(இங்கு நான் காதலி பற்றி சொல்வதை அப்படியே காதலனுக்கும் பொருத்தலாம்.)
காதல் தோல்வி அடைந்தாலோ, காதலியை இழந்தாலோ நாம் அழுது வடிப்போம், மன அழுத்தத்தில் மௌனமாவோம், குடி உள்ளிட்ட போதைகளில் ஈடுபடுவோம், சிலர் வீட்டைவிட்டு வெளியே வராமல் டிவி முன்பே பழியாகக் கிடப்பார்கள், சிலர் இலக்கியம், இசை, வேலை என மனத்தை திசைதிருப்ப முயல்வார்கள், சிலர் மனநல சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள், சிலர் தற்கொலைக்கு முயன்று தோல்வி அடைந்து ஐயோ இதிலும் தோல்வியா என நொந்து போவார்கள், சிலர் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டு மனத்தை தேற்ற முயல்வார்கள், சிலர் புத்திசாலித்தனமாக ஒரு திருமணம் செய்து கொள்வார்கள், சிலர் காதலியின் பெயரில் நாய், பூனை வளர்ப்பார்கள், மேலும் பலர் பேஸ்புக்கிலே குடியிருப்பார்கள் – இப்படி எத்தனை எத்தனையோ வழிமுறைகள், பதிலீடுகளை காதலிக்கு வைத்திருக்கிறோம். ஆனால் அனைத்துமே உங்களை நடுத்தெருவில்தான் கொண்டு போய்விடும். ஏனென்றால் ஒரு காதலிக்கு மாற்று மற்றொரு காதலி மட்டுமே.
ஆகையால் காதல் முறியும்போது அடுத்த நாளே அல்லது அதற்கு அடுத்தநாளே மற்றொரு காதலியை தேடத் தொடங்க வேண்டும். ஆறுதலுக்காக அல்ல. வாழ்க்கையை தொடர்வதற்காக சொல்கிறேன். ஏன் முன்னாள் காதலியின் நினைவில் வாழலாகாதா? அதுவல்லவா உண்மையான காதல்?
நிச்சயமாக இல்லை. அது ஒரு கற்பிதம். நிஜமான வாழ்க்கை என்பதை தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பது. ஏன் மற்றொரு காதலி இல்லாமல் வாழ்க்கையை தொடரக்கூடாதா? முன்னாள் காதலி தந்த காயங்கள் போதாதா? ஒரு தடவைபட்ட செருப்படி பத்தாதா? இன்னொருமுறை வேறு அடிபட வேண்டுமா? ஆம், போதாது. இதில் கூச்சமே பார்க்கக்கூடாது. ஏனென்றால் மனிதனுக்கு வேறு வழியில்லை.
உங்கள் வாழ்க்கையில் ஒரு காதலி இருந்தால் அந்த இடத்தில் மற்றொரு பெண் அவள் போன பிறகு வந்தாகவே வேண்டும். அல்லாவிடில் அந்த இன்மை ஒரு புண்ணாக உங்களை தொந்தரவு பண்ணிக்கொண்டே இருக்கும். மனம் அவளை / அவளது பதிலியை நாடிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் இந்த தேடலின் சுவாரஸ்யத்தில் நிஜ காதலை அடையாமல், எந்த பெண்ணிடமும் நிலைக்காமல், பலரிடம் கடலை போட்டு அலைந்துகொண்டே இருப்பீர்கள். ஆனால் இயல்பான நிறைவான வாழ்வு என்றால் அந்த இன்மையை ஒருத்தி வந்து நிறைவு செய்தே ஆக வேண்டும், அதுவும் உடனே வேண்டும்.
வள்ளுவர் காமத்துப் பாலில் ஒரு குறளில் காதலியை காயம் ஏற்படுத்தி அதற்கு மருந்தும் இடுகிறவள் என்பார்.
“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.”
இது ஒரு ஆழமான அவதானிப்பு – அதாவது காதல் என்பது ஒரு அகப்புண். மனிதன் பிறக்கும் போதிலிருந்தே இந்த புண் மிக மெல்லிய ஒரு கீறலாய் அவனுக்குள் தோன்றி விடுகிறது. அதன் பிறகு அவன் வளர வளர புண்ணும் வளர்கிறது. இப்போது அதற்கு மருந்திடுவதற்கு ஒரு பெண்ணை மனம் நாடத் தொடங்குகிறது. அவள் உடலின்பத்துக்கு ஆனவள் என தேகம் சொன்னாலும் நிஜத்தில் அவள் அவன் அகப்புண்ணை ஆற வைப்பவளே. இந்த புண்ணானது அவன் சாகும்வரை முழுமையாக ஆறாது. ஏனெனில் அவன் வாழ்வில் வரும் ஒவ்வொருத்தியும் இந்த புண்ணுக்கு மருந்திட்டபடியே அதை மேலும் அகலப்படுத்துவாள்.
பெண்களைத் தவிர்த்து அவர்கள் இடத்தில் வேறு நாட்டங்களை ஒரு மனிதன் வைக்கும்போது அவன் தன் காயத்துக்கு வலிநிவாரணியை அளிக்கிறான். ஒவ்வொரு இரவும் தூங்கப்போகும்போது அவன் தன் காயத்தை தடவிப் பார்த்துக் கொள்கிறான். வயோதிகத்திலும் பெண்ணாசை மனிதனுக்குத் தீருவதில்லை. காமத்தை நுகர முடியாத போதும் மனம் காதலை நுகர அலைபாயும். அது ஒருபோதும் ஆற வாய்ப்பற்ற ஒரு இன்பச்சாறு ஊறும் காயம்.
காதல் வேறு எந்த அன்பை விட தூய்மையானதாக, பாசாங்குகள் அற்றதாக இருப்பதற்கு காரணம் அது மிக மிக பொதுவானது என்பதே. ஒரு நட்பு சிறப்பாய் அமைய அந்த நண்பர்கள் அன்பான, ஆழமான ஆளுமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால் காதல் சிறப்பாக அமைய ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே போதும் – அவர்களுக்கு அன்பு காட்ட தெரிய தேவையில்லை, அவர்களுக்கு துலங்கும் காத்திரமான ஆளுமைகள் இருக்க வேண்டியதில்லை. காதல் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். காதல் எல்லாரையும் சமமானவரக்ள் ஆக்கிவிடும்; ஏனென்றால் காதலிப்பவர்கள் இடையே வித்தியாசங்கள் இருக்க முடியாது. ‘த்ரிஷா இல்லையென்றால் நயன்தாரா’, ஏனென்றால் இருவருமே ஒன்றுதான், ஒன்றல்லவெனில் நீங்கள் இருவரையுமே காதலிக்க முடியாது.
முன்னவளின் இடத்தில் மற்றொருத்தி வரும் போது சட்டென எல்லா சமநிலைக்குலைவுகளும் முடிவுக்கு வருகின்றன. வெறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. சின்ன சின்ன ஏமாற்றங்களும் தோல்விகளும் எரிச்சலைத் தராமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கோபங்கள் அழகான சமாச்சாரங்கள் ஆகின்றன. எதிர்பார்ப்புகளுக்கு ஒரு பூவண்ணம் வருகிறது. காத்திருப்புகளுக்கு பொறுமையின் புன்னகை பூக்கும் உதடுகள் வாய்க்கின்றன. இப்போது நீங்கள் வாழ்வின் பெரிய சமநிலைக்குலைவுகளை, வெறுமையை, பிரமாண்ட ஏமாற்றங்களை, தோல்விகளை சந்திக்கும் வலுவுடன் கிளம்புகிறீர்கள். ஒரு சின்ன அதிர்ச்சியைக் கண்டு நடுங்குகிறவர் பெரிய நடுக்கங்களை நிதானமாய் எதிர்கொள்கிறீர்கள்.
இதை ஆண்களைவிட பெண்களே நன்றாய் புரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் நமது சமூகமும் அவர்களை தனிமையில் வாழ விடுவதில்லை. ஆகையால் அவர்கள் ஒரு காதல் முறிந்த உடனே மற்றொரு காதலையோ அல்லது அதற்கு ஈடான நட்புகளையோ உருவாக்கி நகர்ந்து செல்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொள்கிறார்கள். அரிதாகவே பெண்கள் (ஆண்களைப் போல) தேங்கி நிற்கிறார்கள். உறவின் தாத்பரியத்தை ஆண்களைவிட பெண்களே நன்றாய் புரிந்து வைத்திருக்கிறார்கள் எனலாம் (இதிலும் விதிவிலக்கு உண்டு என்றாலும்).
அது என்ன?
ஒரு காதலியை நாம் லட்சிய காதலியாக காண்கிறோம். அவளை இழக்கும்போது அவளின்றி வேறில்லை என நினைக்கிறோம் (96 ராம் போல). ஆனால் நம் வாழ்வில் வரும் எல்லா பெண்களும் அடிப்படையில் ஒருவரே, அவர்களுக்கு இடையில் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும். (ஏதோ ஒரு காதலை நாம் உயர்ந்ததாக, தன்னிகரற்றதாக காண காரணம் நம் நினைவுகள் ஏற்படும் மனச்சாய்வுதான். அதே 96 ராமின் மனச்சாய்வு.)
இதை நான் சொல்லவில்லை – வேறொரு சந்தர்பத்தில் டெலூஸ் எனும் பின்நவீன சிந்தனையாளர் தனது Repetition and Difference எனும் நூலில் சொல்கிறார். நம் வாழ்வில் ஒவ்வொன்றையும் நாம் திரும்பத் திரும்ப செய்கிறோம். தினமும் சாப்பிடுகிறோம், தினமும் ஆடை அணிகிறோம், தினமும் யாரிடமாவது ஒரே விதமாக பேசுகிறோம், தினமும் வேலை செய்கிறோம், தினமும் உடல்களை முகர முயல்கிறோம், தினமும் தூங்கி விழிக்கிறோம், ஏன் மாற்றமின்றி இப்படி தினமும் தூங்கி விழிக்கிறோமே என அலுப்புற அதையே செய்கிறோம். உடம்பு இரு சமமான பகுதிகளாக இருப்பதால் எதையும் இரண்டிரண்டாய் ஒரே போல பண்ண வேண்டியுள்ளதே (கால்சராயின் இரு கால்களிலும் உடம்பை நுழைப்பதைப் போல) என கதாபாத்திரம் ஒன்று அலுத்துக் கொள்ளும் ஒரு புனைவை மேற்கோள் காட்டுகிறார். நாம் (முழுமையாக) முந்தி செய்யாத எதையும் பின்னால் செய்ய இயலாது. ஆனால் ஒவ்வொரு முறை திரும்ப செய்யும் போதும் அதில் ஒரு புதுமை வந்து சேர்கிறது.
அதாவது ஒரு தலையில் சூடும் மல்லிகை சரம் என்பது நேற்று அவள் சூடின அதே சரம்தான், ஆனால் அது சற்றே மாறுபட்டதும் தான். அவளது அன்றைய மனநிலை, அன்றைய பருவநிலை, அன்று அவளுடன் உறவாடுகிறவர்கள் அந்த மல்லிகை சரத்தை சற்றே மாறுபட்டதாக, அந்த சின்ன மாறுபாட்டினாலே அதை கூடுதல் அழகானதாக, ரொமாண்டிக்கானதாக மாற்றுகிறது. அந்த பெண் உங்கள் கன்னத்தில் வைக்கும் முத்தம் என்பதும் அப்படியே தான் ஒவ்வொரு முறையும் மற்றொன்றாகவும் அதுவாகவும் தான் இருக்கிறது.
இப்படி ஒன்று திரும்ப செய்யப்படும் போது அது அதே போன்றும், ஆனால் சற்றே வேறுபட்டதாகவும் இருப்பதே repetition என டெலூசால் சொல்லப்படுகிறது. இந்த திரும்ப நிகழ்த்தலில் ஒரு தனித்துவம் அதன் மிகச்சிறிய மாறுபட்ட தன்மையால் (முத்தமிடும் அதே பழைய உதடுகளின் மிருதுவில், ஈரத்தில், வெம்மையில், எச்சிலில், வாசனையில், உணர்வில், வேகத்தில் அல்லது மெத்தனத்தில்) விளைகிறது. இந்த தனித்துவத்தை டெலூஸ் singularity என்கிறார்.
காதலிலும் ஒரே பெண் தான் வேறு வேறு பெயர்களில் நம் வாழ்வில் பல கட்டங்களிலாய் வருகிறாள். அல்லாவிடில் நீங்கள் அவளை “நேசிக்கவே” முடியாது – யார் வாழ்விலும் முழுக்க வேறுபட்ட பெண்கள் வருவதில்லை; ஒவ்வொருத்திக்கும் ஒரு பொதுத்தன்மையும் சின்ன சின்ன வேறுபாடுகளும் இருந்தே தீர வேண்டும். அதுவும் இந்த வேறுபாடுகளும் (தனித்துவங்கள்) இப்பெண்களுடனான நம் உறவாடலில் தோன்றுகிறதே அன்றி அது அவர்களின் ஆதாரமான சுபாவம் அல்ல. (இதனால் தான் ஒருவரால் வெறுக்கப்படுகிற பெண் மற்றொருவரால் நேசிக்கவும் கொண்டாடவும் படுகிறாள்.) ஒரு பெண் காலி செய்த இடத்தை மற்றொரு பெண்ணால் சுலபத்தில் நிரப்ப முடிவது இதனால் தான். நாம் திரும்பத் திரும்ப ஒரே பெண்ணை வாழ்வில் தேடிக் கொண்டே இருப்பதும், அவளை அடைந்ததுமே அது “அவள்” அல்ல என உணர்வதும் இதனால் தான்.
காதலிக்கும் போது நாம் செய்யும் ஒரு தவறையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும் – அழகு / உடல்ரீதியான ஈர்ப்பு எப்போதுமே ஆண்களுக்கு ஒரு முக்கிய அளவுகோலாக இருக்கிறது. இந்த கவர்ச்சியை முதலில் அப்பெண்ணின் தனித்துவம் என எண்ணுகிறோம். ஆனால் அது தன் தனித்துவமில்லை என முதலில் அறிந்து கொள்வது அப்பெண்ணாகவே இருக்கும் – அவள் தன் அழகின் பொருட்டு நேசிக்கப்படுவதையும் அதன் பொருட்டு மட்டுமே நேசிக்கப்படுவதையும் ஒரே சமயம் விரும்பவும் வெறுக்கவும் செய்வாள். தன் உடலழகையும் தாண்டி தான் கவனிக்கப்படவும் நேசிக்கப்படவும் வேண்டும் என ஒரு பெண் விரும்புவது இதனாலே. சிலநேரம் ஒரு பெண் தனது ஆளுமையே தனது தனித்துவம் என எண்ணினாலும் கூட அதற்காக மட்டுமே கூட தான் காதலிக்கப்படுவதை அவள் விரும்ப மாட்டாள், தான் கட்டற்ற ஒரு இருப்பு என்றும் தன்னை ஒரு ஆண் கட்டற்று நேசிப்பதே நியாயம் என்றும் அவள் நம்புவாள். இதன் பொருள் தான் என்ன?
ஒரு பெண் ஒரு தனித்துவமான அழகு எனும் தகுதியுடன் இருக்கையில் அவள் அதுவாக மட்டுமாகி, ஒரு சின்ன வட்டத்துள் அடைபடுகிறாள். ஆனால் அப்போது அவள் ஒரு தனித்துவத்துடனும் இருக்கிறாள். ஆனால் அவள் அதையும் மீறின ஒரு இருப்பாக தன்னை நினைக்கும் போது அவள் பொதுவான, வேறெந்த பெண்ணையும் போன்ற ஒருத்தியாக ஆகிறாள் (அதை அவள் பிரக்ஞைபூர்வமாக கோராமல் இருந்தாலும் கூட). காதலிக்கப்படும் ஒவ்வொருத்தியும் தன் இடத்தை வேறு எவளும் எடுத்துக் கொள்ள முடியும் என உள்ளுக்குள் நம்புகிறாள்; அதை தன் காதலன் ஒவ்வொரு நொடியும் மறுக்க வேண்டும், நிரூபிக்க வேண்டும் என ஏங்குகிறாள். ஏதோ ஒரு கட்டத்தில் அவள் அவனை பிரிய நேரும் போதும் கூட அவள் அதையே நினைக்கிறாள் – அவன் சீக்கிரமே தன் இடத்தில் வேறொத்தியை கண்டடைவான் என்று; ஆனால் அவன் அப்படி செய்யாதிருக்கட்டும் என பிரார்த்திக்கிறாள் (96 ஜானுவைப் போல). இதை ஒரு ஆண் செய்யாத போது அவன் ஒரு பைத்தியம் என அவள் நினைக்கிறாள். அவன் இதை செய்தால் அவள் அவனை பழிப்பாள், ஆனால் அதுவே நியாயம் என நம்பவும் செய்வாள்.
பெண் மனத்தின் இந்த விசித்திரத்தை ஒரு ஆணால் புரிந்து கொள்ள முடிவதில்லை – அது ஆண்களின் பிழை.
இங்கு ஒரு ஆண் புரிந்து கொள்ள வேண்டியது இது – அழகை ரசிக்கலாம், அழகான பெண்ணுடலை அவன் ரசிப்பதில் புலனின்பம் உண்டு. ஆனால் அப்படி ஒரு பெண்ணை, அவள் அழகை ரசிப்பது, அதனடிப்படையில் அவளை மதிப்பிடுவது அவனது காதலுக்கு ஒரு முக்கிய தடை ஆகும்.
எல்லா பெண்களும் அடிப்படையில் ஒருவரே (அன்பாலான பெண்கள், வெறுப்பாலான பெண்கள் எனும் வித்தியாசம் இருக்கலாம் எனினும்.). அழகு பெண்களுக்கு இடையில் ஒரு திரையாக தோன்றுகிறது. பெண்களில் சிலரை நிராகரித்து சிலரை மட்டும் நாட நம்மைத் தூண்டுகிறது. ஆனால் ஒரு ஆண் இச்சையுடன் ஒரு பெண்ணைக் கூடும் போது அங்கு அவளது அழகுக்கு எந்த மதிப்பும் இல்லை. அதாவது நீங்கள் விளக்கை எரிய விட்டு அவளை அணுவணுவாக ரசித்தால் அவளை கூடவே முடியாது. அவளழகை நீங்கள் மறுக்கும், மறக்கும் நொடியில் இருந்தே அவளுடன் நீங்கள் இணைவது துவங்குகிறது.
ஒரு பெண்ணுடன் நீங்கள் ரசித்து உரையாடி உங்களை மறக்கவும் அழகு ஒரு தடையாகிறது – ஏனெனில் அழகு அங்கு “நான் வேறானவள், தனியானவள்” என கொடி பிடித்து பிரச்சாரம் செய்கிறது. அழகு என்பது ஒவ்வொரு பெண்ணும் அணியும் முகமூடி. அழகு என்பது காதலுக்கும் நமக்கும் இடையில் தோன்றும் மூடுபனி.
ஒரு பெண்ணின் தனித்துவமான ஆளுமைக்கும் இதையே சொல்வேன். வலுவான பெண்ணிய ஆளுமை கொண்ட ஒருத்தியை நீங்கள் நேசிக்கும் போது அந்த ஆளுமையின் தனித்துவமும் ஒரு முகமூடி. அந்த முகமூடியுடன் மட்டுமே நீங்கள் பேசினால் அது உங்கள் காதலை அழித்து விடும்; அப்பெண்ணுக்கும் உங்கள் அன்பு செயற்கையாகத் தோன்றும்.
ஆக ஒரு பெண்ணை இயற்கையான முறையில், எந்த குறுக்கீடுகளும் இன்றி, அறிய அவள் அழகற்றவளாக, தனித்துவமான ஆளுமை இல்லாதவளாக, உறுதியான கருத்துநிலைகள் அற்றவளாக இருப்பது உதவும். அல்லாவிடில் ஒரு பேரழகியையும் அவளது பேரழகை உதாசீனித்து வெறும் பெண்ணாக, ஒரு பொதுவான சாதாரண பெண்ணாகக் கண்டு பழக உங்களால் முடிய வேண்டும். அந்தளவுக்கு மன உறுதி உங்களுக்கு இல்லாவிடில் அழகற்ற, ஆளுமையற்ற பெண்களே நல்ல தேர்வு.
ஒருவேளை காதல் முறிவதற்கே இப்படி தனித்துவங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம்.