனிமேல் விளைக்கை அணைக்க மாட்டேன் என்ற முன் கண்டிசனோடு மீண்டும் ஒரு டி.வி என மறுபடி கடையைத் திறக்கிறார். இந்த முறை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வந்து டி.வி எப்படி வாங்குனே எனக் கேட்கும் போது வாயை வைத்துக் கொண்டு சும்மா இராத கனகராஜ் பில்லோட வாங்குறதுக்கு நா என்ன கிறுக்கனா எல்லாம் கடத்தல் சரக்குத்தான். வேணும்னா சொல்லுங்க உங்களுக்கும் வாங்கித் தரேன் என்று எம்.எல்.எம் மார்கெட்டிங் செய்பவரைப் போல அப்பிராணியாய் பேச அடுத்த ஸீனில் லாக் அப்பில் இருக்கிறார். பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க சொல்கிறார். எதாவது ஒரு பூ பேரு சொல்லுங்க. சொல்கிறார் லாக் அப் சகாவான ஒருவர் சொல்கிறார் தினமும் யார் மூஞ்சில முழிப்பீங்க..? என் பையன் மூஞ்சிலதான் இது கனகராஜ். அதுனால தான் இவ்ளோ தூரம் வந்து இருக்கீங்க. இப்ப என்ன செய்றது.? கவலைப்படாதீங்க. அது தானா நடக்கும்.

கனகராஜின் பிரச்சினை புதுமையான முறையில் தீர்கிறது. பசி நாராயணன் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் படத்தைத் திருப்பி வைத்து விட்டுப் போவார். உசிலை மணி மீசை முருகேஷ் எனப் பலருக்கும் தனி அடையாளமாக ஆனது ஆண்பாவம்.

விடலைப் பையன் என்பதை மேக் அப் மூலமாகவும் பல கொனஷ்டைகள் முதற்கொண்டும் பல படங்களில் காட்டித் தோற்றிருந்தாலும் இந்தப் படத்தில் விட்டேற்றி விடலையாகத் தானே தோன்றித் தமிழகத்தின் செல்லப் பிள்ளை நடிகராக முன்வந்தார் ஆர்.பாண்டியராஜன். அவருடைய முகமொழியும் குரலும் தன்னைப் பகடி செய்தாற் போலவே எல்லோரையும் தகர்த்துவிடுகிற பாங்கும் எல்லாமே ரசிப்பிற்குரியதாக இருந்தது. ஒரு நாயகனுக்குத் தேவை என்றிருந்த பட்டியலை முற்றிலுமாக மறுதலித்துவிட்டு உருவாகி வந்த முதல் நாயகன் அவர். அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் அஞ்சாதே போன்ற படங்களில் தனது குணச்சித்திர நடிப்பையும் அழகாக வெளிப்படுத்தினார்.

திரைக்கதை அமைப்பில் தமிழில் முக்கியமான படங்களில் ஒன்று ஆண்பாவம். நகைச்சுவைப் படம் என்றால் துவக்கம் முதல் கடைசிவரைக்கும் சிரிப்பு மட்டுமே என்பதல்ல அர்த்தம். இயல்பாகப் பெருகி வருவதில் நகைச்சுவைக்கு முன்னுரிமையும் வேறேங்கேயும் வாய்க்காத புதுமையைக் கொண்டிருப்பதில் உறுதியும் கொண்ட படங்களை அப்படி வகைப்படுத்த முடிகிறது. ஆண் பாவம் அந்தக் கால கட்டத்தின் எளிமையான கிராமப்புற மக்களின் வெள்ளந்திக் காதலை வெளிச்சொன்ன சிறந்த படங்களில் ஒன்று.

பாண்டியனுக்கும் சீதாவுக்குமான காதல் எபிசோட் அத்தனை பரிசுத்தமானது.

இசை இளையராஜா.

பாண்டியராஜன் ஆடிப்பாட காதல் கசக்குதய்யா என்ற பாடலைத் தானே பாடினார் ராஜா. என்னைப் பாடச்சொல்லாதே பாடல் உற்சாக ஊற்று என்றால் நான் ஊமையான சின்னக்குயிலு சோகசாகரம். குயிலே குயிலே பாடல் காலங்கடந்து ஒலிக்கும் காதல்பேழை.

இளையராஜாவின் ஆகச்சிறந்த பீஜீஎம்களில் ஒன்றென இன்றும் கொண்டாடப்பட்டு வருவது ஆண்பாவம் படத்திற்கு அவர் அள்ளித் தந்த இசைக்கொடைக் கோர்வைகள். ரேவதியின் அறிமுகம் தொடங்கி இறுதி வரை ரேவதி எபிசோட் முழுவதற்குமான தனி இசைக்கோர்வை. பாண்டியனுக்கும் சீதாவுக்குமான காதல் ஊடல் சேர்தல் நிகழ்வுகளுக்கான தனித்த இசையாரங்கள் பாண்டியராஜனுக்கு எனத் தனியாக அவர் தந்த வேற்று இசை என இந்தப் படத்தின் இசை குறித்து இன்னும் பல பக்கங்கள் பேசலாம். காதலை இசை வழி எடுத்துரைத்தார் ராஜா.

அசோக்குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவு, தெளிந்த நீரோடையாக பரவசம் தந்தது. சீதாவும் ரேவதியும் இந்தப் படத்தின் இருவைரங்கள். தமிழ் சினிமாவில் எண்பதுகளில் தோன்றியவர்களில் தனக்குக் கிடைத்த பாத்திரத்தை எல்லாம் அடித்து நொறுக்கக்கூடிய மகா நடிகை ரேவதி. இந்தப் படத்திலிருந்து வெகுதூரம் சென்றாலும் பேச்சுத்திறன் அற்றுப் போய்த் தன் முகமொழியால் நடிக்கிற ரேவதியின் கண்கள் மறக்க முடியாத மின்னல் தெறல்களாகவே நீடித்தன.

தனித்துவமான மனித குணங்கள் காதல் பிடிவாதங்கள் வாழ்க்கை இணை மீதான பற்றுதல் வாலிபத்தைக் கொண்டாடுகிற விட்டேற்றி மனோபாவத்தின் இலக்கற்ற பறத்தல் கணங்கள் எனத் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படமாகவும் நகைச்சுவைப் படமாகவும் இன்னிசைப்படமாகவும் ஆண்பாவம் வெவ்வேறு பட்டியல்களில் நிரந்தர இடம் பற்றியிருப்பது அதன் மேன்மையைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

ஆண்பாவம் திருவிழா மனநிலை

முந்தைய தொடர்: http://bit.ly/2lW1ikc