சமூக வனத்தில் மனித இருத்தலில் அடையாள உணர்வின்றி உயிருடன் இருப்பதற்கான உணர்தல் இல்லை

-எரிக் எரிக்சன்

கடவுள் உன் கண்ணெதிரே வந்தால் நீ என்ன வரம் கேட்பாய் என்று சிறுவயதில் பள்ளியில் ஒரு பிரமாதமான வினாவைக் கேட்பார்கள். இப்படியான வினாக்கள் விடையை நோக்கியவை அல்ல வினவுதலின் இன்பம் முக்கியமானது. விகே.ராமசாமி பண்பட்ட நடிகர். சிறுவயதிலிருந்தே நடிப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவர் அவர் தயாரித்த ருத்ரதாண்டவம் தமிழின் அபூர்வமான அங்கத வகை சினிமாக்களில் இடம்பெறத்தக்க ஒன்று.

கே.விஜயன் இயக்கிய இதன் கதை, வசனங்களை ஏ.வீரப்பன் எழுதினார். நாகேஷ் பொன்னம்பலம் ஏழைப்பூசாரி. சிவன் கோயிலே கதியென்றிருப்பவர். ஒரே மகளுக்குத் தன் அண்ணன் மகனைத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டுமென்பதே திருமதிக்கு லட்சியம். அவர்கள் பெறாத பிள்ளை வாஞ்சி. கனகசபையும் தர்மகர்த்தாவும் பழைய கூட்டு புதிய பகை. இருவருமே வெவ்வேறு விதங்களில் சட்டவிரோதமாய்ப் பிழைப்பு நடத்துபவர்கள். அவர்கள் தந்த பணத்தில் கோயில் திருப்பணி நடக்கிறது. அந்தக் கோயில் சிற்பங்களைப் புனர்வண்ணம் பூசுவதற்காக வருபவன் ரவி. அவனுக்கும் பூசாரி மகளுக்கும் காதலாகிறது. தன் மகள் திருமணத்துக்கு எப்படியாவது உதவ வேண்டுமென்று சிவனை வேண்டுகிறார் பூசாரி. அவர் திருமதியோ தர்மகர்த்தா மகனோடு சேர்ந்து கோயில் நகைகளைக் கொள்ளை அடிக்க சாவியைக் கொடுத்து உதவுகிறாள். அவன் தந்த பத்தாயிரம் ரூபாயைக் கொண்டு கனகசபையின் உதவியாளன் வரதன் போக்கிரி. கிராம்பு கடத்தி வரும் லாரியை போலீசுக்கு பயந்து பாதி வழியில் நிறுத்திவிட்டுத் தப்பி வருகிறான்.

“நீ என் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதை யாராச்சும் பார்த்தாங்களா”

“நா என்னிக்குங்க நேர் வழியில வந்திருக்கேன். பின் வழி குழாய்ல பூந்து இப்டி தானே வந்திருக்கேன்.”

திடீரென்று அழுகிறான் தன் எட்டு முழ வேட்டியை லாரி ஸ்டேரிங் பின்னால் வைத்திருப்பதாக சொல்லி கலங்குபவனை அதட்டுகிறார் கனகசபை

“அய்யய்யோ அதுல சலவைக்குறி இருக்குமேடா”

“நா என்னிக்குங்க சலவைக்கு போட்டேன்”

“ஹப்பா உனக்கு பதினாறு முழம் வேட்டியே வாங்கித் தரேன். கடசீ வரைக்கும் லாரியும் கிராம்பும் நம்மளது இல்லைன்னு சாதிச்சுடு”
என்று சொல்லி விட்டு திரையைப் பார்த்து

“எந்த நேரமும் குப்பு குப்புன்னு வேர்க்க விடுறீங்களே தவிர காயவே விடமாட்டேன்றீங்களேடா” என்பார் தேங்காய். சுருளியும் அவரும் சேர்ந்து நெடுங்காலம் ஓடியிருக்க வேண்டிய இணைப்புரவிகள் பாவம் சொற்பகாலமே வாழ்ந்தார் சுருளி.

சிவனிடம் வந்து வரதன் கனகசபை தர்மகர்த்தா என எல்லா சுயநலவாதிகளும் வேண்டிக் கொள்கின்றனர். எல்லா வேண்டுதல்களுமே சுயநலப் பாடல்களாகவே இருப்பதை வியக்கிறார் பூசாரி.

தன் மகளுக்கு வரதட்சணையாக பத்தாயிரம் ரூபாய் தேவை என ஊரில் இருக்கிற செல்வந்தர்கள் ஒவ்வொருவராய்க் கேட்கிறார். எல்லோருமே மறுத்தும் இகழ்ந்தும் விரட்டி விடுகின்றனர். பூசாரி பொன்னம்பலம் மனம் துவளுகிறார். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு சொன்னாங்களே இப்படி ஒரு மரத்தையும் வச்சிட்டு தண்ணி ஊத்தாம இருக்கியே இது நியாயமா ஆண்டவனே என சிவன் முன்னால் கலங்குகிறார் பூசாரி. இதுவரைக்கும் வெளில இருக்கிறவன்தான் விவரமில்லாம கேட்டுக்கிட்டிருந்தான்னா இப்ப உள்ள இருக்கிற நீயே எப்ப என் மூணு கண்ணும் அவிஞ்சா போச்சு அப்டின்னு கேட்டியோ இனியும் நான் பதில் சொல்லாம இருந்தா சரியா இருக்காது என்றபடியே அவர் முன் தோன்றுகிறார் சிவன் யாரு பரமசிவனா பேசுறது என்று வியக்கும் பூசாரியிடம் பின்ன பாபநாசம் சிவனா பேசுறது என்று எதிரடிக்கும் சிவன் தோன்றிய பிறகுதான் படம் வேறு தளத்தில் பயணமாகத் தொடங்குகிறது.

“எனக்கும் பொருளாதாரத்துக்கும் என்னய்யா சம்மந்தம்” எனக் கேட்கும் சிவன், அப்ளாஸ்களை அள்ளுவாரா மாட்டாரா..?

“உன் பொண்ணு கல்யாணாத்துக்கு யாராவது அறிஞ்சவன் தெரிஞ்சவங்கிட்டே போயி காசு கேக்குறதை விட்டுட்டு எங்கிட்ட வந்து அளுதா நா என்ன கோயிலுக்கு பின்னால பேங்க்கா வச்சு நடத்திட்டு வர்றேன் என் உண்டியல்ல கூட நீங்கதானேய்யா பணத்தை போடுறீங்க அதுவும் கள்ளப்பணம் நா எடுத்து பார்க்கவா போறேன்ற தைரியம்” என்று கோபமாகிறார்.

“உன் பிரச்சினை பத்தாதுன்னு அன்னிக்கு அந்த கனகசபை வந்து உடம்பு கெட்டுப் போச்சுன்றான். அதுக்கும் காரணம் என் திருவிளையாடல்னு நீ சொல்றே… ஏன்யா அவன் உடம்பு கெட்டுப்போனதுக்கு அவன் திருவிளையாடல் காரணமா இல்லை என் திருவிளையாடல் காரணமா..?”

இந்த ரேஞ்சில் சிவனும் பூசாரியும் ஃப்ரெண்டாகின்றனர். பூசாரிக்கும் சிவனுக்கும் இடையே நிகழும் உரையாடல்களின் வழியாக யதார்த்தம் அழகாக வெளிப்படுகிறது.

கனகசபை தோற்றுவிடுகிறார். மாரப்பன் ஜெயித்து விடுகிறார்.

இந்த ஒரு காட்சியைப் பார்க்கலாம்

தோல்வி விரக்தியில் இருக்கும் கனகசபையைத் தேடி வருகிறான் வரதன்.

வரதன்: நான் தாங்க வரதன் உங்க தொண்டன் ரசிகன்

கனகசபை: நீயாடா வரதா கலங்கியபடி நான் தோத்துப்போனதைப் பார்த்து ரசிக்க வந்திருக்கியா

வரதன்: நீங்க தோத்துட்டீங்க. ஆனா உங்க கொள்கை ஜெயிச்சிடுச்சே.

கனகசபை: கொள்கை ஜெயிச்சிடுச்சா தன் கையிலிருக்கும் நாளிதழைத் தூர எறிந்தவாறே அதெப்படி?

வரதன்:என்னுடைய கொள்கையே நாட்டுல இருக்கிற பிச்சைக்காரங்களை ஒழிக்கிறதுதான். என்னுடைய கொள்கையைப் பின்பற்றும் ஒவ்வொருத்தரும் கடேசி மூச்சு இருக்கும்வரை பிச்சைக்காரர்களை ஒழித்தே தீருவோம் அப்டின்னு சபதம் எடுக்க சொல்லி அன்னிக்கு எலக்சன் மீட்டிங்குல மைக்க தட்டி சத்தியம் பண்ணிங்களே மறந்திட்டீங்களா..?

கனகசபை: அதை தட்டினா தாண்டா திருப்பித் தட்டாது தேர்தல் காலத்துல ஓட்டு வாங்குறதுக்காக சிலதை கொள்கைன்னு சொல்லவேண்டியது தான்.
தோத்த உடனே விட்டுற வேண்டியது தான்.இப்ப என்னான்ற நீ.?

வரதன்: இந்தா பாருங்க. உங்க கொள்கையை அவ்ளோ சாதாரணமா நெனக்காதீங்க.பிச்சைக்காரங்களை ஒழிக்கிறது நல்லதுன்னு எனக்கும் பட்டது.

கனகசபை: டேய் நொந்துபோயிருக்கிற நேரத்துல பட்டுது தொட்டுதுன்னு சொல்லாதே வெவரமா சொல்லுடா

வரதன்:முழுசா கேளுங்க முந்தா நாள் ரெண்டாவது ஆட்டம் சினிமா பாத்திட்டு வந்திட்டிருந்தேன்.நம்ம குண்டுப் பிள்ளை சத்திரத்துல ரெண்டு பிச்சைக்காரங்க படுத்து தூங்கிட்டிருந்தாங்க.அவங்களைப் பார்த்த உடனே உங்க ஞாபகம் தான் வந்துது. இதைச் சொன்னதும் உடனே குனிந்து தன்னையே உற்றுப் பார்த்துக் கொள்வார் தேங்காய். ஏண்டா

வரதன்: உங்க கொள்கை ஞாபகத்துக்கு வந்தது.இடுப்பில இருந்த கத்தியை எடுத்தேன். சதக் சதக் ஏத்தி இறக்கிட்டேன். கடைசி மூச்சு இருக்கும் வரை அப்டின்னு நீங்க சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஓடிப்போய் அவங்க மூக்குல கைய வச்சிப் பார்த்தேன். கடைசி மூச்சி இல்லே வந்திட்டேன்

அடப்பாவி என்று வெகுண்டு எழும் தேங்காய் தன்னை மெல்ல ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு வாசற்கதவை எல்லாம் மூடி விட்டு மறுபடி வந்து உள் ரூமைப்பார்த்து சாந்தமாக வீரைய்யா என வேலைக்காரனை அழைத்து வீரய்யா நாங்க முக்கியமான விஷயம் பேசப்போறோம்.நீ இங்க வரவே கூடாது என்று அமைதியாக சொல்லிவிட்டு பயம் அடங்காதவராய் போடா உள்ளே என்று கத்துவார் தேங்காய்.சிரிப்பில் வயிறு கிழியாவிட்டால் அது வயிறல்ல ரப்பர்.
மீண்டும் வரதனை நெருங்கி வந்து நீயாடா அந்தக் கொலையைப் பண்ணே என்பார் நம்ப மாட்டாமல்

வரதன்: ஆமாங்க இப்பிடி தெனம் ரெண்ரெண்டு பிச்சைக்காரங்களையா ஒழிச்சிட்டிருந்தம்னா கூடிய சீக்கிரத்துலயே நாட்ல உள்ள பிச்சைக்காரங்களையெல்லாம் ஒழிச்சிரமாட்டமா..?அப்டின்னு ஒரு நம்பிக்கை ஒரு தேசப்பற்று என்பார் அசால்டாக. அதைக் கேட்டு சீப்போ என்று குமுறும் தேங்காயிடம்

வரதன்: என்னாங்க பேப்பரைப் பார்த்தா சத்திரத்தில் ரெட்டைக்கொலை மர்ம ஆசாமியைப் போலீஸ் தேடுகிறது அப்டின்னு போட்டிருக்குதுங்க..எனும் சுருளி இப்போது மட்டும் தன் முகத்தைக் கோணிக்கொண்டு அழுகிறாற் போலாகி நாய் வேற தேடுதாம் என்றபடியே உடனே சகஜமாகி தலைமறைவா திரிஞ்சுகிட்டிருக்கேங்க..ஏங்க போலீஸ்காரங்க வந்து கேட்டா என்னங்க சொல்ல? நீங்க தான் பிச்சைக்காரங்களை ஒழிக்க சொன்னீங்க நான் ஒழிச்சேன்னு சொல்லிடலாம்களா? இதைக் கேட்டு வரதனையும் அடிக்க முடியாமல் தன் தலைமுடியை கிட்டத் தட்ட பிய்த்துக் கொண்டவாறே சட்டையைக் கசக்கிக் கொண்டு ” பிச்சைக்காரங்களை கத்தியால குத்தியாடா ஒழிக்க சொன்னேன். பிச்சையெடுக்கிற நெலமையை தாண்டா ஒழிக்க சொன்னேன்.ரெண்டு பேரைத் தீர்த்துக் கட்டிட்டு சர்வசாதாரணமா வந்து நிக்கிறியேடா பாவி” என்றதும்

கோபமாகும் வரதன் இப்பிடி மாறி மாறி பேசுனீங்கன்னா எனக்கு பிடிக்காது ஆமாம்.முந்தி என்னாய்யா சொன்னே தன் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டவாறே குடிசையெல்லாம் ஒழிக்கணும்னு சொன்னே ஒரு குடிசை விடாம தீய வச்சிக் கொளுத்துனேன்.இப்ப பிச்சைக்காரங்களை ஒளிக்கணும்னு சொன்னே இப்பத் தான் ஆரம்பிச்சிருக்கிறேன் வேலையைக் குடுக்கிறது செய்யவிடமாட்டேங்குறது என்னய்யா அர்த்தம் என்று வேகம் செய்வார்.

கனகசபை: டே நான் தோத்ததும் இல்லாம என்னைய தலைமறைவா இருக்க சொல்றியா?இப்பத்தான் நான் ஏன் தோத்தேன்னே புரியுது.எல்லாமே புரியாத தொண்டனுங்க. என்றபடியே பத்தாயிரம் ரூபாயைத் தந்து டெல்லிக்கு போயிடு என்று அனுப்பி வைப்பார் வரதனை.

தேங்காய் ஸ்ரீனிவாசன் சுருளிராஜன் இருவருமே தானாய் மலர்ந்த சுயமலர்கள்.ஒருவரை ஒருவர் விழுங்கி விடக் கூடிய திறமைச்சர்ப்பங்கள். இந்தப் படம் இருவருடைய உக்கிரமான நடிப்பாற்றலுக்கு ஒரு உதாரணம். நெடுங்காலம் இருந்திருந்தால் எத்தனையோ நல்ல நல்ல வேடங்களை செய்தளித்து உலகை இன்னும் பூவனமாக்கித் தந்திருக்க வேண்டிய அரிய ஆளுமைகள். பாதியில் அணைந்த தீபங்கள். சுருளி நாற்பத்தி இரண்டே வயதில் காலமானவர் என்பது வெறும் தகவல் அல்ல. திரைக்குப் பேரிழப்பு

வீகேராமசாமிக்கும் சுருளிக்கும் இடையே நடைபெறக் கூடிய முரண்சண்டைகள் இன்னும் ரசிக்கவைத்தன. இந்தப் படத்தின் நிச நாயகன் என்று தாராளமாக சுருளிராஜனை சொல்லலாம். மீவுரு செய்யமுடியாத அற்புத நடிகர் அவர்.

சிவன் தன் வருகையை நிறைக்கும் வரை அவர்களுக்கெல்லாம் என்ன நடக்கிறது என்பது தான் ருத்ரதாண்டவத்தின் கதை.விஜய்குமார் ராதாரவி எம்.ஆர்.ஆர் வாசு நாகேஷ் எனப் பலரும் நடித்திருந்தாலும் இந்தப் படம் நாகேஷூக்கும் வீ.கே.ராமசாமிக்குமான காம்பினேஷன்கள் வீ.கே. ஆர் சுருளி இணையும் காட்சிகள் மற்றும் தேங்காய் அண்ட் சுருளியின் அதகளம் என மூன்று லேயர்களாக முக்கியத்துவம் பெறுகிறது. வசனபூர்வ அங்கதம் சிரிப்பதற்கு மாத்திரம் அல்ல சிந்திப்பதற்குமானது. இந்தப் படம் தன்னளவில் புவியில் மனிதனின் பொறுப்பும் துறப்புமாக பல முக்கிய விசயங்களை அலசியவகையில் முக்கியமான படமாகிறது.எம்.எஸ்.விஸ்வநாதனின் நல்லிசை இசை படத்திற்குத் துணையாய் நின்று ஒலித்தது.

ருத்ரதாண்டவம் ஆனந்த ஊற்று

முந்தைய தொடர்: http://bit.ly/2mnD1nu