ஆசிரியர் தினத்தையொட்டி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
 கடந்த 2018-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த ஆசிரியர்களாக 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மூலம் இந்த தேர்வுப்பணி நடைபெற்றது.
தமிழகத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோபிச்செட்டிப் பாளையம் டைமண்ட் ஜுப்லி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.மன்சூர் அலி, கரூர் கே.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆர்.செல்வ கண்ணன் ஆகியோர் தேர்வு பெற்றனர். புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் கூனிச்சம்பேட் பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் எஸ்.சசிகுமார் தேர்வு பெற்றார்.
இதில் மாணவர் சேர்க்கை, சிறப்பு வகுப்புகள் போன்ற செயல்பாடுகளுக்காகத் தலைமை ஆசிரியர் செல்வ கண்ணனும், முப்பரிமாண வரைபடம், சுவரோவியம், மரக்கன்றுகள் உற்பத்தி போன்ற செயல்பாடுகளுக்காக ஆசிரியர் மன்சூர் அலியும் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, சிறந்த ஆசிரியர்களுக்கான விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பிரதமர் மோடி நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். விழாவில் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, “அறிவு வளமும் நன்னெறிகளும் கொண்டதாக நம் நாடு திகழ்கிறது. ஆனால் தாராள மயமாக்கல் மற்றும் போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் செயற்கை அறிவாற்றலுக்கும் கருணை உணர்வுக்கும் இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. நம் நாட்டை கட்டமைத்திட இது அவசியமாகும். இது, நம்மை அறிவாற்றல் மிக்கவர்களாக மாற்றுவதுடன் சிறந்த மனிதர்களாகவும் மாற்றுகிறது” என்றார்.