2005 ஆம் ஆண்டு  தமிழகத்தையே புரட்டிப் போட, அரசியல் களத்தையே மாற்றிப்போக, தமிழகத்தின் புதிய உதயம் என எண்ணற்ற எதிர்பார்ப்புகளோடு அரசியலை ஆள புதிய உத்வேகத்தோடு செப்டம்பர் 14 ல் மதுரையில் பிறந்தது தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

சரியான நிலைப்பாடும் நிலையான கொள்கையும் இல்லாமல், அரசியலில் நான் மட்டுமே தூய்மையானவன் என்று தானே பிரகடனபடுத்தி  பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளால்,! அடுத்த முதல்வரே இவர்தான் எனவும், ஏன்.! அடுத்த பாரத பிரதமரே இவர்தான் என தமிழக மக்களை திக்குமுக்காட வைத்து திணறடிக்க வைத்தனர் விஜயகாந்தின் கட்சியினர். அணுகுண்டு புஸ்வாணமாகிப்போன ஆன கதை போல சிலகாலம் ஊடகங்களின் சிரிப்புச் செய்திப் பசிக்கு திகட்டாத தீனியாகவும், மீம்ஸ் கிரியேட்டர்களின் சமூக ஊடகங்களுக்கு  தினந்தோறும் அளவில்லா கருத்துக் களஞ்சியத்தை.! அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்றால் அது மிகையாகாது தான்.

இந்திய அரசியலில் வரலாற்றில் சட்டமன்ற அவையில் அதுவும் மாநில முதல் அமைச்சர் அவர்களையே விரல் நீட்டி பேசி மிரட்டிய முதல் எதிர்க்கட்சித் தலைவர் என பழுத்த அரசியல்வாதிகளே  வியந்து பாராட்டும் அளவிற்கு எதிர்க்கட்சித் தலைவராக கர்ஜித்து சட்டமன்ற பணியாற்றியவர் விஜயகாந்த்.!

இன்று அவர் ஒரு அரசியல் பிம்பமத்தின் மாயத் தோற்றம் எனவும், தமிழக அரசியல் பாலைவனத்தில் தேமுதிக கானல் நீர் என்ற அத்தியாயத்தோடு அந்தி வேளையில் மறைந்து கொண்டிருக்கிறது என உட்கட்சி தொண்டர்களே உளறி பிதற்றும் அளவிற்கு, பனிக்கட்டியாக சிதறி ஓடுகிறது தேமுதிக. அரசியல் எனும் சமுத்திரத்தில்.

அரசியல் கட்சி ஆரம்பித்த உடன் முதல் முழக்கமாக திமுகவின் குடும்ப அரசியலையும், வாரிசு அரசியலை கடுமையாக விளாசிய விஜயகாந்த். தற்போது தனது குடும்பத்தின் ஆதிக்கம் முழுமையாக தனது கட்சியையே ஆக்கிரமித்துள்ளதை மறந்துவிட்டார் போலும்.
கட்சி ஆரம்பித்த அடுத்த வருடம் சட்டமன்ற உறுப்பினர்,  அதற்க்கடுத்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என அளவளாவிய முன்னேற்றத்தின் உச்சிக்கு சென்ற விஜயகாந்த்,  எந்த குடும்ப அரசியலை எதிர்த்தாரோ அதே குடும்ப அரசியல் ஆளுமைகளால் இன்று அதிரிபுதிரியாக அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் அவரும் அவரது கட்சியும் ஒன்று சேர்ந்த குடும்பத்தோடு.

எண்ணற்ற பல தியாகங்களை செய்த கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் நாம் எதற்காக இந்த கட்சியில் இருக்கிறோம் என திக்குத்தெரியாமல் கேப்டன் விஜயகாந்த் என்ற ஒரு வார்த்தைக்காகவே இன்று வரை அந்தக் கட்சியிக்கு கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தங்கள் சுய கௌரவத்தை கூட விட்டுக் கொடுத்துக் கொண்டு கட்சியில் பயணிக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இருந்தாலும் அரசியல் கட்சியை வழிநடத்த சினிமா ஞானத்தை விட அரசியல் ஞானமும் அரசியல் அனுபவமும் பெற்று அரசியல் மூச்சான பேச்சுத்திறமை, ஆளும் திறமை என பன்முக திறமைகளை ஆள தகுதி இன்னமும் கேப்டன் விஜயகாந்த் இருக்கு வரவில்லை என்பது கூட நிதர்சனம் தான்.

அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு கண்ணீர் விட்டு அழுத விஜயகாந்த்தைப் பார்த்து நாடே அனுதாபப்பட்டது. இவர்தான் உண்மையான அரசியல்வாதி, இவர்தான் மக்களுக்கான தலைவர் என எதிர்க் கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் கூட ஆளாளுக்கு ஆதரித்த ஒரு தலைவர் இன்று அரசியலின் அரிச்சுவடியில் இருந்தே விலகிக் கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

திமுக தலைவர் கலைஞர் அவர்களின் மறைவின் போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட ஒரு வீடியோவில் கண்ணீர் விட்டு கதறி அழுத விஜயகாந்தை பார்த்த திமுகவினர் கூட கலங்கிப் போயினர்.

.
இந்த தேர்தலில் விஜயகாந்த் சுயமாக முடிவு எடுத்து இருந்தால் கண்டிப்பாக திமுக கூட்டணியில் தான் சேர்ந்து இருக்க வேண்டும்.அப்படி தேமுதிக திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் பட்சத்தில் விஜயகாந்தே எதிர்பார்த்திராத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று நாடாளுமன்ற தொகுதிகளை தேமுதிக ஆச்சரியமாகக் பெற்றிருக்கும்.தமிழக அரசியலில் மட்டுமே மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்த தேமுதிகவின் அரசியல் அரிச்சுவடி இந்திய அரசியலிலும் ஒரு அங்கமாக பதிந்திருக்கும்.

வந்த வாய்ப்பை குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டால் அழகாக நழுவவிட்டிருக்கிறார் தேமுதிக தலைவர்.
பல காலமாகவே தேமுதிகவின் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், தேர்தலின் சமயத்தின்போது மட்டும் கூட்டணிக்காகவே பல கட்சிகளோடு இணைகிறார்கள் எனவும்,   விஜயகாந்தின் குடும்ப உறுப்பினர்களான அவரது மனைவி மற்றும் அவரது மைத்துனரின் குரல்கள் மட்டுமே கட்சியில் ஓங்கி ஒலிக்கிறது எனவும், மற்ற யாருக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என பலர் கூறி வந்தாலும் அரசியல் விமர்சகர்களின் பார்வையும்  மேற்கண்ட கருத்தினை ஒத்தே இருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக. பிரச்சார மேடைகளில் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு  உரிய அங்கீகாரம் கொடுக்காமலும். மேலும் பிரச்சார மேடைகளில் அதிகப்பிரசங்கித்தனமான வார்த்தைகளை உபயோகப் உபயோகப்படுத்திதாலும் கேப்டன் விஜயகாந்தின் மேடைப் பேச்சுக்கள் உற்சாகம் இல்லாத  தொண்டர் கூட்டங்களால் குழுமியிருந்தன. திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மக்கள் நலக் கூட்டணியை அமைத்து தானும் தோற்றதோடு தமிழகத்தில் தன் செல்வாக்கை இழக்க தொடங்கி கட்சி பலவீனபட்டதோடு அல்லாமல் அவரின் உடல்நிலையும் பலவீனமடைய செய்த பிரேமலதா கட்சியை முழுவதுமாக தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
அந்த ஆண்டு பிரச்சாரங்களில் விஜயகாந்தை விட அனைத்து பொதுக் கூட்டங்களிலும் வீரமுழக்கமிட்டவர் அவரின் மனைவி பிரேமலதா.

கேப்டன் முதல்வரானால் அந்தரத்தில் ஆகாயக் கோட்டை கட்டுவோம். அந்த வழியாக நிலவிற்கு பாதை அமைப்போம் என வார்த்தை ஜாலங்களால் வண்ணக் கோலங்களை போட்டாலும்,கட்சியின் தலைவரான விஜயகாந்தின்  குரல் பின்னோக்கியே பயணப்பட்டது. அதன் காரணமாக 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 7.88 சதவிகிதம் வாக்குவங்கியை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த தேமுதிக,  2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெறும் 2.4 சதவிகித வாக்குகளை பெற்றது. கிட்டத்தட்ட ஐந்து சதவீத ஓட்டு வங்கியை இழந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட பெற முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் இன்று அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் அனைத்து கட்சியினரும் தங்களின் கூட்டணி உடன்படிக்கையை அதிரிபுதிரியாக அமர்க்களப்படுத்தி கொண்டிருக்க. ஆகச்சிறந்த அறிஞர்களைப் போல. மீண்டும் தேமுதிகவில் தனது குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளே முன்னோக்கி இருப்பதால் விழிபிதுங்கி இருக்கிறார் கேப்டன்.கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் இருமுனை விருப்பமாகவே பயணப்படுகிறது தேமுதிகவில்.

கட்சியின் அடிமட்ட உறுப்பினரிலிருந்து மாவட்டச் செயலாளர்கள் வரை திமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்றும். அதேவேளையில் பிரேமலதா மற்றும் எல் கே சதீஷ் இவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என தலைவருக்கு நிர்ப்பந்தம் கொடுக்க, வேறு வழியில்லாது குடும்ப உறுப்பினர்களுக்கே தனது ஆதரவைத் தந்து அவர்களுக்கே கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன்படி நேற்று அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 பாராளுமன்ற தொகுதிகள்ஒதுக்கப்பட்டிருக்கின்றன.ஆரம்பத்திலிருந்தே தேமுதிகவை கண்டுகொள்ளாத அதிமுக பாஜக வின் அழுத்தினாலே மேற்கண்ட நான்கு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது.
எந்த ஒரு கட்சியின் தலைவரை பார்த்து விரல் நீட்டி சட்டசபையிலேயே மிரட்டி ரணகளப்படுத்தினாரோ. இன்று அதே கட்சியுடன் இணைந்து கூட்டாக பயணிக்க போகிறார்களாம்.

ஆக தேமுதிக என்னும் கட்சியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் தான் என்ன.?

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தேமுதிகவின் அவைத்தவைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட 10 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பிரித்து விஜயகாந்த் கட்சியையே உடைத்தாரே.!

அத்தோடு நில்லாமது விஜயகாந்தை சட்டசபையிலேயை அசிங்கபடுத்தி தேமுதிகவை வலுவிழக்க செய்ய முயன்றாரே.!
அவர்கள் உடனே மறுபடியும் கூட்டணி என்று ஆதங்கப்படுகிறார்கள் கட்சியின் தொண்டர்கள்.

கடந்த 8 ஆண்டுகளாக ஆளுங்கட்சியின் அவலங்களை தமிழகத்தின் உதிரி கட்சிகள் கூட கண்டன அறிக்கைகளாக தினம் தினம் வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, மீத்தேன், ஆசிரியர்கள் போராட்டம், 8 வழி சாலை போராட்டம் இன்னும் ஆயிரமாயிரம் அவலங்கள் தமிழக அரசில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இது பற்றி இதுவரையில் வாய் திறந்து ஒரு எதிர்ப்பு அறிக்கை கூட விடாத தேமுதிகவா மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்திருக்கும்? என தன் கட்சி தொண்டர்களே புலம்பும் அளவிற்கு மிரட்சியுடன் பயணிக்கிறார் கருப்பு எம்ஜிஆர் புரட்சி கலைஞர்.

எப்படி இருந்தாலும் கிடைத்த இந்த நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியின் சீட்டு தனது மச்சானுக்கு நிச்சயம்.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற கதை போல.
கம்பீரமாக நின்று தமிழக அரசியலின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டிய  ஒரு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்,கோடிகளில் பணமும் கூடுதல் இடமும் கேட்டு அதிமுக திமுக என ஒரே நேரத்தில் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி கட்சியை ஏலம்விடுகிற நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியதுதான் இன்றைய நிதர்சனம் என ஒன்று இரண்டு சீட்டுக்காக ஒவ்வொரு கட்சியின்  அலுவலகங்களாக ஏறி இறங்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

எண்ணற்ற சில சாதனைகளையும் பல வேதனைகளையும் அனுபவங்களாக கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் களம். அதிமுக பாஜக கூட்டணி வடிவில் தேமுதிகவிற்கு கசப்பான மருந்துகளையே தினம் தினம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.இந்த மருந்து மருத்துவப் படுக்கையில் கிடக்கும் தேமுதிகவை பலப்படுத்துமா.! அல்லது இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லுமா என்பதை இந்த தேர்தலின் முடிவில் பதில் சொல்ல காத்திருக்கிறார்கள் அரசியல் கட்சிகளின் எஜமானர்களான மக்கள்.

ஒட்டுமொத்தத்தில் தான் ஆரம்பித்த கட்சியை தானே வீழ்த்த வியூகம் வகுத்துக் கொண்டு பக்குவமாக பயணப்படுகிறார் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.